Tuesday, October 23, 2007
வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கைப்பற்றி வான்படைத் தளத்தினை தாக்கிய புலிகள்: "டெய்லி மிரர்" நாளேடு
[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007]
அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலையை கைப்பற்றி அதனைக் கொண்டும் வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளதாக கொழும்பு நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டெய்லி மிரர்" நாளேடு வெளியிட்ட முக்கிய பகுதிகள்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படை அதிரடிப்படையினரால் அனுராதபுரம் வான்படை தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் அதிகரிக்கலாம் என்பதற்கான கேள்விக்குறி தற்போதும் தொங்கி நிற்கின்றது.
மிகவும் பலம் வாய்ந்த இத்தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மிக நவீன சாதனங்கள் பெருத்தப்பட்ட
எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி - 01
கே-8 ரக பயிற்சி வானூர்தி - 01 உள்ளிட்ட 3 வானூர்திகள் கடுமையாக சேதமடைந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளின் வானூர்தியை தாக்கும் நோக்குடன் விரைந்த பெல்-212 ரக உலங்குவானூர்தியும் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாக வான்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்தா சில்வா தெரிவித்துள்ளார்.
வான்படைத் தளத்திற்குள் உட்புகுந்த விடுதலைப் புலிகள் அதிகாலை 3:20 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்தனர்.
விடுதலைப் புலிகளுடன் படையினர் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, விடுதலைப் புலிகளின் இரு தாக்குதல் வானூர்திகள் தளத்தின் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
பெல்-212 ரக உலங்குவானூர்தி, கே-8 ரக பயிற்சி வானூர்தி என்பன விடுதலைப் புலிகளின் வானூர்தியை தாக்கும் பொருட்டு அனுப்பப்பட்டன.
எனினும் வவுனியாவில் இருந்து மேல் எழுந்த பெல்-212 உலங்குவானூர்தி மிகிந்தலைப் பகுதியில் உள்ள டொரமடலாவப் பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்தி என எண்ணியே பெல்-212 ரக உலங்குவானூர்தியை தரையில் உள்ள படையினர் சுட்டு வீழ்தியதாக வேறு சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
கண்காணிப்பு வானூர்தி, பயிற்சி வானூர்தி உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வானோடிகள் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட தளத்தில் இருந்த பல கட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.
தளத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொருட்டு விடுதலைப் புலிகள் உந்துகணை செலுத்திகளையும், தாக்குதல் துப்பாக்கிகளையும் அதிகம் பயன்படுத்தியிருந்தனர்.
துப்பரவுப் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை, எனவே இழப்புக்கள் தொடர்பான உண்மையான தரவுகளை தற்போது கூறமுடியாது என அஜந்தா சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மற்றும் மிகிந்தலைப் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 4 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் வான்படைத் தளத்தின் வடக்குப்புறம் உள்ள நுவேராவேவா பகுதியின் ஊடாகவே ஊடுருவி உள்ளனர். அவர்கள் வான் படையினரின் தாக்குதல் சீருடையை ஒத்த சீருடைகளை அணிந்திருந்தனர்.
வானூர்தி ஓடுபாதைக்கு அருகில் இருந்த வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி காவல் நிலை உள்ளிட்ட படையினரின் மூன்று காவல் நிலைகளை விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படை அணி உடனடியாகவே கைப்பற்றியிருந்தது. பின்னர் படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியைப் பயன்படுத்தி உலங்குவானூர்திகள் மற்றும் பயிற்சி வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளனர்.
வானூர்தி தரிப்பிடத்திற்கு அண்மையில் இருந்த வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை ஒன்றும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தளத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதனை உறுதி செய்யும் வண்ணம் சிறிலங்கா வான் படையினரின் வானூர்தி தரிப்பிடங்களை நோக்கி விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி உள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே அனுராதபுரம் வான் படைத் தளத்தின் மீதான தாக்குதல் மற்றும் பெல்-212 உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கியது என்பன தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு சிறப்பு குழுக்களை வான்படை தளபதி றொசான் குணதிலக்க அமைத்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.