Wednesday, October 24, 2007
உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியது யார்?: குழப்பத்தில் சிறிலங்கா படைத்தரப்பு
[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007]
அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-212 ரக உலங்குவானூர்தியை படையினரா அல்லது விடுதலைப் புலிகளா சுட்டு வீழ்த்தியது என்ற குழப்பம் தோன்றியுள்ளதாக என்று கொழும்வு ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்படும் முன்னர் அதன் பிரதான வானோடியான ஸ்குவாட்றன் லீடர் அமில மொகொரி "நான் உயிருடன் திரும்பி வருவேன் என்பது நிச்சயமற்றது. எனவே இந்த சங்கிலியை எனது மனைவியிடம் கொடுத்துவிடு" என்று தனது கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழற்றி தன்னிடம் தந்ததாக அவரின் சக வானோடி தெரிவித்துள்ளார்.
எனினும் தளத்தில் இருந்து மேல் எழுந்த அவரது வானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தளத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள மிகிந்தலையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இந்த உலங்குவானூர்தி வவுனியா வான் படைத்தளத்தை அண்டிய பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கி தாக்குதல் படையினரால் மேற்கொள்ளப்பட்டதா? அல்லது படைத்தளத்திற்கு அண்மையாக ஊடுருவிய விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அனுராதபுரம் வான் படைத்தளத்தின் வான் பகுதியில் பறக்கும் எந்த வானூர்தியையும் சுட்டு வீழ்த்தும் படியும், அரசின் வானூர்திகள் எவையும் அனுராதபுரம் வான் பரப்பில் இல்லை எனவும் கொழும்பு தலைமைப்பீடம் உத்தரவுகளை வழங்கியதாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த வானோடி மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அனுராதபுரம் படைத் தலமையகங்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான தொடர்பாடல்களாலேயே பெல்-212 ரக உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.