Wednesday, October 24, 2007
அனுராதபுர வான் படைத்தள தாக்குதலின் எதிரொலி: இராணுவத்திடம் வான் படைத்தளங்களின் பாதுகாப்பு
[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007]
அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பல வான் படைத்தளங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் வான் படைத்தளத்தின் பாதுகாப்பு கஜபா றெஜிமென்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அனுராதபுரப் பிராந்திய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சனத் கருனாரட்னாவும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி நிலை புதியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கட்டுநாயக்கா வான் படைத்தளத்தின் தரைநிலைப் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்டைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் லக்சிறி அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இரத்மலானை வான் படைத்தளத்தின் பாதுகாப்பு இராணுவத்தின் 11 படையணியின் 2 ஆவது பிரிக்கேட் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் படி அந்த மாவட்டங்களில் உள்ள முப்படையினர், காவல்துறையினர், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் புதிய கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும் அனுராதபுர வான் படைத்தளத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரு விசாரணைக் குழுக்களும் தமது அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இறுதி அறிக்கை ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலேயே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.