Tuesday, October 09, 2007
மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாததே: சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன.!!
[செவ்வாய்க்கிழமை, 9 ஒக்ரொபர் 2007]
யுத்தம் நடைபெறும் ஒரு நாட்டில் மனித உரிமை மீறல்கள் என்பது தவிர்க்க முடியாததுதான் என்று சிறிலங்கா அமைச்சர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
கொழும்பில் "சிறிலங்கா அரச தலைவரின் ஆட்கடத்தல், கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் குறித்து ஆராய்வதற்கான சிறப்புக் குழு"வினர் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜித சேனரத்ன கூறியதாவது:
வல்லரசு நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் அலட்டிக்கொள்வதில்லை. யுத்த சூழல் நிலவுகின்ற ஒரு வளர்முக நாட்டில் ஒப்பீட்டளவில் அரிதாக நிகழ்கின்ற மனித உரிமை மீறல்களை அனைத்துலக அமைப்புக்கள் ஏன் பூதாகரமாகப் பார்க்கின்றன. இது தான் அவர்களது மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலகக் கொள்கையா?
ஈராக்கின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்புக் காரணமாக ஆறாயிரம் ஈராக்கியப் பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர்.
காஸ்மீர் எல்லைப்போரின் போது 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர்.
அவர்களைப் பற்றி எந்த மனித உரிமைகள் அமைப்பும் இதுவரை குரல் கொடுக்கவில்லை.
சிறிலங்காவில் இதுவரை சுமார் 1,100 மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
யுத்தம் நடைபெறும் ஒரு நாட்டில் இந்த மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று.
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர்களான ஆர்.பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் யுத்தம் இல்லா நிலையிலும் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் பல நிகழ்ந்தன.அவை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச, அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஓரு அங்கம்தான் மகிந்தவினால் நியமிக்கப்பட்ட ஆட்கடத்தல், கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் குறித்து ஆராய்வதற்கான குழுவாகும்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சுதந்திரமாக இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பின்னர் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன.
கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் இதுவரை சுமார் 141 ஆட்கடத்தல் சம்பங்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு கடத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டோரில் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், ராகமயைச் சேர்ந்த ஒருவரும் வீடு திரும்பியுள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.