Wednesday, October 03, 2007
முஸ்லிம் காங்கிரசிலிருந்து சிறிலங்கா அமைச்சர் ஏ.கே.பாயிஸ் தற்காலிக நீக்கம்
[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007]
புத்தளம் பொதுக்கூட்டத்தில் கைத்துப்பாக்கியை தூக்கி காட்டி உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் கால்நடை வளர்ப்புப் பிரதி அமைச்சருமான ஏ.கே.பாயிஸ் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக உலக வங்கி கொடுத்த நிதியை எவ்வாறு பங்கிடுவது குறித்து கடந்த 23 ஆம் நாள் புத்தளத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் கால்நடை வளர்ப்புப் பிரதி அமைச்சர் ஏ.கே.பாயிசிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இதனையடுத்து அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாவலர்களால் பிரதியமைச்சர் பாயிஸ் தாக்கப்படடார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த 25 ஆம் நாள் புத்தளத்தில் கடையடைப்பு நடந்தது. அன்றைய நாளில் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீனும் பாயிசும் தனித்தனியாக தமது ஆதரவாளர்களுக்கு பொதுக்கூட்டங்களை நடத்தினர்.
அந்த கூட்டத்திலேயே பிரதியமைச்சர் பாயிஸ் தனது கைத்துப்பாக்கியை தூக்கிப் பிடித்தவாறு ஆவேசமாக உரையாற்றினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
பிரதியமைச்சர் பாயிஸ் தனது கைத்துப்பாக்கியை பொதுக்கூட்டம் ஒன்றில் தூக்கிப்பிடித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இதனால் இது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடி இன்று ஆராய்ந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.