Thursday, October 04, 2007

புலிகளுடனான ஐஸ்லாந்து பிரதிநிதியின் "திடீர்" சந்திப்பு: குழப்பத்தில் சிறிலங்கா

[வியாழக்கிழமை, 4 ஒக்ரொபர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடனான ஐஸ்லாந்து வெளிவிவகார அமைச்சின் பிரதிநி ப்ஜார்னி வெஸ்ட்மானின் திடீர் சந்திப்பானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் சு.ப.தமிழ்ச்செல்வனை செவ்வாய்க்கிழமை வெஸ்ட்மான் சந்தித்துப் பேசினார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், "சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் ஐஸ்லாந்து பிரதிநிதி அழைக்கப்படவில்லை. வழமையாக பின்பற்றக் கூடிய நடைமுறைகளினூடே அவர் வரவும் இல்லை" என்று கூறியுள்ளார். அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்காக விடுதலைப் புலிகளை சந்தித்துப் பேச நோர்வே தரப்பினரால் வெஸ்ட்மான் அனுப்பபட்டு இருக்கலாம் என்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் அவரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கக்கூடும் என்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு கருதுகிறது. இருப்பினும் இது தொடர்பில் நோர்வே தூதரகம் மற்றும் கண்காணிப்புக் குழுவினரினது கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.