Wednesday, October 03, 2007

விரைவில் பொதுத் தேர்தலை பெற்று கஷ்டங்களிலிருந்து மக்களை மீட்போம் ஆட்சியை தீர்மானிப்பது பாண் என்கிறார் ஐ.தே.க.வின் பேச்சாளர்.!

[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007] [வீரகேசரி நாளேடு] படுகுழியில் விழுந்துள்ள நாட்டை மீட்கவும் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கவும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நாட்டை நேசிக்கும் சக்திகள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளன. விரைவில் பொதுத் தேர்தலை பெற்று ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதுடன், கஷ்டங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாட்டை அரசாங்கமோ, அமைச்சரவையோ, பாராளுமன்றமோ நிருவகிக்கவில்லை. மாறாக ராஜபக்ஷ சகோதர நிறுவனமே நாட்டை இலாப நோக்குடன் நிருவகித்துக்கொண்டிருக்கிறது. நிறுவனம் ஒன்று நாட்டை நிருவகிக்கும்போது மக்கள் நலன்சார்ந்த விடயங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்திடம் மக்கள் நிவாரணங்களை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: அரசியல் மேடையில் பாண் என்ற உணவுப்பொருள் முக்கியத்துவம் பெற்ற பொருளாக இடம்பெற்றிருந்தது. அரசாங்கங்களை கவிழ்க்கவும் புதிய அரசாங்கங்களை பதவியில் அமர்த்தவும் பாண் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் ஆட்சிக் காலத்தில் பாண் ஐந்து ரூபாவாக விற்கப்பட்டது. ஆனால், கடந்த 1994ஆம் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் 3.50 சதத்திற்கு பாணை விற்பனø செய்தது. இதனாலேயே அப்போது சந்திரிகாவுக்கு பெண்கள் அதிகமாக வாக்களித்தனர். புதிய இலங்கையில் பாண் 35 ரூபா புதிய இலங்கையை கட்டியெழுப்புவதாக கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பாணின் விலையை 35 ரூபாவாக மிகவும் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது. மாவின் விலை ஒரே தடவையில் 13 ரூபாவால் அதிகரித்துள்ளது. ஆனால், சாதாரண மக்களை பாரிய அளவில் பாதிக்கின்ற இந்த பாண் மற்றும் மா விலை ஏற்றம் தொடர்பாக பத்திரிகைகள் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கவில்லை. நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலையடைகின்றோம். தோட்டத்தொழிலாளர்கள் மாணவர்கள் பாதிப்பு பாணின் விலையேற்றத்தால் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் காலை உணவை உட்கொள்ளாது வேலைக்குச் செல்கின்றனர். அத்துடன், பாடசாலை மாணவர்கள் பசியுடன் பாடசாலைக்கு செல்கின்றனர். மா, எரிவாயு போன்றவற்றின் விலையேற்றத்தால் பேக்கரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தன ஏதேதோ கூறிக்கொண்டிருக்கிறார். அவர் கூறும் விலைக்கு எங்கும் பொருட்கள் இல்லை. பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் அமைச்சர் ஏன் மௌனமாக இருக்கின்றனர்?

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.