Monday, October 22, 2007

(2ம் இணைப்பு) அநுராதபுர சிறிலங்கா வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: 13 படையினர் பலி- 30 பேர் காயம்.!!

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007]

சிறிலங்கா இராணுவத்தின் வடக்கு படை நடவடிக்கைகளுக்கான பிரதான தளமான அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 படையினர் காயமடைந்துள்ளனர்.
அநுராதபுர வான்படைத் தளத்திற்குள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஊடுருவிய கரும்புலிகள் அணி, சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதலை தொடங்கினர்.

இத்தாக்குதல் அணிக்குத் துணையாக தமிழீழ வான் படையின் இரண்டு வானூர்திகள் அதிகாலை 4.30 மணியளவில் அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகளின் வானூர்திகளிலிருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன.

இத்தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன.

இராசையா இளந்திரையன்

இலங்கையின் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் "நடைமுறை அரசாங்கத்தின்" தலைநகரான கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்து:

எமது தரைப்படையினரும், தமிழீழ வான்படையினரும் இணைந்து நடத்திய தாக்குதல் இது.

வடபகுதிக்கான சிறிலங்கா இராணுவத்திற்கு அனுராதபுரம் வான்தளம் முக்கியத் தளமாகும். இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் தொடரும்.

21 கரும்புலி அணியினர் தரைவழியாக வான்படைத் தளத்தை தாக்கினர். 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரும்புலிகள் நடத்திய பாரிய தாக்குதல் இது.

சிறிலங்கா வான்படையின் 8 வானூர்திகளை சேதப்படுத்தியுள்ளோம்.

அநுராதபுர வான்படைத் தளத்தின் ஒரு பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது என்றார் இராசையா இளந்திரையன்.
வீழ்ந்து நொருங்கியுள்ள உலங்குவானூர்தியின் பாகங்களைத் தேடும் சிறிலங்காப் படையினர்

கேகலிய ரம்புக்வெல

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் நான்கு வான்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது படையினர் உயிரிழந்திருப்பதாக சிறிலங்கா அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் உயர்மட்ட பயிற்சிகளைப் பெற்ற கரும்புலி அணி, அநுராதபுர வான்படைத் தளத்திற்குள் புகுந்து இன்று அதிகாலை தாக்குதலை நடத்தின. அதனைத் தொடர்ந்து புலிகளின் வானூர்திகளும் இரண்டு குண்டுகளை வீசின.

இந்த இரண்டு தாக்குதலிலும் நான்கு அதிகாரிகள் உட்பட ஐந்து வான் படையினர் உயிரிழந்தனர். மேலும் அநுராதபுர வான் படைத்தளத்திற்கு உதவிக்கு விரைந்த உலங்கு வானூர்தி மிகிந்தலையில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரண்டு வானோடிகள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தனர். இருபது படையினர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

புலிகளின் தாக்குதலுக்கு எம்ஐ. - 24 ரக உலங்கு வானூர்திகள் இரண்டும் கே-8 ரக பயிற்சி வானூர்திகள் இரண்டும் இலக்காகின. மேலும் வவுனியாவில் இருந்து விரைந்த பெல் - 212 ரக உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.

அநுராதபுரம் வான்படைத் தளத்திலிருந்து இருந்து இதுவரை 20 புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கில் தாக்கப் போகிறோம் என்று அரசாங்கம் அறிவித்ததன் விளைவாக அச்சமடைந்துள்ள புலிகள் அண்மைக்காலமாக இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக யால வனவிலங்கு சரணாலயப்பகுதியில் அண்மையில் தாக்குதல் நடத்தினர். தற்போது அநுராதபுர வான்படைத் தளத்தைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றார் அவர்.

உதய நாணயக்கார

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தின. இதையடுத்து நடந்த மோதலின் போது 10 விடுதலைப் புலிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஒரு சிறு அணியினரே இத்தாக்குதலை நடத்தினர்.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தப்பிவிட்டன. 2 எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் சேதமடைந்துள்ளன என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கர தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜந்த டி சில்வா

விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வான்படை அதிகாரிகள், இரண்டு வானோடிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 30 படையினர் காயமடைந்திருப்பதாகவும் வான்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் பெல் - 212 ரக உலங்கு வானூர்தியை சிறிலங்கா இராணுவத்தினரே சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை என்றும் தொழில்நுட்பக் கோளாறினாலே அது வீழ்ந்து நொறுங்கியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.