யாழ்.காக்கைத்தீவு, கல்லுண்டாய் வெளிப் பகுதியில் காலஞ்சென்ற அமைச்சர் மகேஸ்வரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் அங்கு பாரிய இராணுவ முகாமினை அமைத்து வருகின்றனர்.
மேற்படி பகுதியில் இருந்த ஒரு குடும்பத்தினையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு முழு வீச்சில் இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகேஸ்வரன் இந்து கலாசார அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் யாழ்.மாவட்டத்தில் சொந்த வீடுகள், காணிகள் இல்லாதவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு யாழ்.காக்கைதீவு – கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வீட்டுத்திட்டத்தினை அமைத்துக் கொடுத்திருந்தார்.
மேற்படி வீட்டுத்திட்டத்தில் சுமார் 25 ற்கும் மேலாக கல் வீடுகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் குடிநீர்ப் பிரச்சினை காரணமாகவும், நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
இறுதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் மேற்படி வீடுகளில் இரண்டு குடும்பங்களைக் கொண்ட 14 பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் அங்கிருந்த குடும்பங்களிடம், மேற்படிப் பகுதியில் புதிய இராணுவ முகாமினை அமைக்கப் போவதாகவும் இதனால் அங்கிருந்து வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த ஒரு குடும்பத்தினர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்னர். மேலும் மற்றுமொரு குடும்பத்தினர் அங்குள்ள உடைந்த வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பனை ஓலையினால் காணி எல்லை வேலிகளை அடைத்து பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வீடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புதிதாக குடிநீர் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலசல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.