Sunday, September 01, 2013

கச்சதீவு தொடர்பான இந்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது: கருணாநிதி


இந்திய- இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சதீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டதாக திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கச்சதீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சதீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சதீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சதீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக் கோட்டுக்குள் இருந்த கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்றெல்லாம் தெரிவித்திருப்பது தமிழ் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சதீவு இந்தியாவிற்குத் தான் சொந்தம் என்றும், அதனை 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.
கச்சதீவு பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில், “கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கச்ச தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சதீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை.
எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், டெசோ அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக்கிறேன்.
உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிட உத்தரவிட்டனர்.
கச்சதீவைப் பொறுத்தவரை அது பாரம்பரியமான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கச்சதீவில் புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வாரத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர். இலங்கை மீனவர்களும் கலந்து கொள்வர்.
தொன்று தொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த்துதல், களைப்பாறுதல் போன்றவற்றிற்கும் இத் தீவினைப் பயன்படுத்துவர். இத்தீவானது பன்னெடுங்காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது.
இலங்கையை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப் படுகையை குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766-ல் கண்டி அரசரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும்.
இந்தக் காலக் கட்டத்தில் ராமநாதபுரம் அரசர் ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின் இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெசட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, தமிழக அரசு மூன்று வாரங்களில் விளக்கம் தர வேண்டுமென்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும்.
1974ஆம் ஆண்டு இந்திய அரசு. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலக் கட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று, 21-8-1974 அன்று திமுக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த போதே தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு.கவின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார்.
“இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே இரகசிய பேரம் நடத்தி கச்சதீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் திமுக சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.
இதையெல்லாம் முற்றிலும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் டெல்லிக்கு வந்த இலங்கை அமைச்சர் பீரிஸ், கச்சதீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு “பின்பாட்டு” பாடுவதைப் போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கச்சதீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2-7-1980. 1947இல் குறுநில மன்னர் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது. கச்சதீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
இந்த ஆவவணங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், “கச்சதீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது” என்று மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது, தமிழகத்திற்குப் பேரிடர் போன்றது.
இந்தப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக் கூடியது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும், கச்சதீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.