Monday, August 05, 2013

ஈழ உணர்வு மூலம் இருவரும் இணைந்தோம்! திருமணம் பற்றி சீமான் விளக்கம்!


இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார்.
செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது.
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.
மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது:
சிறு வயது முதலே கயலுக்கும் ஈழக் காதல். இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.
பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது.
அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் ஐயா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.
ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.
இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம்.
இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.