Friday, March 15, 2013

கொதி நிலையில் தமிழகம் இந்தியா எடுக்கப்போகும் முடிவு என்ன..?


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா பிரேரணையைக் கொண்டுவரவுள்ள நிலையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகத் தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் ஏனைய மாநிலங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் இம்முறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
01. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்றாதே.
02. இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமோ, மனித உரிமை மீறலோ மட்டுமல்ல திட்டமிட்ட இனப்படுகொலை.
03. சர்வதேச விசாரணையும் போதுவாக்கேடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு சர்வதேச விசாரணையும் தனித் தமிழீழ பொது வாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து கொண்டுவர வேண்டும்.
04. சிங்கள இனவெறி அரசின் துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்றத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கையுடன் அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
05. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாரதாரத் தடை விதிக்க வேண்டும்.
06. உலகத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத்துறையை உருவாக்க வேண்டும்.
07. ஆசிய நாடுகள் எதுவும் விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
08. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
09. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்த
மாட்டோம். இந்தப் பிரச்சாரத்தில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபடுவோம்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவரும் வரை தங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறிவந்தனர். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தமிழின உணர்வாளர்கள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் நேரில் சென்று தமது ஆதரவை வழங்கிவந்தனர்.

இந்நிலையில் ஆதரவு வழங்குவதாகக்கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை இனப்படுகொலையை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் கொங்கிரஸ் மற்றும் அதற்குத் துணைபோன தி.மு.க. உறுப்பினர்கள் அங்கு சென்றபோது அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அங்கு சற்றுநேரம் களேபரமும் ஏற்பட்டது. கொங்கிரஸ் தமிழகத் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு மீது செருப்பு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் சீற்றத்துடன் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாட்களைக் கடந்து நான்காவது நாளான நேற்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக  லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களைக் கைது செய்து, மாணவர்களை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில் அடைத்துவைத்தனர்.

மேலும், உண்ணாவிரதப் பந்தலை சீல் வைத்ததுடன், உண்ணாவிரதப்பந்தலில் இருந்த நாற்காலிகளைக் காவல்துறையினர் அடித்து நொறுக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளபோதும், மேலிட அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.  
இதேவேளை, காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசின் மீது சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த மனித உரிமைகள் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய ஒரு தீர்மானத்தை இந்திய அரசே முன் வைக்க வேண்டும் என்றும் சுதந்திரத் தமிழ் ஈழமே ஒரே தீர்வாகும் என்பதால் அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திய லயோலா கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி தனியார் கட்டட வளாகத்துக்குள் தங்கள் அறப்போரை நடத்தினார்கள்.

இப்படி அறவழிப் போராட்டம் நடத்திய எட்டு மாணவர்களை நடுநிசிக்கு மேல் அதிரடியாக வளாகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அந்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கிருந்த 200 கல்லூரி மாணவர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

அந்த இரவு வேளையில் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த மறுமலர்ச்சி தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அகில இந்திய மாணவர் சங்க தமிழ் மாநிலச் செயலாளர் திருமலை மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி திரைப்பட இயக்குநர்கள் கௌதமன் களஞ்சியம் ராம் மற்றும் வழக்கறிஞர் அங்கையற்கண்ணி எழுத்தாளர் கென்னடி மாணவர் தலைவர்கள் அருண்சோரி பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உண்ணாநிலை அறப்போர் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையை நசுக்கும் விதத்தில் காவல்துறை மாணவர்களைக் கைது செய்ததற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, லயோலாக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றுக் காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஜோசப் கல்லூரி மாணவர்கள் அதே கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தமிழ்நாடு முழுவதும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  
மாணவர்களின் போராட்டம் அறவழியில் தொடர்ந்துகொண்டிருக்கையில், தமிழின உணர்வாளர்களால் சிறீலங்காவின் நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாகத் தெரியவருகின்றது. சிறீலங்காவின் விமான சேவை நிறுவனங்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது, சிறீலங்கா நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. எனினும் தி.மு.க.வின் போலிப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரியவருகின்றது. இதேவேளை, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த ஸ்டாலின் பிரச்சாரத்தில் உண்மையில்லை என சனல்-4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. கடந்த வாரம் தி.மு.கவின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார். இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் வழங்கியுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை தமிழர்களுக்கான நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் இதற்காக பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க இலங்கை விடயத்தை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்பது புலனாகிறது.
இந்நிலையில், மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் மத்திய அரசுக்கெதிராக தி.மு.க வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக்கொண்டும் மத்திய ஆட்சிக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும்.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் ஆணையர் நவநீதம்பிள்ளையே தனது அறிக்கையில் இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்தியுள்ளன. வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈரமில்லாத வகையில் உரையாற்றியிருக்கிறார். நமக்காகப் போராட வேண்டிய தளபதி எதிரிப்படையின் முன்வரிசையில் நின்று அவர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கியிருப்பதைப் போலத்தான் அவரின் உரை அமைந்துள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிக்கையில் ஈழப்பிரச்சினையில் கொங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் போக்கினை தொடர்ந்து மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார். முதல்வர் பதவியில் இருந்தபோது கூறாத வகையில் மத்திய அரசின் மீது கண்டனம் தெரிவிக்க இப்போதாவது அவர் முன் வந்துள்ளார்.

காலம் கடந்து மத்திய அரசுக் கெதிராக நடத்தும் மாநாடுகள், போராட்டங்கள் போன்றவை யாருக்கெதிராக என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வியாகும். மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக திமுக வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல.

இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா எடுக்கப்போகும் முடிவு குறித்த கேள்விகள் பலமாக எழுந்துள்ளன. இதற்கிடையே கடந்தமுறை போன்று இம்முறையும் அமெரிக்கப் பிரேரணையில் கொங்கிரஸ் அரசு மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

குறிப்பாக ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் சபைக்கு சமர்பித்த அறிக்கையின்படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பவும் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயத்தில் இந்தியா மாற்றங்களைச் செய்துள்ளதாக அறியவருகின்றது.

அதாவது, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சிறப்பு நடைமுறை அதிகாரத்துடன் செயற்படுவோர் சிறீலங்கா அரசின் சம்மதத்துடனும், கலந்தாலோசனையுடனும் மட்டுமே செயற்படலாம் என்ற சொற்பதத்தை பிரேரணையில் இந்தியா இணைக்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, கடந்தமுறை போன்று சிறீலங்காவை அடித்துக் காப்பாற்றும் நடவடிக்கையையே இந்தியா செய்யமுயன்றுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, கடந்த முறைபோன்று பிரேரணையில் மாற்றங்களைச் செய்து சிறீலங்காவைப் பாதுகாப்பதுடன், எந்தவொரு தாக்கத்தையும் மகிந்த அரசுக்கு ஏற்படுத்தாத பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆதரித்து வாக்களிப்பதன் ஊடாக தமிழகத்தினது ஆதரவைப் பெறுவதுமே இந்திய மத்திய அரசின் திட்டமா என்ற கேள்வியே எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.