தாய்த் தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இந்த கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தை பிரித்தானிய தமிழ் இளையோர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கைத் தீவில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு ஆதரவாக ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இந்தியாவின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும வலியுறுத்தியும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தாய்த் தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இந்த கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தை பிரித்தானிய தமிழ் இளையோர்கள் முன்னெடுத்துள்ளனர்.
முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்து 18.03.13 காலை 11.மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் கால வரையறை அற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை இளையோர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்,
லண்டன் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்றலில் மாற்று இன மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரவு பகலாக தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள மாணவர்களின் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து, தமது போராட்டத்திற்கும், தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் வலுச் சேர்க்கும் வகையில், பிரித்தானியத் தமிழ்மக்கள் அனைவரும் சுழற்சி முறையில் கலந்துகொள்ளுமாறு இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எந்த ஒரு அமைப்பின் பின் புலமும் இல்லாமல் இளைய சமுகம் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரியவருகிறது. இதுபோன்ற தன்னெழுச்சியான போராட்டங்களே இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் மாணவர்களின் போராட்டம் வலியுறித்தி நிற்கிறது.
கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்கள் சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் இந்திய அரசிடமும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:
*"இனவழிப்பு தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்"
*"தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்"
*"தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் முகமாக பாதுகாப்புப் பொறிமுறை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்"
*"சிறிலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணமல் போன போராளிகள் மற்றும் பொதுமக்களின் விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும், கால வரையறை இன்றி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்"
*"தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு, பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், அரச படைகளின் அத்துமீறிய காணிச் சுவீகரிப்புக்கள், வழிபாட்டுத் தளங்கள் அழிக்கப்படுவது போன்ற செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு,அங்கு நிலைகொண்டிருக்கும் அரச படைகளும் அகற்றப்பட வேண்டும்"
*"மேற் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளையும், சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கு இந்திய வல்லரசு தனது முழுமையான ஆதரவினை வழங்கி தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை கண்டு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன், சுதந்திரமாக வாழ, வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காக சமகாலத்தில் தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பிரித்தானிய தமிழ் இளையோர்கள் சார்பில் கவனயீர்ப்பும் போராட்டத்துடன் தமது உண்ணாநிலைப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்"
இன்று இளையோர்களும் மக்களும் குறிப்பாக லண்டன் புறநகர்ப் பகுதியான கொவென்றியில் இருந்து பல மக்களும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி நிதிகள் பலரும், பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த பிரதி நிதிகளும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.