ஈழத்தமிழ் மக்களின் மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்துள்ள தமிழக உறவுகளும், அவ் உறவுகளின் நீண்டகாலப் புரிதலின் ஊடாக இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டுப் பரந்துள்ள தற்போதைய ஜனநாயக வழிமுறையிலான ஈழத்தமிழரின் நியாயங்களை முன்னிறுத்தியுள்ள போர்முறைகள் ஈழத்தமிழரின் நம்பிக்கையை வலுப்படுத்தி நிற்கிறது.
விரிந்துகிடக்கும் அரசியல் பெரு வெளியினூடாக எதிர்காலத்தில் ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்றை தோற்றுவிக்கும் தன்மை கொண்டதாகவும் அமைகிறது. ஈழத் தமிழரின் மனிதாபிமான அவாவை பகிர்ந்து சுமந்து குரல் கொடுத்துவரும் அனைத்துத் தமிழக மற்றும் ஏனைய மாநில உறவுகளை நன்றியுடன் பற்றிக் கொள்கின்றோம்.
மாணவ சமுதாயத்தின் விழிப்பும் உறுதியும்
எந்தவொரு நாட்டினது விடுதலை சார்ந்த அல்லது பொதுநிலை சார்ந்த விடயங்களை மாணவ சமுதாயம் அல்லது கல்விப்புல மேன்மையாளர்கள் தார்மீகமாகக் கையில் எடுத்து, அதனை சமூக விழிப்புணர்வு நோக்கி முன்னகர்த்தும்போது, அது எதிர்பார்க்கப்படும் அல்லது அதற்கு மேலான வகையில் சமூகத்தால் பற்றிப்பிடிக்கப்படுமென்பது யதார்த்தமாகும்.
இவ்வாறான யதார்த்த நிலைக்கு புறம்பாக ஈழத்தமிழ் மாணவர்களும் கல்விப்புல மேன்மையாளர்களும் தமது உணர்வலைகளை வெளிப்படுத்த முடியாத கையறு நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் திறந்த வெளிச் சிறைக்குள் கட்டுண்டு கிடக்கும் இவ்வேளையில், அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் தாங்கியபடி, தமிழக மாணவ சமுதாயம் கிளர்ந்தெழுந்து உலக மனச்சாட்சியை உலுக்கியபடி ஈழத்தமிழருக்கான நியாயங்கோரி தொடுத்திருக்கும் ஜனநாயக வழிமுறையிலான போர்முறை என்பது இளநிலைச் சிந்தனையாளர்களின் ஈழம் நோக்கிய எண்ண ஓட்டம் எதிர்காலத்தில் மேலும் கூர்மையாகும் என்பதைப் பதிவு செய்கிறது.
இம் மாணவர்களின் விழிப்புக்கும் புரிதலுக்கும் மதிப்பளித்து, அவர்களின் உயரிய சிந்தனைக்கும் அவர்களைப் பெற்றெடுத்த தமிழக உறவுகளுக்கும் ஒட்டு மொத்த ஈழத் தமிழரின் சார்பில் தலைசாய்த்து நன்றி பகிர்வதோடு எழிமையான ஜனநாயக வழிமுறையினூடாக தொடர்ந்தும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும் வேண்டி நிற்கின்றோம்.
உயிர்த்தியாக போர்முறைகளைத் தவிர்ப்போம்
ஈழத் தமிழர்களின் நியாயமான இருப்புக்காக இதுவரை ஈழத்திலும் தமிழகத்திலும் அர்ப்பணிக்கப்பட்ட உயிர்த்தியாகம் என்பது எவராலும் இலகுவில் வருடிவிடமுடியாத வலியாகவே தொடர்கின்றது.
இறுதியாக ஈகையாளன் மணி அவர்களின் உயிர்க்கொடை எம் எல்லோரையும் உறைய வைத்தாலும் சிங்கள தேசமோ, அல்லது அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் வல்லரசுகளோ மனம் திரும்பியதாக அல்லது மனம் நொந்ததாக இல்லை.
இவ்வேளையில் ஈகையாளர் மணியையும் ஏனைய மாவீரர்களோடு எமது நெஞ்சப் பசுமையிலே புதைத்தபடி வீரவணக்கம் செலுத்தி, அவர்களின் நினைவுகளையும் தாகங்களையும் சுமந்து உயிர்கொடை தவிர்ந்த ஏனைய இலகு முறை ஜனநாயக வழிமுறையின் ஊடாக எமது நியாயங்களை இடித்துரைக்க கரம்கோர்த்துக் கொள்வோம்.
கட்சிகளின் காத்திரமான உழைப்பு
ஈழத்தமிழ் மக்களின் நியாயங்களுக்காக ஆரம்பகாலம்தொட்டு, இன்றுவரை இதய சுத்தியோடு குரல்கொடுத்துவரும் கட்சிகளோடு, தற்காலத்தில் அவர்களுக்குப் பலமாகவும் ஒற்றுமையாகவும் இணைந்து நின்று குரல்கொடுத்துவரும் தமிழகம், மற்றும் பிற மாநிலக் கட்சிகளையும் அவற்றை வழி நடாத்தும் உறவுகளையும், ஈழத்தமிழராகிய நாம், தொலைத்த வாழ்வைத் தேடித்தர உழைக்கும் தூண்களாக மதிக்கின்றோம்.
எதிர்ப்பலைகள், வாதப்பிரதி வாதங்கள், கைதுகள், தடைகள், சிறைவைப்புக்கள், இவற்றைத் தினம் தினம் சந்தித்தபடியே ஈழத்தமிழரின் இருப்பை நிலைநாட்ட அல்லும் பகலும் சிந்தித்து செயற்படும் செயற்திறனானது வலிக்குள் மூழ்கியிருக்கும் எமக்கும் சிறு சுகமளிக்கிறது.
இன்னும் புரிந்தும் புரியாதது போன்றும், கேட்டும் கேட்காதது போன்றும், அறிந்தும் அறியாததுபோன்றும், உண்மைக்குப் புறம்பான எண்ணங்களைச் சுமந்து, காலத்துக்குக் காலம் முன்னெடுக்கும் ஜனநாயகப் போர்முறைகளுக்கு முழுமையான அரசியல் முலாம்பூசி, அவை பயங்கரவாதத்தின் விழுதுகள் என்றும் பயங்கரவாதத்தின் எச்சங்கள் என்றும் மிரண்ட பார்வையைச் செலுத்தி,
மனம்போன போக்கில் முரண்பாட்டுக் கருத்துக்களைச் சிந்தியபடி அலையும் சுப்பிரமணியம் சுவாமி போன்ற உண்மையை ஏற்க மறுக்கும் குருட்டுத்தன அரசியல்வாதிகளின் கூட்டுச் சதிக்குள் சிக்கிவிடாமல், அயல் வீட்டு ஒப்பாரி காதைப் பிழக்கின்றபோதும் அயர்ந்து தூங்கும் அக்கறையற்ற மனிதர்களாக இருந்துவிடாமல் எவ்வளவு வேகமாகவும் விவேகமாகவும் ஒருங்கிணைந்து செயலாற்ற முடியுமோ அவ்வளவு பெருமனத்தோடு ஏனைய கட்சிகளும் உண்மையாகக் கரம் சேர்த்து உழைப்பீர்கள் என நம்பிக்கை கொள்கிறோம்.
இளையோர்களால் முன்னெடுக்கப்படும் போர்முறைக்குப் பக்கபலமாக இருந்து, அவர்களுக்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தேவைக்கேற்ற ஆதரவுகளையும் வழங்குவதனூடாக வீணான உயிரிழப்புகளைத் தவிர்த்து, ஈழத் தமிழ்மக்களின் ஜனநாயக இருப்புக்கான விழிப்பை நிலைநாட்டிச் செயற்பட தொடர்ந்தும் உறுதுணையாக உதவுமாறு ஈழத்தமிழராகிய நாம் அன்புரிமையோடு வேண்டிக்கொள்கின்றோம் என ஜேர்மனி தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.