இந்திய மீனவர்கள் இருவரை கடந்த ஆண்டு கேரளக் கடற்பரப்பில் சுட்டுக்கொன்ற இத்தாலியக் கடற்படையினர் இருவரை மீண்டும் விசாரணைக்காக இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப இத்தாலி மறுத்திருப்பது இந்திய இறையாண்மையை மீறும் செயல், இந்தியக் குடிமக்களையும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மீனவர்களையும் அவமதிக்கும் செயல் என்று கன்யாகுமரி மாவட்டத்திலிருந்து இயங்கும், தெற்காசிய மீனவர் தோழமை என்ற அமைப்பின் பொதுச்செயலர் அருட்தந்தை சர்ச்சில் கூறுகிறார்.
இந்தப் பிரச்சினையில், இத்தாலியைக் கண்டித்து இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் மட்டும் போதாது. இந்தியா இந்த குற்றம் சாட்டப்பட்ட கடற்படையினரை இத்தாலி திரும்ப விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பத் தாமதப்படுத்தினால் அல்லது மறுத்தால், இத்தாலியுடனான உறவை முறித்துக்கொள்ளவும் தயங்கக்கூடாது என்று மீனவர்கள் கோருவதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் கேரளக் கடற்பரப்பில் அஜிஸ் பிங்க் மற்றும் ஜெலஸ்டின் ஆகிய இரு இந்திய மீனவர்கள் இத்தாலியக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, கேரள அரசும் , கடலோர எல்லைப்பாதுகாப்புப் படையும் விரைந்து நடவடிக்கை எடுத்தன. கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது என்று கூறும் சர்ச்சில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இத்தாலி செல்ல அவர்கள் அனுமதி கேட்டபோது, முறையான பிணை மற்றும் இத்தாலிய தூதுவரின் உறுதிமொழியைப் பெற்றபிறகே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றார்
ஆனால் சமீபத்தில், இத்தாலியப் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக இத்தாலி செல்லவேண்டும் என்று அவர்கள் மீண்டும் அனுமதி கேட்டபோது, முன்னர் எடுத்தது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், அவர்களை விடுதலை செய்தது தவறு என்றும் அவர் கூறினார்.
மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போல இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்காத நிலையில், இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.