கியூ பிரிவு பொலிஸாரின் பேச்சை நம்ப வேண்டாம்! உண்ணாவிரதி செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கை எடுங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். |
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது! பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் செந்தூரன் 23வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அதிலும் கடந்த 9 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. எந்நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் இதுவரை 6 தடவை தான் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அதனால் சிறந்த மருத்துவர்களை அனுப்பி அவருக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் செந்தூரனின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள 47 ஈழத்து அகதிகளை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு முகாம்களில் இருக்கும் இலங்கை அகதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உண்மையில் எந்த வழக்கும் இல்லை. ஆனால் கியூ பிரிவு பொலிஸாரோ அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். தவறு செய்யாத அவர்கள் தவறு செய்ததாக வழக்குப் பதிவு செய்து அரசுக்கு தவறான தகவலை தெரிவிக்கின்றனர். அவர்களின் பேச்சை முதல்வர் நம்பிவிடக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுங்கள் என்றார். |
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.