Sunday, January 23, 2011

சிறிலங்கா நாங்கள் எதிர்பார்க்கும் செயன்முறைகளை முன்னெடுக்காவிட்டால் அது தொடர்பில் பேச தயங்கமாட்டோம் – அமெரிக்கா கண்டிப்பு


போரின் இறுதி நாட்களில் நடந்தது எதுவோ அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது சிறிலங்காவினது வளமிக்க எதிர்காலத்திற்கு மிக மிக அவசியம் என நாம் கருதுகிறோம் இதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் இவ்வாறு அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே கிறவுலி கூறுயிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடனான போரின் போது அனைத்துலக சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டவர்கள் யாரோ அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக முனைப்புக்களைச் சிறிலங்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும் எனத் தான் நம்புவதாக ஐக்கிய அமெரிக்கா கூறியிருக்கிறது.

குற்றமிழைத்தவர்கள் யாரோ அவர்களை நீதியின் முன் நிறுத்துவது என்பது மேற்கொள்ளப்படும் இன நல்லிணக்க முனைப்புக்களின் இன்றியமையாத அம்சமாகும் என அமெரிக்கா கூறுகிறது.

”இதுவிடயம் தொடர்பாக நாங்கள் அறிக்கைகள் பலவற்றை விடுத்திருக்கிறோம். அத்துடன் போர்க் குற்றங்களை புரிந்தவர்களை இனங்காணும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு நாங்கள் எங்களது முழுமையான ஆதரவினை வழங்கி நிற்கிறோம்.

சிறிலங்காவின் இந்த முயற்சிகள் தற்போதும் தொடர்கின்றன’ என நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே கிறவுலி கூறுயிருக்கிறார்.

”சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டவர்கள் யாரோ அவர்கள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாம் முழுமையாக நம்புகிறோம்.

இதுபோன்ற பொறுப்புச்சொல்லும் செயற்பாடுதான் சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் இன நல்லிணக்கச் செயற்பாடுகளின் அடிப்படையாக இருக்கும் என நாம் கருதுகிறோம்” என கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்காவிற்குச் சென்றிருக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழு என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அது தற்போது தொடர்புடையவர்களிடமிருந்து சாட்சியங்களைப் பெற்று வருகிறது.

இந்த ஆணைக்குழுவின் செயற்படுகாலம் எதிர்வரும் யூலை மாதம் வரைக்கும் நீடிக்கப்பட்டிருக்கிறது என நான் நம்புகிறேன்.

தங்களது விசாரணைகளின் முடிவில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆணைக்குழு சிறிலங்காவினது அதிபருக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் அமைத்திருக்கும் வல்லுநர்கள் குழு போன்ற தற்போதிருக்கும் வளங்களைப் பயன்படுத்துவதோடு குற்றவாளிகளை இனங்கண்டு நீதியின் முன் நிறுத்தும் இந்தச் செயற்பாட்டில் சிறிலங்கா தொடர்ந்தும் செயற்படும் என நாம் நம்புகிறோம் என பேச்சாளர் கிறவுலி தொடர்ந்து தெரிவித்தார்.

போரின் இறுதி நாட்களில் நடந்தது எதுவோ அதற்குப் பொறுப்புச்சொல்லும் வகையிலான முழுமையான செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு அமெரிக்கா சிறிலங்காவிற்குத் தொடர்ந்தும் ஊக்கமளிக்கும்.

சிறிலங்காவினது வளமிக்க எதிர்காலத்திற்கு இது மிக மிக அவசியம் என நாம் கருதுகிறோம்.

இந்தச் செயன்முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுபோது அது தொடர்பாகப் பேசுவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம் என்றார் அவர்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு வந்திருக்கும் அதிபர் ராஜபக்சவுடன் சந்திப்பினை நடாத்தவுள்ள அதிகாரி யார் எனக் கேட்டபோது, தனது கருத்துக்களையும் நிலைப்பாட்டினையும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எடுத்து விளக்குவதில் அமெரிக்காவிற்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்றிருக்கிறார்.

சிறிலங்கா முன்னெடுக்கும் இந்தச் செயற்பாடு எத்தகைய விளைவுகளைத் தரப்போகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

நாங்கள் எதிர்பார்ப்பதைப் போல இந்தச் செயன்முறை முன்னெடுக்கப்படாதவிடத்து நாங்கள் அது தொடர்பில் பேசுவதற்குத் தயங்கமாட்டோம் என்றார் அவர்.

சிறிலங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஐ.நாவின் வல்லுநர்கள் குழுவும் இணைந்து செயற்படுவதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை மாற்றவேண்டும் என்ற அமெரிக்கா கருத்தினை முன்வைத்திருக்கும் நிலையில் அதிபர் மகிந்தவினது அமெரிக்கப் பயணம் அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.