Sunday, January 30, 2011

ஆளும்கட்சியின் 36 வேட்புமனுக்கள் நிராகரிப்பு – சிறிலங்கா அதிபர் அதிர்ச்சி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பித்த அதிகளவு வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் தெரிவுக் குழுவைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர்களை நேற்று அலரி மாளிகைக்கு அழைத்த அவர் தனது ஏமாற்றத்தை கோபமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சமர்ப்பித்த 36 வேட்புமனுக்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்தே சிறிலங்கா அதிபர் வேட்பாளர் தெரிவுக்குழுவைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து தமது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

அத்துடன் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கட்சியின் மூத்த தலைவர்களைப் பணித்துள்ளார்.

அதேவேளை “ பெரும்பாலான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு சட்டவலுவான காரணங்கள் இல்லை அல்லது சிறிய காரணங்களே இருந்தன.

சுமார் 20 வேட்புமனுகளின் நிராகரிப்புக்க எதிராக எம்மால் வழக்குத் தொடுக்க முடியும் “ என்று அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஆளும்கட்சியின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் பெரும்பாலானவை மிகச்சிறிய தொழில்நுடபத் தவறுகளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஒரு வேட்புமனுவை ஐந்து காரணங்களுக்காக நிராகரிக்க முடியும்.

கட்சியின் பொதுச்செயலாளரின் கையொப்பம் இல்லாதிருந்தால், அவரது அதிகாரபூர்வ முத்திரையிடப்படாதிருந்தால், 40 வீதமான இளையோரை உள்ளடக்காதிருந்தால், அவர்களின் வயதை உறுதிப்படுத்தும் சத்தியக் கடதாசி இணைக்கப்படாதிருந்தால், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் சமர்ப்பிக்கப்படாதிருந்தால் மட்டுமே வேட்புமனுக்களை நிராகரிக்க முடியும்.

இந்த அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை.

சிறிய தொழில்நுட்பத் தவறுகளாலேயே நிராகரிக்கப்பட்டன. எனவே சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.