Saturday, December 25, 2010

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை நாம் தொடங்கி விட்டோம்! மகிந்த ஆவேசம்

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இதே தினத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவருக்கு தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதியுள்ள கடிதம் சம்பந்தமாகவே தன்னை சந்திக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

”வெளிநாடுகளில் அவர்களுக்கு எதிரான யுத்தத்தை நாம் தொடங்கி விட்டோம். அதை திடசங்கற்பத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்”என்று தியதலாவையில் இராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தோல்வியுற்ற விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புக்கள் பல நாடுகளில் ஒன்றிணைந்துள்ளன. இவர்களின் நோக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியுறச் செய்த படை வீரர்களை குற்றவாளிகளாக்கி நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்படுத்துவதே என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மைக்கால நிகழ்வுகளான ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை ரத்துச் செய்யப்பட்டமை, அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்த நாட்டின் ராஜாங்க அமைச்சருக்கு இலங்கை விடயம் பற்றி கடிதம் எழுதியுள்ளமை, ஐ.நா.செயலாளர் இலங்கை விடயம் பற்றி ஆலோசனை வழங்க குழு ஒன்றை நியமித்தமை என்பன மிகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன.

ஐ.நா குழு இலங்கை வந்து இலங்கையின் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதாயின் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.