Saturday, December 25, 2010

தமிழீழம் – நடப்பும் எதிர்பார்ப்பும்

ஒரு சமூகம் முன்னேற்றம் கண்டு பீடு நடை போடுகிறது என்றால் அந்த சமூகத்திற்குத் தலைமை தாங்கி எழுச்சியை வழிநடத்தும் பெரியோர்களின் உழைப்பும் ஓயாத சமூக சிந்தனையுமே காரணமாக முடியும்.

அதைப் போல் ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்குப் பொறுப்பாக அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகள் தான் காரணமாக முடியும். இடையூறுகள் எந்த வடிவில் வருகின்றன என்பதை தமிழீழத்தின் வரலாறு எமக்கு உணர்த்துகிறது.

அடிபட்ட ஈழத் தமிழனாகச் சில உண்மைகளை வெளிப்படுத்தலாம் என்று எண்ணுகிறோம். மிகத் தொன்மையான தமிழினம், கலை, கலாச்சாரப் பண்பாடு மரபுரிமைமிக்க தமிழினம் ஏன் இந்தக் கீழ் நிலைக்கு வந்தது. மொழி உணர்விற்கும் இன ஒற்றுமைக்கும் எம்மால் என்ன செய்ய முடியும்?

இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பு இல்லாமல் செல்லும் படகு போன்றது. எந்த இலட்சியத்திற்காக உயிர் துறக்கப் படுகிறதோ அதுவே ஒருவனைத் தியாகி ஆக்குகிறது இவை தமிழீழ வரலாற்றில் நாம் கற்ற பாடங்கள்

பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த சமாதான ஒழுங்கமைப்பாளர்கள் திட்டமிட்டு தமிழீழ வரலாற்றை முற்றுப் பெறச் செய்ய நினைத்தார்கள்,நினைத்ததைச் செய்து முடித்தார்கள். கட்டமைப்புக்களை உடைத்தாலும் ஈழத் தமிழன் நெஞ்சில் பொங்கும் விடுதலைக் கனலைத் தணிக்க அவர்களால் முடியவில்லை.

தத்தம் தேசிய நலனுக்காக தமிழீழத்தை பகடைக் காயாக நகர்த்த உலக நாடுகள் முனைகின்றன. தமிழர்களைக் கொடூரமாக நடத்தும் கனடா அரசு தனது தூதர் மூலம் மனித உரிமைகளின் புனிதத் தன்மை பற்றிப் பேசுகிறது. மேற்குலகின் இரட்டை வேடம் இதன் மூலம் புலப்படுகிறது.

ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளையும் சனாமிகளையும் எரிமலை உற்பாதங்களையும் சந்திக்கிறது. நெருக்கடிகளுக்கும் கொந்தளிப்பான சூழ்நிலைகளுக்கும் முகங் கொடுக்கிறது. எமது எதிரிகளையும் நண்பர் வேடமிடும் நயவஞ்சகர்களையும் இனங்காண்பது எமது பொறுப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்து நிர்வாஞ் செய்த நிர்வாகக் கட்டமைப்பு உலகிற்கோர் புதமை. விடுதலை இயக்கங்கள் பின்பற்றும் பெறுமதிமிக்க முன்னுதாரணம். ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் வடக்கும் கிழக்கும் இணைந்த தரைப் பரப்பில் தமிழீழத்தை அமைத்துப் பரிபாலனம் செய்தார்கள்.

தன்னாட்சி பெற்ற நாட்டிற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தமிழீழம் வீழ்ச்சி கண்டதற்கு அரசியல் முதன்மை பெறாத ஆயுதப் போராட்டம் வெற்றி அடையாது என்ற பேருண்மை முழுமுதற் காரணமாக அமைகிறது. இதை நன்குணர்ந்த புலம்பெயர் தமிழுறவுகள் சரியான பாதையில் செல்கிறார்கள். அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்,வரவேற்கிறோம்.

எமக்கு ஆதரவுப் பிற்புலம் இல்லாமல் போய் விட்டது. எம்மைத் தேடி வந்தவர்களும் நாடிப் பேச்சுக் கொடுத்தவர்களும் எமக்கு குழி பறிப்பதைக் குறியாகக் கொண்டிருந்தனர், எம்மால் இந்த இடையூறை எப்படித் தவிர்க்க முடியும். இது தேசிய நலனுக்காக உழைக்கும் உலகம்.

ஆதரவுக்கு பிரதியுபகாரமாக வழங்க ஈழத் தமிழினத்திடம் என்ன இருக்கிறது? இந்தியப் பேரரசு சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து தமிழீழ அழிப்புக்கும் ஈழத் தமிழின வீழ்ச்சிக்கும் திட்டமிட்ட காலகட்டத்தில் புது டில்லிக்கு ஒரு முக்கிய செய்தியை அனுப்பி வைத்தோம்.

ஈழத் தமிழினம் பலமாக இருக்கும் வரை மட்டும் தான் சிங்களத் தலைமை இந்தியாவுக்கு அடி பணியும். இந்திய உதவியோடு தமிழீழம் அழிக்கப் பட்டுவிட்டால் சிங்களத் தலைமை இந்தியாவை உதாசீனம் செய்யத் தயங்கமாட்டாது. இது அரசியல் கற்றுணர்ந்தோர் வலியுறுத்தும் அடிப்படைப் பாடம்.

இதை உணர இந்தியா மறுத்து விட்டது. அதற்கான விலையை இந்தியப் பேரரசு இப்போது கொடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்களத் தலைமை இந்தியாவுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் என்ற எதிர்பார்ப்பு தோல்வி கண்டுள்ளது. சிறிலங்காவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்தியாவின் உபாயங்கள் மட்டுப் படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா- இலங்கைப் பலச் சமநிலையில் பிறழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழீழக் கட்டமைப்பு அகற்றப் பட்டதால் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளது. இந்த வெற்றிடம் வெறுமையாக இருக்கும் வரை இந்தியா சொல்வதைச் செய்யும் நிலைக்கு இலங்கை வரப்போவதில்லை.

தமிழீழம் என்ற யதார்த்த அரசு தோன்றியதற்கு தமிழீழத் தலைவர்கள் பொறுப்பாக இருந்தாலும் அதன் வீழ்ச்சிக்குப் புறக் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக அரசுகள் ஒன்று சேர்ந்தது சிங்கள அரசை ஆதரித்தன இந்தியாவின் நேரடிப் பங்களிப்பிற்கு ஊக்குவிப்பு வழங்கின.

தமிழீழத்திற்கு இஸ்ரேயிலைத் தாங்கிப் பிடிக்கும் அமெரிக்காவைப் போன்ற நட்பு நாடு கிடைக்கவில்லை. இன்று பாலஸ்தீனர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்காக இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. நேர்மையான இடைத் தரகராகவும் மத்தியட்சகராகவும் தோன்றும் அமெரிக்க அரசு உண்மையில் இஸ்ரேயிலின் பாதுகாவலன் என்பது உலகறிந்த விடயம்.

இஸ்ரேயில் – பாலஸ்தீன இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை விட பிறிதோர் நாட்டால் முடியாது. அமெரிக்காவை மீறிப் பிறிதோர் நாடு இதில் தலையிட வாய்ப்பில்லை. என்ன காரணம்? அமெரிக்கா உள் விவகாரங்களிலும் வெளி விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அமெரிக்க யூதர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவை யூதர்கள் ஆட்டிப் படைக்கிறார்கள்.

தமிழீழ விவகாரத்தில் அன்றும் இன்றும் இந்திய அரசிற்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க உலக நாடுகள் தயாரில்லை. பிராந்திய வல்லரசான இந்தியா வைத்தது தான் சட்டம். அமெரிக்ஆ யூதர்களிலும் கூடிய ஆதிக்க நிலையில் இந்தியாவின் 6..5 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.

யூதர்களைப் போலல்லாது தமிழகத் தமிழர்கள் நடுவன் அரசில் பங்காளிகளாகவும் முக்கிய அமைச்சுகளின் பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக விரலசைக்க மாட்டார்கள். அவர்களுக்கு உடனடி அரசியல் இலாபம் தான் முக்கியம்.

தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் துயரம் தமிழ் நாட்டிலுள்ள புத்தியீவிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஈழப் பிரச்சனை பற்றிப் பேசும் அரசியல்வாதிகளும் தமிழுணர்வாளர்களும் அதைத் தமது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அரசியல் பிரச்சனையாகக் குறுக்கிவிட்டனர்.

அடுத்தவர் சிந்தனை, அதன் அடிப்படையில் நகர்வுகள், நகர்வுகளால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய முன் கூட்டிய அளவீடுகளில் மரபு ரீதியான இராசதந்திரம் காலம் காலமாக ஈடுபடுகிறது. இந்திய இராசதந்திரத்திற்கு இந்தக் கரிசனை நிறைய உண்டு.

சிங்களத் தலைமையால் ஏமாற்றப்பட்டோம் என்ற ஆதாரபூர்வமான எண்ணம் இந்திய அரசியல் தலைமையிடம் உண்டு. இதற்கு மாற்றீடாக அவர்களால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் இருக்கிறார்கள். புதுமையான நகர்வுகளை மேற்கொள்ளும் திராணி அவர்களிடம் இல்லை.

அரசியல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பிரதமர் பதவிக்காகக் காத்திருக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்; றாகுல் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இலங்கை அரசு மீது இந்தியா அழுத்தம் பிரயோகிப்பதாகச் சொல்கிறார். இது கருணாநிதியின் கடிதங்கள் போல் வெற்று வேட்டுக்களாகும்.

இதற்கிடையில் ஐக்கிய இராச்சிய அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈழத் தமிழர்களின் சார்பில் நடவடிக்கையில் இறங்கப் போவதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதன் நோக்கமும் இலக்கும் தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் இந்தியா உசாரகி விட்டது.

காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு தனது நாட்டில் இயல்பு நிலமையை ஏற்படுத்த முடியாத இந்திய அரசால் எப்படித் தான் தமிழீழப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். குழப்ப நிலையை ஏற்படுத்த மாத்திரம் அதனால் முடியும் என்பது வரலாற்று உண்மை.

மேற்கு நாடுகளின் நகர்வுகள் பற்றிய விவரங்கள் எமக்கு சரிவரக் கிடைக்கவில்லை. இந்தியாவை மீறி அவர்களால் என்ன செய்ய முடியுமோ தெரியவில்லை. அப்படிச் செய்யத் துணிந்தால் இந்தியா அதை அனுமதிக்குமா என்பது மிக முக்கியமான கேள்வி.

ஒன்றை மாத்திரம் இவ்விடத்தில் உறுதியாகக் கூறமுடியும். இந்தியா செக்மேற் செய்யத் தயாராகி விட்டது. அழிவை ஏற்படுத்தும் இந்திய அரசினால் ஆக்கபூர்வமான கருமம் செய்ய இயலாது. இந்திய நாட்டின் நவீன இராசதந்திரப் போக்கு இப்படித் தான் இருக்கிறது.

தமிழீழத்தை அழித்தவர்களால் அதற்கு மாற்றீடாகத் ஏதோவொரு கட்டமைப்பை தன்னும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை. இது ஈழத் தமிழர்களின் சோக வரலாறு மாத்திரமல்ல இந்தியாவின் சோக வரலாறாகவும் அமைகின்றது.

மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ சர்வாதிகார ஆட்சி ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. தமிழினத்தின் தேசிய ஆன்மா ஆயுத பலாத்காரத்தின் மூலமாக நசுக்கப்படுகிறது தமிழீனத்தை அடிமைப் படுத்தும் நோக்குடன் சிங்கள அரசு செயற்படுகிறது.

இதற்கு இந்தியாவின் நடவடிக்கைகள் தான் காரணம். மீண்டும் ஈழத் தமிழினத்திற்கு மேலதிக சிக்கல்களையும் உபத்திரவங்களையும் ஏற்படுத்த இந்தியா ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அறிகிறோம். தமது இராசதந்திரக் குறைபாடுகளுக்காக தமிழனைப் பலிக்கடாவாக்க இந்தியா முனைப்புக் காட்டுகிறது.

நீண்டதும், கடினமானதும் அபாயகரமானதுமான தமிழீழ யுத்தத்தில் எமது வீரார்கள் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள், துன்பங்களை எழுத்தில் விவரிக்க முடியாது. இது தேசிய தலைவர் பிரபாகரனின் வாக்கு மூலம். வீரர்கள் என்ற பதத்துடன் பொது மக்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

போர் முடிந்தாலும் போராட்டம் முடியவில்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்தே வரலாறு படைக்கும் சக்தி வாய்ந்த ஆபூர்வ மனிதர்கள் தோன்றுகிறார்கள் போராட்ட வடிவங்கள் மாறலாம் விடுதலை இலட்சியம் மாறமாட்டாது. தமிழுறவுகள் இதை நன்கு உணர வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.