Wednesday, April 21, 2010

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இம்முறையும் இழப்பு

கண்டி மாவட்டத் தமிழ் மக்கள் இம்முறையும் தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 85 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ள போதும் ஆளுங்கட்சியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிட்ட எந்தவொரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் கண்டிமாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இந்தக்கட்சியில் போட்டியிட்ட இராஜரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மதியுகராஜாவும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸதபா 20 ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளாலும் நாவலப்பிட்டிய மீள்வாக்களிப்பில் முஸ்லிம் மக்கள் வழங்கிய பெரும் ஆதரவாலும் வெற்றி பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் போட்டியிட்ட மஹிந்தானந்த அலுத்கமகே 146,765 வாக்குகளைப் பெற்று கண்டி மாவட்டத்தில் முதன்மையாக வெற்றி பெற்றுள்ளார். அத்தோடு கெஹலிய ரம்புக்வெல்ல 133,066 வாக்குகளையும், எஸ்.பி. திஸாநாயக்க 108,169 வாக்குகளையும் லொகான் ரத்வத்த 81,812 வாக்குகளையும், எரிக் வீரவர்தன 54,195,திலும் அமுனுகம 45,909, பைசர் முஸ்தபா 44,648, சரத் அமுனுகம 44,478 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நான்கு பேர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் 54,937 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம 54,047 வாக்குகளையும், லக்ஸ்மன் கிரியெல்ல 53,690 வாக்குகளையும், எம்.எச்.எம். ஹாலீம் 46,240 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கண்டி மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339819 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 192798 வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி 23,728 வாக்குகளையும் பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.