தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எழுந்தமானமாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாதென கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் இனவாதம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் கருத்தை தாம் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுயநிர்ணய உரிமையை அரசியல் தீர்வினூடாக பெற்றுக் கொடுக்கவே தாம் முயற்சி செய்து வருவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சிக்கு சர்வதேச அரங்கில் பூரண ஆதரவிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா அரசாங்கம் தமது கட்சியைத் தடை செய்யுமாயின், சர்வதேச ரீதியில் மக்களைத் திரட்டி சாத்வீகமான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் குறித்து ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசித்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் பிரிவினைவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.அவர்கள் இன்றும் தனிநாடு பற்றிப் பேசுகிறார்கள். அதிகாரத்தைப் பகிர்வது பற்றிப் பேசுகிறார்கள். இன்றும் வடக்கு, கிழக்கு இணைப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். பொலிஸ் அதிகாரம் பற்றிப் பேசுகிறார்கள். இவ்வாறு விஷமத்தனமான விடயங்களை மக்கள் மத்தியில் பரப்பி இனவாதத்தைத் தூண்டுகிறார்கள்”.
”நாங்கள் முப்பது வருட காலமாக பல்வேறு இழப்புகளைச் சந்தித்து நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம். இனியும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். இவ்வாறு இனப்பாகுபாட்டினைத் தூண்டும் கட்சிகளை நீதியான வழியில் தடைசெய்ய வேண்டும். இனவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பலம் பொருந்திய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம்’ என அவர் தனதுரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.