நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு நோர்வேயிலிருந்து மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென நோர்வே நாடு வாரியான செயற்பாட்டுக் குழுவினால் சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆணைக்குழுவின் முதன்மை தேர்தல் ஆணையாளராக நோர்வேஜியரான சமூக மானிடவியல் ஆய்வாளர் கலாநிதி Eugene Guribye அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் இணைப்பாளராக திரு. நிர்மலநாதன் காசிநாதன் அவர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பலைக் கருத்திற் கொண்டு, நோர்வேயிலிருந்து தெரிவு செய்யப்படவேண்டிய மூன்று பிரதிநிதிகளில் இரண்டு பிரதிநிதிகள் நோர்வேயின் கிழக்கு பிராந்தியத்திலிருந்தும், ஒரு பிரதிநிதி கிழக்குப் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள ஏனைய பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் தெரிவு செய்யப்படுவர் எனவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வேட்பாளர்களாக போட்டியிட முன்வருவோர் தமது வேட்பு மனுக்களை தேர்தலைப் பொறுப்பெடுத்து நடாத்தும் சுயாதீனமான ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். அதற்கான நடைமுறை பின்வருமாறு:
இத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட முன்வருவோர் வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தினை www.tamilvalg2010.com எனும் இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் Tamil Transnational Network of Norway, Postboks 60, 2016 Frogner எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஏப்ரல் 15ஆம் நாள் வரை (15.04.2010) வேட்பாளர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
வேட்பாளர் தகமை:
ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருப்பதோடு, தேர்தல் நாளன்று (02.05.2010) 17 அகவை நிறைவடைந்த அனைவரும் (அதாவது 1993 ஆம் ஆண்டு மே 2ஆம் நாளும் அதற்கு முன்னரும் பிறந்த அனைவரும்) தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும். வேட்பாளர்கள் நோர்வே நாட்டில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
வாக்குப்பதிவு:
நோர்வே தழுவிய நிலையில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு நடாத்தப்படவுள்ளது. 15 வாக்குநிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
நோர்வேயின் பூகோள அமைப்பு, நிர்வாகப்பிரிவுகள், போக்குவரத்து தொடர்புகள், ஈழத்தமிழர்களின் குடிசனப்பரம்பல் ஆகியவற்றினைக் கவனத்திற்கொண்டு ஆகக்கூடிய சாத்தியமாக 15 மையங்களில் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதோடு, வாக்காளர்கள் மிகக் குறைந்த சிரமங்களுடன் வாக்களிப்பில் பங்குபற்றுவதற்கும் வழிசெய்யப்படவுள்ளன.
வாக்காளர் தகமை:
ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருப்பதோடு, தேர்தல் நாளன்று (02.05.2010) 17 அகவை நிறைவடைந்த (அதாவது 1993 ஆம் ஆண்டு மே 2ஆம் நாளும் அதற்கு முன்னரும் பிறந்த அனைவரும்) நோர்வேயில் வசிக்கும் அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.
வாக்களிப்பு நிலையங்கள்:
வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரங்கள் வருமாறு:
ஒஸ்லோவில் Stovner, Veitvet மற்றும் Bryn ஆகிய இடங்களில் 3 வாக்களிப்பு நிலையங்கள், Lørenskog, Asker மற்றும் Bærum, Drammen, Fredikstad, Bergen, Stavanger, Trondheim, Florø, Ålesund, Hareid Tromsø, Narvik ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தமாக 15 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நோர்வேயில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள infonorway@govtamileelam.org எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.