Tuesday, March 09, 2010

மாவீரன் பண்டார வன்னியன் நடுகல்லையும் சிதைத்த இராணுவம்


வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.
இதுவரைகாலமும் அந்தப் பகுதி மக்களால் புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டுவந்தது. குறிப்பிட்ட நினைவுக்கல்லே வன்னியின் தொன்மையையும் பண்டாரவன்னியனின் சிறப்பையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்மான ஒரே ஒரு நினைவுக்கலாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே தனியான சுண்ணக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த நினைவுக்கல் அமையப்பெற்றமையால்த்தான் அது அமைந்துள்ள கிராமம் கற்சிலைமடு என பெயர் பெற்றது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் சிதைக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்றின் ஊடகர் ஒருவர் ஊடாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் துயிலிடங்களை அழித்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து வன்னி மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்.

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமண்ணின் இறுதி மன்னன். இலங்கைத் தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப் பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு? அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னி முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான்.

அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.