இலங்கை சுதந்திரமடைந்த 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் சமஷ்டி தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தவொரு சிங்கள கட்சிகளும் உறுதிமொழியை அளித்திருக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றிருந்த சரத் பொன்சேகாவும் சமஷ்டி முறைமையை நிராகரித்திருக்கிறார். சமஷ்டியை அமுல்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடிக்கவுள்ளதாக பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணுவதற்கு தனது சக்தியை சகல வழிகளிலும் பயன்படுத்தப் போவதாக அக்கட்சி கூறியுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான பங்காளியாக ஜே.வி.பி. உள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியானது யுத்தத்துக்குப் பின்னரான அரசியல் கூட்டமைப்புத் தொடர்பாக அமைதியாக இருக்கிறது. ஆயினும் ஏதோவொரு விதத்தில் தமிழ் மக்களைக் கவர்ந்திழுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பலவற்றை அகற்றி அங்கு குடியேறுவதற்கு இடமளிக்கப்படும் என்று ஐ.தே.க. உறுதியளித்திருக்கிறது. அத்துடன், பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்த நடவடிக்கையெடுக்கப்படும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
அதேசமயம், தற்போதைய மாகாணசபை முறைமைக்கு அப்பால் செல்லப் போவதாகவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கூறுகிறது. 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் செயற்படப்போவதாக அக்கட்சி கூறுகின்ற போதிலும் அதன் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி,பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்று பல தடவைகள் கூறியுள்ளார்.
ஆனால், அநேகமாக சகல தமிழ்க் கட்சிகளும் சமஷ்டி முறைமையை வலியுறுத்தியுள்ளன. வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒன்றிணைந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழர்களின் தாயகத்திற்கு உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறது.
அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி,பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டுள்ளது.
இதனையும் மத்திய அரசின் பங்கினையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கேட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.