அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெறவேண்டுமென்று ஐ.நா. அழைப்புவிடுத்திருப்பதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. இதேவேளை, யுத்தம் நடத்தப்பட்ட விதம் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகளை அல்ஸ்ரனின் அறிக்கை கொண்டிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் பேச்சாளர் ரூவேர்ட் கொல்வில்லி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
“முழுமையானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை முக்கியமானதென்று நாம் நம்புகிறோம். இந்த யுத்தம் தொடர்பாக பெரியதொரு கேள்விக்குறி தொக்கி நிற்குமானால் முழுமையான விசாரணை அவசியமானதாகும். இலங்கை அரசும் படையினரும் தவறு எதுவும் இழைத்திருக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்று ரூபேர்ட் கொல்வில்லி தெரிவித்ததாக ஏ.பி. செய்திச்சேவை தெரிவித்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 16 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆரவாரமான சச்சரவு ஏற்பட்டிருக்கிறது.நான்காவது ஈழப்போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்களின் சாத்தியப்பாடு தொடர்பாக இலங்கை அரசாங்கம் பரிகாரம் காண்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு உதவுவதற்காகவும் தனக்கு மேலும் ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் அடங்கிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கொழும்புக்குத் தெரிவித்திருப்பதாக ஐ.நா. அறிவித்ததையடுத்து புதிய சர்ச்சை மூண்டுள்ளது.
கடந்த ஆகஸ்டில் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிநாடாக் காட்சியானாது நம்பகத் தன்மையானது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கடந்த வியாழக்கிழமை நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரண தண்டனை விவகாரங்களை கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்ததாக ஐ.நா.வின் செய்தி நிலைய இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது.
நீதி விசாரணைக்குப் புறம்பான மரணதண்டனையை இலங்கைப் படையினர் நிறைவேற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த ஒளிநாடா நம்பகத்தன்மையானது என்று குறிப்பிட்டிருந்த அவர் இலங்கைப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களின் சாத்தியப்பாடு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.
அதேசமயம் இந்த அறிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான விதத்தில் பதில் அளித்திருக்கிறார். மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கை ஒரு சுதந்திரமான நாடு என்ற வகையிலும் ஐ.நா.வின் உறுப்பினராக இருக்கும் நிலையிலும் அறிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் இலங்கை அரசுக்கு ஐ.நா. அறிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.2009 மே யில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரிலிருந்து இலங்கைக்குள்ளேயும் வெளியேயும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசப்படும் நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய திருப்பங்கள் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் துரிதமாக இடம்பெற்று வரும் மாற்றங்கள் பிரதான போட்டியாளர்களுக்கிடையில் போட்டியை கடுமையாக்கியுள்ளன. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழு அளவிலான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படுவது முக்கியமானது என்றும் அதற்கு இலங்கை அரசுக்கு உதவ ஐ.நா. தயாராக இருப்பதாக பிரிப் அல்ஸ்ரன் கூறியிருந்தார்.இதற்குப் பதிலளித்திருக்கும் ஜனாதிபதி இலங்கை சுதந்திரான நாடு என்றும் தமது சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை ஐ.நா.அதிகாரிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
“எந்தவொரு தவறான நடத்தையிலும் எமது வீரமிக்க படையினர் சம்பந்தப் பட்டிருக்கவில்லை என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. உலகிலேயே சிறந்த ஒழுக்கம் மிக்கவர்கள் எமது படையினராகும். பொன்சேகாவின் அறிக்கையின் விளைவாக எமது பாதுகாப்பு அதிகாரிகள் ஆபத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் இருக்கும் போது அவர்களை கைது செய்ய முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக உத்தியோக பூர்வ இணையத்தளம் குறிப்பிட்டிருக்கிறது.
அதேசமயம் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் இராஜதந்திர விதிமுறையை மீறியிருப்பதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கண்டனம் தெரிவித்திருந்தார்.ஐ.நா.வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் நீதி, நியாய நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விசேட அறிக்கையாளருக்கும் நியூயோர்கிலுள்ள ஐ.நா.செயலகத்துக்கும் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.