அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கியதாக முழுக் கிழக்கு மாகாணத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பாரென ஜெனரல் சரத் பொன்சேகா இரகசிய தேர்தல் ஒப்பந்தமொன்றை செய்திருக்கிறார். இவ்வாறு ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு. இனியபாரதி தெரிவித்துள்ளார். அத்துடன், இது ஒட்டு மொத்த தமிழனத்தையும், தமிழினத்தின் இருப்பையும் கேள்விக்குறியாக்குகின்ற சதிவேலைக்கு ஒப்பானதாகும்.
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு. இனியபாரதி காரைதீவு பிரதேச சபையின் பொதுச்சந்தைத் திறப்பு விழா மற்றும் 5 ஆவது வித்ய சாகித்திய விழா ஆகியவற்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான தேர்தல் அல்ல, மாறாக இத் தேர்தல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழர்களுக்குமிடையிலான தேர்தலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இனியபாரதி அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
"தமிழினத்தைத் திட்டமிட்டுப் புறக்கணித்து, அழித்து அதில் வெற்றி கண்டதாக நினைக்கும் சரத் பொன்சேகாவுக்கு எந்தத் தமிழனும் வாக்களிக்க மாட்டான். தமிழினத்தை அழிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சரத் பொன்சேகா அவரது வாழ்க்கைக் காலத்தில் மொத்த தமிழனத்தை அழிக்கும் வேலையில்தான் செயற்பட்டிருந்தார்.
அவருக்கு வாக்களிக்க தன்மானமுள்ள தமிழன் எவரும் முன்வரமாட்டான். தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பேரிழப்புகளை இந்த யுத்தமும், இன வன்முறைகளும் ஏற்படுத்தியுள்ளன. இனியாவது நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இன்றைய அமைதியான, சுதந்திரமான சூழலில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திகள், முன்னெடுக்கப்பட வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக வரவேண்டும்.
இலங்கையில் மூவின மக்களாய்ப் பிரித்து முஸ்லிம்களிடம் கிழக்கை ஒப்படைக்க இருக்கும் சரத்பொன் சேகாவினால் எவ்வாறு இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்? எனவே, தமிழில் பேசி பெரும்பான்மை, சிறுபான்மை என எந்தப் பிரிவுமில்லை, அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் எனக் கூறி பல அபிவிருத்தித் திட்டங்களை இன, மத, பிரதேச பேதம் பார்க்காமல் முன்னெடுத்து வரும் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே தமிழினம் அணிசேர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.