இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட்டின் வெளிவிவகாரக் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள நோர்வே ஈழத் தமிழர்கள் கவுன்ஸில் தமிழர் தேசியப் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் நலன் ஆகியவற்றுக்கு உகந்த யதார்த்தபூர்வமான கொள்கைத் திட்டமொன்றை உருவாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியைக் கோரியுள்ளது. நோர்வேயின் ஈழத் தமிழர்கள் கவுன்ஸில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறுவதற்காக நோர்வேக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்புப் பேரணியொன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ஒபாமாவிற்கான மேற்படி கடிதத்தில் நோர்வே தமிழர்கள் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு :
நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈழ மக்களின் நோர்வே கவுன்ஸில், அமெரிக்க செனட் குழு இலங்கையுடனான உறவுகளை மீள வடிவமைப்பது தொடர்பில் தெரிவித்துள்ள பரிந்துரைகள் குறித்து கவலை அடைந்துள்ளது.
ஈழத் தமிழர்கள் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் கடப்பாட்டை இந்த அறிக்கை முற்றிலுமாக அலட்சியம் செய்துள்ளது. மாறாக செனட் குழுவின் இவ்வறிக்கை அரசியல் தீர்வு குறித்தோ அல்லது மனிதாபிமான நிவாரணம் பற்றியோ எவ்வித பரிந்துரையையும் முன்வைக்கவில்லை.
இலங்கை அரசை அமெரிக்காவின் கேந்திர நலன்களுக்காகப் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலப்படுத்துவதன் அவசியம் பற்றியே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பூகோள கேந்திர நலன் குறித்த கரிசனைகளை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம்.
இதேவேளை அமெரிக்காவின் நலனும், இலங்கைத் தமிழர்களின் நலனும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருப்பதை செனட் குழுவின் பரிந்துரைகள் கணக்கில் எடுக்காதமை கவலை அளிக்கின்றது.
மாறாக அதற்கு எதிராக அந்த அறிக்கை அமைந்துள்ளது. தமிழர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவின் நண்பர்களாகவே உள்ளனர்.
வெளிவிவகார கொள்கைகளில் புதிதாகப் புகுத்தப்படும் விடயங்கள் கேந்திர முக்கித்துவம் வாய்ந்த தென் இந்திய இலங்கைப் பிராந்தியத்தில், தந்திரோபாய முக்கியத்துவம் பெற்ற தமிழ் அமெரிக்க உறவிற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இலங்கைத் தமிழர் விடயத்திற்கு அரசியல் தீர்வே அவசியம் என அமெரிக்கா எப்போதும் தெரிவித்துள்ளது.
எனினும் உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஈழத்தமிழர்கள் இராணுவத் தீர்வின் துயரத்தையும் அதிர்ச்சியையும் சந்திக்கும் துரதிஷ்ட நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழர்களின் நீண்டகால அபிலாஷைகளுக்கான அரசியல் தீர்வைக் கைவிடுவது அல்லது தள்ளிப் போடுவது எவ்வாறு எவருக்காவது பூகோள ரீதியில் நண்மையளிக்கும் என்பது புதிராகவே உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.