Wednesday, December 23, 2009

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை ‐ ஐ. நா மனித உரிமை பேரவையிடம் அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கெதிராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்த யுத்தக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையிடம் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசேடப் பிரதிநிதி பிலிப்ஸ் அல்ஸ்டன் கடந்த 21ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி அறிவித்துள்ளதை அடுத்தே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, ஜெனரல் சரத் பொன்சேக்கா முன்னர் தெரிவித்த கருத்தை மறுத்து இரண்டாவது முறையாகத் தெரிவித்த கருத்தின் மூலம் அவர் முதல் தெரிவித்த கருத்துக்கள் செல்லுபடியற்றதாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையானது இந்த விடயம் தொடர்பாக செயற்பட சிறந்த அடிப்படையாக அமைந்துள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சரத் பொன்சேக்கா முதலில் தெரிவித்த கருத்தினால் நாட்டிற்கும், நாட்டின் நற்பெயருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஏற்பட வேண்டிய பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் பொன்சேக்கா இராணுவத்திற்கு மிகப்பெரிய அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரின் இந்தக் கருத்துக் காரணமாக எதிர்காலத்தில் இலங்கை பாதிப்பான பலாபலன்களை எதிர்நோக்க நேரிடும். இராணுவ வீரர் ஒருவர் வெளிநாட்டிற்குச் செல்ல வீசா பெற்றுக்கொள்வதில் கூட இது பாரதூரமான அழுத்தங்களை ஏற்படுத்தும் என அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கூறியுள்ளார்.

அதேவேளை, சர்வதேச மட்டத்தில் பொய்யான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கைக்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தின் ஆத்மகௌரவத்தைப் பாதுகாத்து அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் முறியடித்திருந்த வேளையில் சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல் காரணமாக மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமையானது கவலைக்குரிய விடயம் என மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இலங்கைக்கெதிராக போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த சர்வதேசம், இறுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக அமைதியானது. தற்போது பொன்சேக்காவின் கருத்து காரணமாக சர்வதேசத் தரப்பினர் மீண்டும் இலங்கை குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியான பிலிப்ஸ் அல்ஸ்டன், மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை குறித்து அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தயாராகவுள்ளது எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.