நழுவிச் செல்லும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சூழ்ச்சிகளையும் திருட்டு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகிறார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. தேசப்பற்று, தேசத்துரோகம் மற்றும் சூழ்ச்சிகள் என்பன பற்றி பரவலாக பேசப்படும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையான தேசத்துரோக சூழ்ச்சிக்காரர்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று தேசிய பிக்குகள் முன்னணியின் ஊடகச் செயலாளர் வகல்லே உதிதஹிம் தேரர் கூறினார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், பிரபாகரன் இல்லாத போதும் அவருடைய ஈழக்கனவை நிறைவேற்றிக்கொள்ளும் வகையிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கிப் போகின்றது. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.
அதிகாரத்தை விட நாட்டை பற்றியே அதிகமாக சிந்திக்கவேண்டிய தருணமே இதுவாகும், ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தருணத்தில் தனது அதிகாரத்திற்காக பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த நாட்டை பிரிவினைவாதிகளுக்கு காட்டிக்கொடுக்க முயற்சிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் வாய்திறக்காமல் இருக்கின்றார்கள்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 10 அம்ச கோரிக்கைகளுடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அக்கோரிக்கைகளில் சுயாட்சி மற்றும் 13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று அதிகார பரவலாக்கல் மேற்கொள்ளல் போன்ற அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவினை வாத கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இவ்வாறான தேசத்துரோக சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருக்கின்றார்கள்.
எனவே இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கவேண்டும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தமது அதிகாரத்திற்கு சவாலான ஒரு சூழ்நிலைவரும் போதும் இவ்வாறான இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளார்கள். எனவே தான் மஹிந்த ராஜபக்ஷவும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காக அவ்வாறான இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றார்கள்.
எனவே இப்பாரதூரமான இந்த இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் நாட்டின் பிரஜைகளான நாம் ஒவ்வொருவரும் அவதானத்துடன் செயல்படவேண்டும். தேசப்பற்றாளர்கள் என்று தம்மை இனங்காட்டிக்கொண்டு இரகசியமாக மேற்கொள்ளும் இவ்வாறான தேசத்துரோக சூழ்ச்சிகளை நாம் தோல்வியடையச் செய்யவேண்டும்.
அன்று ஜனாதிபதியுடன் இருந்தவர்கள் இன்று எதிரணியில் சென்று செயற்படுவதற்கான காரணமென்ன? நாட்டை தேசத்துரோகிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
பயங்கரவாதத்திற்கெதிராக பெற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்துவதானது தமது சூழ்ச்சி நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே என்பது தற்போது தெட்டத்தெளிவாகியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.