Saturday, April 12, 2008

ஐரோப்பிய ஒன்றியத்திடம் வர்த்தக சலுகையைப் பறிகொடுத்து விட்டு வந்த பீரிஸ் அதனை மறைக்க நடத்திய கோமாளித்தனங்கள்: "த மோர்ணிங் லீடர்"

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008]

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் சலுகையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் ஜி.எல்.பீரிஸ், அண்மையில் பிரசல்சில் பறிகொடுத்து விட்டு திரும்பிய பின்னர் தனது தோல்வியை மறைப்பதற்கு அவர் நடத்திய கோமாளித்தனங்களை கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்ணிங் லீடர்" அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை (09.04.08) வெளிந்த "த மோர்ணிங்க் லீடர்" வார ஏட்டில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

ஜி.எஸ்.பி. பிளஸ் எனப்படும் ஏற்றுமதித்துறைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவியவருமான ஜி.எல்.பீரிஸ் பிரசல்சிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியமானது நீண்டகாலமாகவே, பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக ஒப்பந்தத்தை சிறிலங்காவின் அரசியல் யாப்பில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த அனைத்துலக ஒப்பந்தமானது சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு அப்பாற்பட்டது என்று 2006 ஆம் ஆண்டு சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆயினும் அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வந்தது.

ஐரோப்பிய ஒன்றியமானது, நல்லாட்சி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை, தொழில் மற்றும் அரசியல் நியமனங்களை உரிய வகையில் நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை என்ற ஏற்றுமதிக்கான வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருட இறுதியில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை அனுமதி நீட்டிப்பு நடைபெறவுள்ளது.

இந்த சலுகையின் மூலம் சுமார் 7,000 பொருட்களை ஐரோப்பாவிலிருந்து சுங்கத்தீர்வையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

சிறிலங்காவின் ஆடைக்கைத்தொழில் முற்று முழுதாக ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையிலேயே தங்கியிருக்கிறது.

சுமார் 100,000 தொழிலாளர்களினது வாழ்க்கை மற்றும் வருடாந்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஆடைக் கைத்தொழில் மூலம் சிறிலங்கா ஈட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நீடிப்புக்காக ஜி.எல்.பீரிஸ், பிரசல்சுக்கு பயணமானார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையை நீடிக்க மறுத்திருக்கிறது. இந்தத் தோல்வியுடன் சிறிலங்காவுக்கு திரும்பினார் ஜி.எல்.பீரிஸ்.

தனது பயணத்தின் தோல்வியை மறைப்பதற்காக பல கோமாளித்தனமான கூத்துகளை அவர் நிகழ்த்தியும் உள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழந்தமைக்கு தமது முன்னாள் தலைவரான ரணில் விக்கிரமசிங்க எழுதிய கடிதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதமும்தான் காரணம் என்று முதலில் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

அதாவது, இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடித மூலம் தெரிவித்ததாக ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார்.

அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்க வேண்டாம் என கோரியுள்ளதாகவும் பீரிஸ் கூறினார்.

ஆனால் உண்மையில், சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொடுக்க வழிவகை செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடித மூலம் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதி கடந்த சண்டே லீடர் வார ஏட்டில் வெளியானது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பீட்டர் மென்டல்சன் மற்றும் வெளியுறவு ஆணையாளர் பெனிட்டா பெராரோ வெல்ன்டர் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்கள் குறித்து திருப்தியடைவில்லை என்றும் ஜீ.எல்.பீரிசிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான கடிதத்தை தன்னிடம் காண்பிக்குமாறு கொல்லப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஜி.எல்.பீரிசிடம் கோரியிருந்தார். ஜி.எல்.பீரிசிடம் அத்தகைய கடிதம் இல்லை என்பது மகிந்தவும் நன்றாக அறிந்த விடயமே.

இதனிடையே கடந்த 7 ஆம் நாள் ஐ.தே.கவின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்த விடயம் தொடர்பாக ஜி.எல்.பீரிசிடம் வினவினார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பூதவுடல் இறுதி வணக்கத்திற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட போது அருகிலிருந்த ஜி.எல்.பீரிசிடம் வெளிப்படையாகவே, இச்சலுகை விவகாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்டார்.

2005 ஆம் ஆண்டு தேர்தல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவு வெளிப்பட்டதாக ரவி கருணாநாயக்க அமைச்சருக்கு நினைவூட்டினார்.

மேலும், ரணில் தொடர்பிலான குற்றச்சாட்டினால் தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜி.எல்.பீரிசிற்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான இந்த கலந்துரையாடல் சுமார் 15 நிமிடங்களுக்கு நீடித்தது.

இந்த கலந்துரையாடலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தனர்.

இந்த விடயம் தொடர்பாக ஐ.தே.க. கட்சியினர் செவ்வாய்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்க உத்தேசித்திருந்ததாக மற்றுமொரு உறுப்பினர் தெரிவித்தார்.

எனினும், மிகவும் அசௌகரிய நிலைக்குத் தள்ளப்பட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாகவே ஐ.சி.சி.பி.ஆர் விடயங்களுக்கு தீர்வு எட்டப்பட்டதாக விரைந்து கூறினார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தக்க வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அந்த பழியை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்த முயற்சிக்க வேண்டாம் என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் கடிதம் உரிய நேரத்தில் அனுப்பப்படவில்லை என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்ததன் ஊடாக ரவி கருணாநாயக்கவின் வாதத்தில் உள்ள நியாயம் வெளிப்பட்டது.

உங்களுடன் பயணம் செய்த குழுவினரில் ஒருவர் எங்களுக்காக கடிதத்தை எடுத்துச் சென்றார் என்று எப்படி உங்களால் கூற முடியும் என ரவி கருணாநாயக்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், உண்மையில் நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த நிலமைகளை நீங்கள் சரியாக கையாண்டிருந்தால் எங்களது ஆதரவைக் கொண்டு ஜி.எஸ்.பி. பிளசைப் பெற்றுக்கொள்ள சாதகமாக பயன்படுத்தியிருக்கலாம்.

எனினும், உங்களுக்கு இருந்த ஆளுமை குறைபாட்டினால் முயற்சி தோல்வியடைந்தது. உங்களது பிழைகளை மூடி மறைத்துக் கொள்ள வழமைப் போன்று தமிழீழ விடுதலைப் புலி எதிர்ப்பு கோட்பாட்டை கேடயமாக பயன்படுத்துகின்றீர்கள். உங்களது நடத்தைகள் மிகவும் கவலையளிக்கின்றது என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

மகிந்தவை பிழையாக வழிநடத்துவதன் மூலம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு குறிப்பாக ஆடைக் கைத்தொழில்துறைக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்துகின்றார் என்று ரவி கருணாநாயக்க மேலும் குற்றம் சாட்டியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.