Friday, April 18, 2008

இந்தியப் பிரதமருடன் வைகோ சந்திப்பு: நோர்வேப் பயணம் குறித்து விளக்கம்

[வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்து கலந்து உரையாடியதுடன் தனது நோர்வேப் பயணம் குறித்தும் விளக்கியுள்ளார். இச்சந்திப்பு புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 5:10 மணிமுதல் 5:35 மணிவரை நடைபெற்றது. சந்திப்பின் போது மன்மோகன் சிங்கிற்கும் வைகோவிற்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்கள் பின்வருமாறு: சிறிலங்காவிற்கு இந்தியா ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ கடிதத்தில் எழுதி இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், "நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை" என்றார். "சிறிலங்காவின் இராணுவத் தளபதிகளும், அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதாகச் சொன்னார்களே" என்றவுடன், "அது தவறான தகவல் - உண்மை அல்ல" என்றார் பிரதமர். அப்படியானால், "அங்கே உள்ள மக்களை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்கிறார்களா?" என்று கேட்டார் வைகோ. "பாகிஸ்தான், சீனாவிடம் சிறிலங்கா ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு இருப்பது எங்களுக்குத் தெரியும்" என்றார் பிரதமர். "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் தெரிவித்து இருக்கின்றோம்" என்றும் பிரதமர் சொன்னார். "வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம். அது ஒரே பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்கு மாறாக, கிழக்கு மாகாணத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது, அனைத்துலக சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக வடக்கு மாகாணத்தோடு நாங்கள் சேர்ந்து இருக்க விரும்பவில்லை என்று கிழக்கில் உள்ளவர்கள் கருதுவதாக ஒரு பொய்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக, இராணுவத்தைக் கொண்டு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி, உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசு முயற்சிக்கிறது" என்றார் வைகோ. "13 ஆவது சட்டத்திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறார்களே?"என்றார் பிரதமர். "அதைத் தமிழர்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். அந்த 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கு நீதி வழங்காது" என்றார் வைகோ. மேலும், "இப்போது உள்ள சூழ்நிலையில், சிறிலங்கா அரசுதான் தாக்குதல் நடத்தி வருகிறது- அவர்கள்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு, சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லி இந்தியா வற்புறுத்த வேண்டும்" என்று வைகோ கேட்டபோது, "வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்து விவாதிக்கிறேன்" என்றார் பிரதமர். புதினம்.கொம்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.