Monday, April 21, 2008

கருணாரட்ணம் அடிகளார் படுகொலை: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்

[திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2008]

வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் 20 ஏப்ரல் 2008 அன்று மாங்குளம்-மல்லாவி வீதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு கருணாரட்ணம் அடிகளார் தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் பிற்பகல் 12.30 மணியளிவில் இவரது ஊர்தி மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.

மக்களின் நலனுக்காகவும் மனித உரிமை நிலைமையினை மேம்படுத்துவதற்காகவும் எப்போதும் உழைத்து வந்த ஒரு செயற்பாட்டாளரை சிறிலங்கா அரசாங்கம் வேண்டும் என்றே இலக்கு வைத்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த இத்தகையதொரு தொண்டனைக் கோரமாகக் கொலை செய்தமையின் ஊடாக மனித உரிமையினை மதித்துச் செயற்படுவதில் தான் எந்தளவிற்கு இழிநிலையில் இருக்கின்றது என்பதனை சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் இலக்குவைத்துத் தாக்குதலை நடாத்தும் சிறிலங்கா அரசினது செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தினது இத்தகைய போக்கினைச் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், அனைத்துலக நாடுகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடாமல் இருப்பதற்கு, சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களைப் பிரையோகிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

தனது இளம் வயது முதலே மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த கருணாரட்ணம் அடிகளாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.