Sunday, March 30, 2008

நாயாற்றில் நடந்தது என்ன? குழம்பிப்போன கடற்படை

[ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008]

முல்லைத்தீவுக்குத் தெற்காக சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள நாயாறு கடற்பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான அல்ரா அதிவேக தாக்குதல் படகு (Ultra Fast Attack Craft- III) எவ்வாறு மூழ்கடிக்கப்பட்டது என்ற மர் மம் இன்னமும் படைத்துறை வட்டார ங்களில் நீடிக்கிறது.

கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னிரவு திருகோணமலையில் உள்ள கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தலைமையகத்தில் இருந்து, அரை டசின் அதிவேகத் தாக்குதல் படகுகள் ரோந்துப் பணிக்காகப் புறப்பட்டுச் சென்றன. 4 ஆவது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த சிறப்பு கடற்படைப் பிரிவின் (Elite Naval sea unit) இந்தப்படகுகள் சோடி சோடியாகச் சென்று முல்லைத் தீவுக்கு வடக்கே உள்ள சுண்டிக்குளம் வரையான கடற்பகுதியைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தப் படகுத் தொகுதியில் இருந்த இரண்டு படகுகள் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை வேளையில் கடும்மழை பெய்து கொண்டிருந்த போது, முல்லைத் தீவுக்குத் தெற்காக உள்ள நாயாறு கடற்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தன. திடீரென அதிகாலை சுமார் 2.10 மணியளவில் கொழும்பு "டொக்யாட்' நிறுவனத் தால் தயாரிக்கப்பட்ட P-438 அதிவேகத்தாக்குதல் படகின் அடியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது.

அதனையடுத்து படகினுள் வேகமாக நீர் உட்புகத் தொடங்கியது. படகின் கட்டளை அதிகாரி லெப். கொமாண்டர் குணவர்த்தனவும் வேறு நான்கு கடற்படையினரும் ஒருவாறு உயிர் காப்புப் படகில் ஏறிக் கொண்டனர். சிறிது நேரத்துக்குள் க438 படகு நீரில் மூழ்கி விட்டது. இதேவேளை இதனுடன் சென்று கொண்டிருந்த மற்றைய தாக்குதல் படகு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. உடனடியாக கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து மேலதிக கடற்படைப் படகுகள் அனுப்பப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. காலை 6.30 மணிவரை நடத்தப்பட்ட தேடுதலில் உயிர்காப்புப் படகில் இருந்த லெப்.கொமாண்டர் குணவர்த்தன உள்ளிட்ட ஐவரையும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு கடற்படைச் சிப்பாயையும்தான் உயிருடன் மீட்க முடிந்தது.

மூழ்கிய படகில் இருந்த மேலும் பத்து கடற்படையினர் காணாமற் போய்விட்டதாகவும் இவர்கள் பெரும்பாலும் இறந்திருக்கக் கூடும் என்றும் கடற்படை தரப்பில் லெப்.கொமாண்டர் றொகான் ஜோசப் தெரிவித்தார். ஆனால் வேறு சில தகவல்கள் பதினொரு கடற்படையினர் காணாமற் போயிருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் கடற்படைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதற்குக் காரணம், தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது புரியாத புதிராக இருப் பதனாலேயாகும். க 438 படகு கடற்கண்ணியில் சிக்கியதால் மூழ் கிப்போயிருக்கலாம் என்றே கடற்படைதரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு அமைச்சோ இது ஒரு சந்தேகத்துக்குரிய மர்ம மான தாக்குதலாக விபரித்திருக்கிறது.

புலிகள் இதுவரையில் இத்தகையதொரு தாக்குதலை நடத்தியிருக்கவில்லை என்றே பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள் ளது. 1991 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்ட பின்னர் கடற்படையின் பல தாக்குதல் படகுகள் (FAC), ரோந்துப்படகுகள்(IPC), பீரங்கிப்படகுகள் (FGB) போன்றன அவர்க ளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இவை கடற்கண்ணிவெடியால், நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகளால் குண்டு வைத்துத்தகர்த்து, கரும்புலிப் படகுகள் மோதி அல்லது டாங்கி,பீரங்கித் தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டன.

கடற்புலிகள் நேரடியான கடற்சமர்களை நடத்த முன்னர், தீவகக்கடலில் ஒரு "சீகாட்' ரக ரோந்துப் படகையும், கிளாலிக் கடலேரியில் இரண்டு "வோட்டர் ஜெட், ரோந்துப் படகு களையும் கடற்கண்ணி (Sea Mine) மூலம் தகர்த்திருந்தனர். 1995இல் "சீ டான்சர்' என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்துக்குள் நுழையும்போது புலிகளின் கடல் கண்ணியில் சிக்கி மூழ்கிப் போனது. இதற்குப் பின்னர் புலிகள் பெருமளவில் கடல் கண்ணிகளைப் பயன்படுத்தியதாகத் தகவல் இல்லை. ஆயினும் கடந்தவருடம் ஏப்ரல் மாதம் நாயாறு மற்றும் அதனை அண்டிய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ரோந்துப்படகு ஒன்று ஒரு தொகுதி கடற்கண் ணிகள் மிதக்க விடப்பட்டிருந்ததை அவதானித்திருந்தது.

இதன்பின்னர் கடற்படையின் விசேட பயிற்சி பெற்ற சுழியோடிகள் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத் தப்பட்டபோது, 24 கடல்கண்ணிகளை கைப் பற்றியதாக கடற்படை தெரிவித்திருந்தது. முன்னதாக 2006ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் கடற்படைப் படகுகளைத் தாக் கும் நோக்கில் எடுத்து வந்த, கடலுக்கு அடி யில் வெடிக்க வைக்கக் கூடிய ஒரு தொகுதி காந்த கடற்கண்ணிகளை படையினர் பமுனு கம கடற்பகுதியில் கைப்பற்றியிருந்தனர். ஆனால் இவற்றை கடற்கண்ணிகள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சுழியோடிகளே இவற்றை கப்பலுக்கு அடியில் பொருத்தி வெடிக்கச் செய்யும் வகையைச் சார்ந்ததே இதுவாகும்.

இவைதவிர கடற்புலிகள் அண்மைக் காலத்தில் கடல்கண்ணிகளைப் பயன்படுத்தியதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நாயாறில் p438 படகு கடற் கண்ணியில் சிக்கியிருக்கலாம் என்று கடற்படை கூறினாலும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுகின்றன. எத்தகைய வெடிப்பு சாதனம் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் எந்த வகையினது என்பன தொடர்பாக கடற்படை ஆராய்ந்து வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான படகு குறுகிய நேரத் துக்குள்ளாக நீரில் மூழ்கிவிட்டதே பெரும் ஆச்சரியமாகும்.

கடற்கரும்புலிகளின் படகு மோதி வெடித்து சேதமடையும் கடற்படைப் படகு கள், நீரில் மூழ்க ஒரு சில மணி நேரம் செல்வது வழமை. இத்தகைய கால அவகாசத்தைப் பயன்படுத்தி சில படகுகளை கடற்படையினர் கட்டி இழுத்துக் கொண்டு சென்றதும் உண்டு. அவ்வாறு இழுத்துச் சென்றபோது இடையில் மூழ்கியதும் உண்டு.

ஆனால், இம்முறை அதற்கு எந்தச் சாத்தியமும் இல்லாமல் சில நிமிடங்களிலேயே படகு கடலின் ஆழத்தில் அமுங்கிப் போய்விட்டது. டொக்யாட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தப் படகு இஸ்ரேலிய தயாரிப்பான Shaldag Mk II ரகத்தை ஒத்ததாகத் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்பகுதி அலுமினியத்தாலானதாகும். இலகுவில் மூழ்காத தன்மையுடைய இப்படகின் அடியில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பே நிகழ்த்தப் பட்டதாக கடற் படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக படைத்தரப்புக்குள் பல்வேறு குழப்பங்களும் இருக்கின்றன. முதலில் தாக்குதல் நடந்த நேரத்திலேயே படைத்தரப்புக்குள் முரண்பாடுகள் உள்ளன. கடற்படை தரப்பில் 2 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இராணுவமோ 2.45 மணியளவில் என்கிறது. பாதுகாப்பு அமைச்சோ 2.30 மணி என்கிறது. அரச தகவல் திணைக்களமோ 2.25மணிக்கு நடந்ததாகக் கூறுகிறது. இதில் எது சரியானது என்பதிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கடலில் இருந்து மீட்கப்பட்ட படகின் கட் டளை அதிகாரியான லெப்.கொமாண்டர் குண வர்த்தன "கடும்மழை பெய்து கொண்டிருந்த போது படகின் அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. கண்மூடித் திறப்பதற் குள் படகினுள் குபு குபுவென நீர் உட்புகத் தொடங்கியது. உடனடியாகப் படகைக் கைவிட்டு உயிர்காப்புப் படகில் தொற்றிக் கொண்டோம். தாக்குதல் நிகழ்ந்த போது சுற்றுப்பகுதியில் கடற்புலிகளின் எந்தப் படகும் காணப்படவில்லை. கடற் புலிகளுடன் சண்டையும் நிகழவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். அதேவேளை இந்தத் தாக்குதல் குறித்துத்தகவல் வெளியிட்டிருக்கும் புலிகள் கடற்சண் டையின் போது கடற்கரும்புலிகளே கடற் படைப் படகை மூழ் கடித்ததாகத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவுக்கும் நாயாறுக்கும் இடையில் கடந்த 22ஆம் திகதி அதிகாலை 2மணி யளவில் ரோந்து சென்ற கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதன்போது 2.10 மணியளவில் கடற்கரும்புலி களால் க438 படகு மூழ்கடிக்கப்பட்டு 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2.45 மணிவரையில் மோதல்கள் நீடித்ததாகத் தெரிவித்துள்ள புலிகள், லெப்.கேணல் அன்புமாறன், மேஜர் கனிநிலா, மேஜர் நிரஞ்சனி ஆகியோர் கடற்படைப் படகை மூழ்கடித்து வீரச்சாவடைந்ததாகவும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தாக்கு தலை நடத்திய லெப்.கேணல் அன்புமாறன் மற்றும் மேஜர் நிரஞ்சனி ஆகியோரின் நேர் காணல் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருப்பதோடு கரும்புலிகள் மூவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. அதேவேளை கடற்படையினரோ கடலில் எந்த மோதலும் நிகழவும் இல்லை, தாக்குதல் நடந்த இடத்தில் கடற்புலிகள் இருக்கவும் இல்லை என்று கூறியுள்ள நிலையில், புலிகள் கடற்சண்டை குறித்து வெளியிட்ட தகவல் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.


கடற்புலிகளுடன் மோதல் நிகழ்ந்திருந்தாலோ அல்லது அவர்கள் அப்பகுதியில் காணப்பட்டிருந்தாலோ உயிர் தப்பிய கடற்படையினரைக் காப் பாற்றியிருக்க முடியாது. அவர்களைப் புலிகளால் இலகுவாகக் கொன்றிருக்க முடியும் என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் புலிகள் ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? எதையாவது மூடிமறைத்து கடற் படையினரைக் குழப்பத்தில் ஆழ்த்த புலிகள் நினைக்கின்றனரா என்று சந்தேகங்கள் எழுந் துள்ளன. புலிகளின் வழக்கமான பாணியிலான வெடிமருந்துப் படகை மோதி வெடிக்கச்செய்த தாக்குதல் அல்ல இது என்று கடற்படை அடித் துச் சொல்கிறது. அவ்வாறாயின் கடலுக்கு அடியில் புலிகள் புதிய வகையான போர் உபகரணங்களைப் பரீட்சித்துப் பார்த்துள்ளனரா என்ற கேள்வி எழுகிறது. கடலுக்கு அடியில் சுழியோடிச் சென்று குண்டுகளைப் பொருத்தி கடற்படைப் படகுகளைத் தகர்க்கும் உத்தியைப் புலிகள் கையாளத் தொடங்கி சுமார் 14 வருடங்களாகி விட்டது. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் முதல் முதலாக இத்தகைய உத்தியைப் பயன்படுத்தி அ 520 என்ற கட்டளைக் கப்பலை நீரடி நீச்சல் பிரிவு கரும் புலியான கப்டன் அங்கயற் கண்ணி என்பவர் தகர்த்து அழித்திருந்தார்.


இந்தச்சம்பவம் நிகழ்ந்தது 1994 ஆம் ஆண்டி லாகும். இதன்பின்னர் திருகோணமலைத் துறை முகத்தில் "ரணசுறு', "சூரய' ஆகிய பீரங் கிப்படகு களை 1995இல் நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகள் மூழ்கடித்திருந்தனர். ஆனால் நாயாறு கடற்பகுதியில் நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகளால் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே கடற் படையினர் கருதுகி ன்றனர். வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் கடற்படைப்படகை நீரடி நீச்சல் பிரிவினரால் நெருங்க முடியாது. தரித்து நிற்கும் படகுகளை வேண்டுமானால் இவ்வாறு தாக்கமுடியும். நாயாறில் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்கிறது கடற்படை. கடற்கண்ணியைப் புலிகள் பயன்படுத்தியி ருப்பின் அவர்கள் கடற்சமர் நடந்ததாகவோ அல்லது கரும் புலித் தாக்குதல் என்றோ, 3 கடற்கரும்புலிகள் வீரச் சாவடைந்ததாகவோ அறிவித்திருக்கமாட்டார்கள். அத்துடன் கடற் கண்ணிகளை கண்டபடி விதைக்க முடியாது. கடற்படைப்படகு அதன் மீது மோதினால் மட்டுமே வெடிக்கும் தன்மை கொண்டது.

திட்டமிட்ட ஒரு நேரத்தில் கடற்கண்ணி யைக்கொண்டு தாக்குதல் நடத்த முடியாது. அதிலிருந்து விலகி ஒரு அடி தூரத்தால் சென்றால் கூட தாக்குதலில் இருந்து தப்பிவிடும். ஆனால் கரும்புலிகளால் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முடியும். முல்லைத்தீவு முதல் கொக்குளாய் வரையான கடற்பகு தியில் அண் மைக்காலமாக கடற்படையினர் அதிகளவில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த துடன், மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந் தனர். கடந்த 4ஆம் திகதி கிளிநொச்சியில் பூநகரி, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேச மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை புலிகளின் அர சியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது மீன வர்களின் பிரச்சினைகளை தாம் விரைவில் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பதாக பா.நடேசன் தெரிவித்திருந்தார். சந்திப்பின்போது ஆராயப்பட்ட முக்கிய விடயங்களில் வடமேற்கு மற்றும் வடகிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் மீது கடற்படை நடத்திவரும் தாக்குதல் கள், விமானத் தாக்கு தல்கள் ஆகியனவும் அடங்கியிருந்தன. கடற் படையின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவ தான உத்தரவாதத்தை வழங்கும் விதத்தில் அர சியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற் கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கலாம் என் றும் கருதப் படுகிறது.

எனவே இப்பகுதியில் கடற்படைக்கு ஒரு அடியைக் கொடுக்கப் புலிகள் திட்டமிட்டிருப் பார்கள். ஆனால் மீனவர்களின் படகுகளும் கடற்புலிகளின் பட குகளும் அதிகளவில் நட மாடும் பகுதியில் அவர்கள் கடற்கண்ணிகளை விதைத்திருப்பார்களா என்பது சந் தேகமே. அவ்வாறாயின் மோதலும் நிகழாமல், கடற் கண்ணியும் வெடிக்காமல் எவ்வாறு புலிகள் தாக்குதலை நடத்தியிருப்பர்? சிலவேளைக ளில் நீருக்கடியில் தாக்குதல் நடத்தக்கூடிய புதிய போராயுதங்கள் எதையாவது புலிகள் பயன்படுத்தியிருப்பார்களா என்ற சந்தே கமும் உள்ளது. கப்பல்களைத் தகர்க்கின்ற நீருக்கடியில் செலுத்தப்படும் ஏவுகணைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை டோபிடோ (Torpedo)என்று அழைப்பர். ஆனால் இவை மிகவும் விலை அதிகமானவை என்பதுடன் புலிகளின் கைக்கு இலகுவில் கிடைத்து விட வாய்ப்புகள் குறைவு. அப்படிக் கிடைத்திருந்தாலும் அதை பாரிய போர்க்கப்பல் மீதோ அல்லது பீரங்கிப் படகு மீதோ பிரயோகித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தவே புலிகள் முனைந்திருப்பர்.

இல்லையேல் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ஸ்கூட்டர்களின் (Under Water Scooter) உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க லாமோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆழ் கடல் ஆராய்ச்சியாளர்கள், சுழியோடிகளால் பயன்படுத்தப்படும் இந்த ஸ்கூட்டர்கள் வெளி நாடுகளில் தாராளமாகவும் மலிவாகவும் விற்கப்படுகின்றன. டோபிடோ 2000, டோபிடோ 2500, டோபிடோ3500 போன்ற நீருக்கடியில் பய ணிக்கும் ஸ்கூட்டர்கள் போன்ற ரகங்களை 1000 டொலர்களுக்கு குறைவாக வாங்க முடி யும். வேறு சில 2500 முதல் 5000 டொல ருக்கு வாங்கக் கூடியவையும் உள்ளன. ஸ்கூட்டர் என்றவுடன் தரையில் பயணிக்கும் ஸ்கூட்டர் போலக் கருதக் கூடாது. சிறியரகத் தைச் சேர்ந்த இவை சுமார் 30 மீற்றர் ஆழத்தில் 4கி.மீ வேகத்தில் ஆட்களை இழுத்துச் செல்லக் கூடியவையாகும். நீருக்கடியில் பயணிக்கக் கூடிய ஒரு வாகனமாகப் பயன்படுத்தக் கூடிய ரகங்களும் உள் ளன. இவற்றில் ஒருவர் பயணம் செய்ய முடியும். புலிகள் இத்தகைய ஸ்கூட்டர்களை கொள் வனவு செய்ததாக பல ஆண்டு களுக்கு முன் னர் தகவல்கள் வெளியான போதும் அவற்றைக் கடற்படைக்கு எதிராகப் பயன்படுத்திய தற்கான சான்றுகள் எவையும் கிடைக்க வில்லை. நாயாறு தாக்குதலில் புலிகள் நீருக்கடியில் பயன்படுத்தும் ஸ்கூட்டரை பயன்படுத்தியிருந்தால் கூட அவற்றில் 3கரும்புலிகள் பயணித் திருக்க வாய்ப்பில்லை. எனவே நீருக்கடியில் புதிய தாக்குதல் உபகரணங்கள் எதையாவது (நீர்மூழ்கி போன்ற) தயாரிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று தெரிய வில்லை. ஆனால் இந்தத் தாக்குதல் எத்தகையது என்ற விபரத்தைப் புலிகள் வெளியிடவில்லை. எவ் வாறு கடற்படைப்படகு மீது தாக்குதல் நடத்தப் பட்டது என்ற விபரத்தை வெளியிடப் புலிக ளின் இராணுவப் பேச்சா ளர் இராசையா இளந் திரையன் மறுத்து விட்டார். இதிலிருந்து புலி கள் படைத்தரப்பைக் குழப்பத்தில் ஆழ்த்த முனைவது தெரிகிறது.

புலிகள் இந்தத் தாக்குதலை எப்படி நடத்தியி ருந்தாலும் கடற்படைக்கு பெரும் அதிர்ச்சியை யும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் மிகவும் சக்திவாய்ந்த இந்த போருத் தியை அடுத்த தடவை கடற்புலிகள் கடற்படை யின் தாக்குதல் படகுகளில் பயன்படுத்துவதை விட பீரங்கிப்படகுகள், துருப்புக்காவிகள் மீது பயன்படுத்தவே எத்தனிப்பார்கள். ஏனெனில் இவற்றுக்கு ஏற்படுத்தக்கூடிய சேதம் அதிகமாக இருக்கும்.

கடந்த டிசம்பர் 26ஆம் திகதி கடற்படையின் மற்றொரு அல்ரா அதிவேகத் தாக்குதல் படகு நெடுந்தீவுக் கடலில் புலிகளால் மூழ்கடிக்கப் பட்டிருந்தது. அத்துடன் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கடற்படையின் கரையோர ரோந் துப்படகு (வோட்டர்ஜெட்) ஒன்றும் தலைமன் னாருக்கு வடக்கே மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடற்படை மற்றொரு தாக்குதல் படகை இழந்திருப்பது கடற்புலிகள் வலு விழந்து போய்விடவில்லை என்பதை மீளவும் நிரூபித்திருக்கிறது.

வீரகேசரி வாரவெளியீடு

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.