Friday, March 28, 2008

வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன?- முல்லை. கடற்சமரில் வெளிப்படுவது என்ன?: இளந்திரையன் விளக்கம்

[வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008]

வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன? என்பது குறித்தும் முல்லைத்தீவு கடற்சமரில் வெளிப்படுவது என்ன? என்றும் தமிழீழப் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கம் அளித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.08) அவர் வழங்கிய முழுமையான நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முனைப்புக்கள் பல முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய களநிலவரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாள் பாலமோட்டையில் சிறிலங்காப் படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான முதலாவது முன்னேற்ற முனைப்பு தாக்குதலை தொடங்கினர்.

அன்றில் இருந்து இன்றுவரை மன்னாரின் பல பகுதிகளிலும் அதேபோன்று மணலாற்றுப் பகுதிகளிலும் இத்தகைய சண்டைகள் வியாபித்திருக்கின்றன.

அதேநேரம் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் நாள் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் சிறிலங்காப் படைகள் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இந்தப் படை நடவடிக்கைகளும் வன்னிப் பெருநிலபரப்பு மீதான முன்னேற்ற முனைப்புக்களாகவே இருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளிலும் அவர்கள் பல முன்னேற்ற முனைவுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மூன்று தளங்களில் அவர்களின் தொடர்ச்சியான முனைவுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக மணலாறு, மன்னார் பெருந்தளம், வடபகுதியில் உள்ள கிளாலி, முகமாலை, நாகர்கோவில் தளம் என தொடர்ச்சியான நடவடிக்கைகளை செய்வதற்கான முனைவுகள் அவர்களிடம் இருக்கின்றன.

அவற்றிற்கு தகுந்த முறையிலும், உத்திகளின் அடிப்படையிலும், தரைத்திட்டத்தை நன்கு பயன்படுத்தி இழப்புக்களைக் கொடுக்கக்கூடிய நிலையிலும் ஏதுவான சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிற ஒரு நிலையிலும் எங்களுடைய தளபதிகள், போராளிகள் அங்கு சமரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவை அனைத்தையும் எங்களுடைய தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் நுட்பமாகவும், உத்தி முறைகளுடனும் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: சிறிலங்காப் படையினர் மணலாறு மற்றும் வடபோர்முனையில் தாக்குதல்களை மேற்கொண்டாலும் குறிப்பாக மன்னார் பகுதிகளில்தான் அவர்கள் தமது கூடிய கவனத்தைச் செலுத்துகின்றனர். அவர்கள் மன்னார் பகுதியைக் குறிவைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: அதற்கு பல காரணங்களைக் கூறமுடியும். அவர்களுடைய நிகழ்ச்சித்திட்ட அடிப்படையிலேயே தமது படைக்கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவந்து மன்னார் - பூநகரி கரையோரப் பாதையைத் திறப்பது அவர்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் மடுத்தலம் போன்ற முக்கியமாக அரசியல் ரீதியிலே அவர்களுக்கு இலாபம் தரக்கூடிய இலக்குகளை அடைவதற்கு அவர்கள் மிகவும் எத்தனப்படுகிறார்கள்.

இவ்வாறானதொரு நிலையில்தான் அவர்களுடைய நடவடிக்கைகள் அங்கே தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆயினும் ஒரு நடவடிக்கை என்று சொல்லும்போது அதற்கு பெயரிடப்பட்டு ஒரு எல்லையைக் கூறவேண்டும், இலக்கை குறிப்பிட வேண்டும், கால வரையறையைக் கூற வேண்டும். ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலைகளுக்குள் சிக்குப்படாமல் அந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் வைத்து அந்தப் பகுதிகளிலே உக்கிரமான தாக்குதல்களை, தங்களுடைய உச்ச அளவிலான படைவலுவை, தங்களுடைய உத்திகளை, தங்களுடைய படைக்கருவிகளை, வெடிபொருட்களைப் பயன்படுத்தி செய்வதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க பெறுபேறை அடைந்து அரசியல் ரீதியான இலாபம் பெறலாம் என்பதற்காக மடுத்தலம் போன்ற இடங்களை அவர்கள் கைப்பற்றுவதற்கு முனைந்தாலும்கூட, குறித்த இலக்கை குறித்த காலத்திற்குள் அடையமுடியாது என்ற தன்னம்பிக்கையே இல்லாத காரணத்தால் அவர்கள் இலக்கை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவிர, மன்னார்ப் பெருந்தளத்திலே அரசியல் ரீதியான இலாபங்களைப் பெறக்கூடிய இடங்களைக் கைப்பற்றுதல் மற்றும் மன்னார் - பூநகரி கரையோரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்பனவே முக்கியமான நோக்கங்களாக இருக்கின்றன.

கேள்வி: மன்னார் களமுனையில் சிறிலங்காப் படைத்தரப்பு எவ்வளவு பலத்தைப் பிரயோகிக்கின்றது என்பதைக் கூறமுடியுமா?

பதில்: சிறிலங்காப் படைத்தரப்பு தனது உச்சநிலைத் தாக்குதல் சக்திகளான அணிகளை அங்கே முன்னணியில் நிறுத்தியிருக்கிறது.

இந்தப் போருக்கு என்றே முக்கியமாக வடிவமைக்கப்பட்ட 57 ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களும் அதனுடைய உபரி அணிகளும், அதுபோன்ற சில சிறப்பு அணிகளும், கவசப்படையைச் சேர்ந்த ஒரு பகுதியினரும் என தங்களுடைய பலத்தின் மிக உச்சமான பாகங்களை அங்கே அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எறிகணைகளையும் மிகவும் செறிவாக பிரயோகிக்கக்கூடிய வகையில் எறிகணை வீரர்களையும், ஆட்லறி வீரர்களையும் அங்கே அவர்கள் நிறுத்தி சண்டை புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

உச்ச நிலையிலே தங்களை ஈடுபடுத்தினாலும் கூட சொல்லிக்கொள்ளும்படியான பெறுபேறுகளை அவர்கள் பெறுவதில் வருடக்கணக்கான இழுபறி நிலவுவது இன்னொரு பக்கமாக இருக்கிறது.

அதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பார்த்தால், ஓராண்டு தாண்டியும் தொடர் நடவடிக்கையின் பெறுபேறுகள் என்ன? அவர்களுடைய தரப்பிலே ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் என்ன? அந்த இழப்புகளின் அடிப்படையிலே அவர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற எதிர்காலம் பற்றிய அனுமானங்கள் என்ன என்பதை போரியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: தள அமைப்பைப் பொறுத்தவரை தமக்குச் சாதகமற்ற மன்னார் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் மூலம் சிறிலங்காப் படையினர் என்ன செய்தியைக் கூறவிழைகின்றனர்?

பதில்: மன்னார் பெருந்தளம் என்பது சவால்கள் நிறைந்ததுதான். மன்னார் எங்களுடைய தாய்நிலம். எங்களுடைய தாய்மடி. அந்த இடத்திற்காக நாங்கள் மிகவும் உக்கிரமாகப் போரிடுவோம். அந்த இடத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தவாறு மிகுந்த அர்ப்பணிப்புடன் எங்களுடைய போராளிகள் எதிர்ச் சமராடி வருகின்றனர்.

தமது விடுதலைப் போராட்ட பங்களிப்பை அவர்கள் மிகச் சிறப்புடன் செய்து வருகிறார்கள்.

மன்னார்க் களமுனையில் முக்கியமான தளங்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் பாரிய அரசியல் ரீதியான வெற்றிகளைப் பெறுவது என்பது மகிந்த அரசினது நோக்கமாக இருக்கின்றது.

அதேநேரம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மன்னார் - பூநகரி கரையோரைப் பாதையைத் தொடுப்பதன் மூலம் குடாநாட்டில் இருக்கின்ற படையினருக்கான விநியோகத்தை கொண்டு வருவதற்கான நோக்கமும் இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இப்படியானதொரு சூழ்நிலையிலே காலம் போகப்போக இன்னும் அதிகமதிகமான ஒரு அங்கலாய்ப்புடன் படையினர் அங்கே மோதி வருகிறார்கள்.

களச்சூழ்நிலை என்பது தரைத்தோற்றத்திற்கு ஏற்ற வகையிலே முன்னோக்கிச் செல்லுதல், பின்னோக்கி நகர்தல், பக்கவாட்டாக அவர்களை வருவதற்கு விடுதல், பின்சுற்றி மறித்து அடித்தல் எனப் பலவிதமான உத்திகள் அங்கே பயன்படுத்தப்படுகின்றன.

நாளை படையினர் மடுவிற்கு வரலாம், நாளை மறுநாள் நாங்கள் மதவாச்சியில் நிற்கலாம். அதுவொரு சுழற்சியான, சுற்றுவட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடயமாகவே இருக்கின்றது.

இருந்தாலும் படையினர் முன்னேறுகின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் அவர்கள் எந்தளவு இழப்பை அங்கே சந்திப்பார்கள், அதேநேரம் அவ்வாறான சூழ்நிலைகளுக்குப் படையினர் வரும்போது அவ்வகையான சூழ்நிலைகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் எமது போராளிகள் மிக ஆழமாக தங்களை ஈடுபடுத்தி சமரிட்டு வருகின்றனர்.

கேள்வி: சிறிலங்காப் படையினர் தமது விநியோகப் பாதையாக மன்னார் - மதவாச்சி வீதி அல்லது வவுனியா - மன்னார் வீதியைத்தான் பாவிக்கின்றனர். அவர்கள் இப்படியொரு பாரிய தாக்குதலை எத்தகைய பின்வள சக்தியை வைத்துக்கொண்டு மேற்கொள்கின்றனர்?

பதில்: அனுராதபுரத் தளத்தைதான் வடபோரங்கிற்குரிய முக்கியமான பின்னணி ஏற்பாட்டுத்தளமாக பயன்படுத்தி வந்தார்கள். வான்படை, தொலைதூர வேவுக் கண்காணிப்பு, பயிற்சிக்குரிய தளம் மற்றும் ஆயுத வழங்கல் போன்ற தளங்களை உள்ளடக்கிய அந்த அனுராதபுரத்தளத்தின் மீது கடந்த ஒக்ரோபர் மாதம் எங்களுடைய கரும்புலி வீரர்களும், வான்புலிகளும் இணைந்து ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.

அன்று அவர்களது பின்தளம் மிகமோசமாக ஆட்டம் கண்டது. அதன்பின்னும் கூட அவர்கள் ஒருவாறு தங்களை நிலைப்படுத்திக்கொண்டு இயன்றளவுக்கு அந்த பின்தளத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கையை அவர்கள் செய்து வருகிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.

அவர்களுக்கு ஆழமான பின்தளங்கள் இல்லாதபோதும் கூட அரசியல் ரீதியான சில அழுத்தங்கள் அவர்களுக்கு உள்ளன. ஒரு குறிப்பிட்ட வெற்றியை அடையமுடியாத நிலையில், அங்கு தாங்களே தொடக்கிய ஒரு சமரை நிறுத்திவிட முடியாத ஒரு அரசியல் இறுக்குப்பாட்டிற்குள் அவர்கள் இப்போது சிக்கியிருக்கிறார்கள்.

மன்னார் களமுனையிலேயே பெரிய மட்டத்திலான ஒரு அவதானிப்பை செய்யும்போது அதைத்தான் பார்க்கக்கூடியதாகவிருக்கிறது.

கேள்வி: மன்னார் களமுனையைப் பொறுத்தவரை அங்கே பாரிய இழப்புக்கள் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அது தொடர்பான எந்தச் செய்தியும் வெளிவருவதாக இல்லை. அவர்கள் திட்டமிட்டு அந்தச் செய்திகளை மறைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: மகிந்த ஆட்சிக்கு வரும்போது போர் என்பதை அவர் ஒரு உபதொழிலாகத்தான் நினைத்தார். இன்று அவரது முக்கிய தொழிலே அதுவாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் யுத்தத்தில் அவர் கால்வைத்து விடுதலைப் புலிகளை வெல்வது ஒரு சிறிய விடயம் என்றே நினைத்துக்கொண்டார். முன்னர் இருந்த அரச தலைவர்கள் பலர், படைத்தளபதிகள் பலர் விட்ட இதே வரலாற்றுத் தவறையே மகிந்தரும் விட்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தான் நினைத்ததை அடைந்துவிடலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டுடன் சில கணிப்புகளை வைத்துக்கொண்டு, வெளியே சொல்லாவிட்டாலும் தன்னகத்தே சில காலக்கணிப்புக்களை வைத்துக்கொண்டு அவர் ஒரு நடவடிக்கையைச் செய்தார்.

நடவடிக்கை ஒன்று தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போது அவர்கள் சில எண்ணிக்கை விளையாட்டுக்களை காட்டினார்கள்.

விடுதலைப் புலிகள் தரப்பிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போவதாகவும் தமது தரப்பிலே ஓரிருவர் சிறு காயங்களுக்கு மட்டும் ஆளானார்கள் என்றும் ஒரு போலிப்பரப்புரையை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

புலிகளுடைய தரப்பிலே அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டினால்தான் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற விலைவாசி, ராஜபக்ச சகோதரர்கள் மீது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தி, மற்றும் எப்படி மறைத்தாலும் படையினரின் உயிரிழப்புகள் தொடர்பாக தென்னிலங்கையில் எழுகின்ற பல சிக்கல்கள் மற்றும் பலவிதமான குழப்பங்கள் என்பனவற்றை ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்த விடயத்தை பெரிதாகக் காட்டுவதன் மூலம் மக்களை திசைதிருப்பலாம் என்ற நப்பாசையில்தான் அவ்வாறானதொரு எண்ணிக்கை விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

கேள்வி: முல்லைத்தீவை அண்மித்திருக்கும் மணலாற்று களமுனையில் இருந்து முன்னேவதற்கு படையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு என்ன காரணம்?

பதில்: மணலாற்றில் மட்டுமல்ல, நாங்கள் இடம்கொடுத்தால் சிங்களப் படைகள் எல்லா வழிகளிலும்தான் முன்னேற முனைவார்கள். அவர்களைத் தடுத்து வைத்திருப்பதும் அவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதும் எங்களுடைய பதில் தாக்குதல்கள்தான். அங்கே வலுவான கட்டமைப்புக்கள் இருக்கின்றன.

மன்னாரைப் போன்றே மணலாறும் எங்களுடைய இதயபூமி. அங்கே நீண்டகாலமாக எங்களது அணிகள் இரண்டு வகைச் சண்டைகளையும் தொடர்ந்தும் மாறிமாறி செய்துவருகின்றதொரு தரைத்தோற்றமாக அது விளங்குகின்றது.

மரபு ரீதியான சமருக்கான சூழ்நிலைகள் அங்கு நிலவினாலும் அந்த மரபு ரீதியான சமருடன் கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களும் சேர்ந்ததாகவே அந்தப் பகுதியின் வரலாறு உள்ளது.

அவ்வாறானதொரு இடத்தில் பதில் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாததனால்தான் அவர்களுக்கு அந்த தயக்கங்கள் ஏற்படுகின்றன. அங்கே வலிமையான கட்டமைப்புக்களுடன் எங்களுடைய வீரர்கள் அவர்களை மறிப்புச் சமர் செய்து வருகின்றனர்.

கேள்வி: வடபோர்முனையைப் பொறுத்தமட்டில் அவர்கள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியம் ஏதாவது உள்ளதா?

பதில்: வடபோர்முனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கிய நீண்ட வேலிப் பிரதேசத்திலேயே அவர்கள் 2006 ஆம் ஆண்டே மோதல்களை ஆரம்பித்து விட்டார்கள். இங்கு தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த மோதல்களிலே அவர்கள் இழப்புகளைச் சந்தித்து பின்வாங்கினார்களே தவிர ஒரு அங்குலம் கூட அங்கே அவர்களால் முன்னேற முடியாமல் போய்விட்டது. இப்போது ஒன்றரை வருடங்களைத் தாண்டி காலம் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையிலே பாரிய படை பலத்தை அவர்கள் குடாநாட்டில் குவித்திருக்கிறார்கள். எப்போதும் அந்தப் பகுதி தாக்குதலுக்கு உள்ளாகலாம், விடுதலைப் புலிகளின் படைகள் அங்கே வந்து இறங்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதே அதற்கு காரணமாகும். அதனால் அங்கே ஒரு பெரிய படையணியை அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய 53 ஆவது தாக்குதல் பிரிவும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கவச அணிகளின் முக்கிய அணிகள்கூட அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான தகுதிகள் அந்த இடத்திற்கு இருந்தும்கூட, மற்ற எல்லா களமுனைகளையும்விட மிக விரைவாக ஒரு உலங்குவானூர்தி அந்த இடத்திற்கு வந்து தாக்குதலை நடத்தக்கூடிய நிலையிலுள்ள வான்தளம் இருந்தும்கூட, மிக வேகமான விநியோகத்தையோ அல்லது காயமடைந்தவர்களை அப்புறப்படுத்துவதற்கான போக்குவரத்து வசதிகளோ இருந்தும்கூட அந்த களமுனைகளில் அவர்களால் ஒரு அங்குலம்கூட முன்னே எடுத்து வைக்க முடியாமல் இருக்கின்றது.

போர் நடவடிக்கை ஒன்றில் அதன் இலக்கின் அடிப்படையிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. வடபோர் முனையைப் பொறுத்தவரையிலே மறித்துச் சமராடுதல் என்பதில் நாங்கள் 2006 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிபெற்று வருகிறோம். எங்களுடைய பகுதிகள் நோக்கி முன்னேறுவதற்கான முனைப்பு என்ற விடயத்திலே அவர்கள் ஒன்றரை வருடங்களாக தோல்வி கண்டு வருகிறார்கள். இதுதான் அங்குள்ள நிலைமை.

கேள்வி: கிழக்கிலிருந்து புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்திருந்தனர். ஆனால் அதை தமக்கு கிடைத்த பாரிய வெற்றியாக அவர்கள் பிரசாரப்படுத்தினர். கிழக்கைப் போன்று வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான யுத்தமும் ஒரு இலகுவாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருப்பார்களா?

பதில்: நிச்சயமாகக் கருதியிருப்பார்கள். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாகி விட்டது என்பதுதான் அனைவருடைய கணிப்பாகவும் உள்ளது. நாங்கள் மட்டுமல்ல பன்னாட்டு படைத்துறை ஆய்வாளர்களும் இத்தகைய கருத்துக்களை இப்போது மெல்ல மெல்ல சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தினுடைய போர் உத்திகளை நம்பி அந்தப் போரில் அவர்கள் வெல்வார்கள் என்று கருதி தங்களுடைய முதலீடுகளைச் செய்தவர்கள் எல்லாம் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனுடைய அங்கமாகத்தான் சிறிலங்கா அரச தலைவரோ அல்லது அவருடைய படைத்தளபதி சரத் பொன்சேகாவோ இப்போது நினைத்தது போல் புலிகளை வெல்ல முடியாது, இன்னும் காலங்கள் தேவை என்று அறிக்கைகளை மெல்ல மெல்ல விடத்தொடங்கியுள்ளனர். செய்வோம் என்று அறைகூவல் விடுத்து சொன்னதை அவர்களால் செய்யமுடியவில்லை. இதுதான் உண்மையிலேயே வன்னிக் களத்தின் நிலைமை.

கிழக்கைப் பொறுத்தவரை எமது போரிடுதலுக்கான தேவையை, போரிடுதலுக்கான எமது வீச்சை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்து இயன்றளவிலானதொரு போரிடுதலை அங்கே நாங்கள் நிறைவேற்றினோம். அதற்கு ஏற்ற வகையில் அங்கே அவர்களும் தமது படைகளை நிறுத்த வேண்டியதொரு நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு விதித்தோம். இப்போதும் அங்கே படைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். படைகளை அங்கிருந்து அகற்றும்போது புதிய படைகளை அங்கு கொண்டுசெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. ஏனெனில் கிழக்கைத் தாண்டிய இடங்களில்கூட புதிய களங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் கிழக்கில் தாங்கள் செய்தது போன்று வன்னிப் பெருநிலப்பரப்பிலும் செய்வோம் என்று அவர்கள் நினைத்த அந்த கணிப்பில் ஏற்பட்ட தவறுதான் இன்று அவர்களுக்கு பாரிய அரசியல், இராஜதந்திர, படைத்துறை, பொருளாதார அழுத்தத்திற்குரிய முக்கியமான காரணமாகவிருக்கிறது.

அவ்வாறானதொரு இறுக்கமான சூழ்நிலையில், களமுனை எங்களுக்கு சாதகமாக திரும்பி வருகின்ற சூழ்நிலையில்தான் இப்போதைய ஒட்டுமொத்த களமுனையும் சென்றுகொண்டிருக்கின்றது.

கேள்வி: சிறிலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் முனைவுகளை பல களமுனைகளில் மேற்கொள்கின்றனர். ஆனால் புலிகள் வலிந்த தாக்குதல்களைச் செய்யாது, எதிர்த்தாக்குதல்களையே மேற்கொண்டு வருகின்றனர். அப்படியானால், சிறிலங்காப் படையினர் புலிகளின் முழுப்பலத்தையும் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா?

பதில்: சில ஆழமான விடயங்களைக் கேட்கின்றீர்கள். எனினும் இயன்றளவுக்கு அதற்கு பதில் சொல்ல முடியும். எங்களுடைய தாக்குதல்களின் வீச்சம் எப்படியிருக்கும் என்பதை சிறிலங்காப் படையினர் முன்னர் பல தடவைகள் அறிந்திருக்கிறார்கள். உதாரணத்திற்காக அனுராதபுரத் தாக்குதலைச் சொல்லலாம், அதேபோல கட்டுநாயக்க வான்படைத் தள தாக்குதலைச் சொல்லலாம். அது ஒரு வகையான தாக்குதல்.

மறுவளத்தில் பார்த்தால் ஓயாத அலைகள் 1, 2, 3 என அனைவருடைய மனங்களிலும் நிற்கக்கூடிய பட்டவர்த்தனமாக பலத்தைச் சொல்லிய தாக்குதல்கள்.

அதேபோல உலக நாடுகளுக்கு எங்களது வலுச்சமநிலையை நிரூபித்த தாக்குதலாக சிறிலங்காப் படையின் "அக்கினி கீல" என்ற நடவடிக்கைக்கான எங்களுடைய எதிர்ச்சமர் அமைந்திருந்தது.

இவ்வாறானதொரு யதார்த்தங்கள் இருக்கும்போது அவ்வாறானதொரு தாக்குதல்களைச் செய்வதற்கான ஆற்றல்களை புலிகள் இழந்து விடவில்லை என்ற அந்த பாரிய யதார்த்த நிலையை பன்னாட்டு ஆய்வாளர்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு இடித்துரைக்க தொடங்கியிருக்கிறார்கள்.

கிழக்கிலே தங்களுடைய படைகள் இருப்பது வேறு புலிகளுடைய தாக்குதல் திறனிலே ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்களா என்ற கேள்வியை அவர்கள் இப்போது கேட்கத்தொடங்கியிருக்கிறார்கள். அதுதான் அங்கிருக்கக்கூடிய சூழ்நிலை. அப்படிப் பார்க்கப் போனால் நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான்.

கேள்வி: முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடந்த வாரம் கடற்கரும்புலிகள் சிறிலங்காப் படையின் டோறா ஒன்றை தாக்கி மூழ்கடித்து அதிலிருந்த கடற்படையினரைக் கொன்றிருந்தனர். குடாநாட்டில் உள்ள படையினருக்கான விநியோகத்தில் இந்தத் தாக்குதல் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் ?

பதில்: நிச்சயமாக தொடர் தாக்குதல்களும் அதற்குரிய பக்க விளைவுகளும் இல்லாமல் போகாது. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட முறை, உத்தி சம்பந்தமாக என்னால் விலாவாரியாகப் பேச முடியாதிருக்கிறது.

ஆனால், அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் விளைவு சிறிலங்காப் படைத்துறை வழங்கலில் மட்டுமன்றி யாழ். குடாநாட்டில் உள்ள படையினருக்கு போகின்ற விநியோகத்திலே மிகப்பெரும் பகுதி விநியோகம் அந்த குறிப்பிட்ட பாதையால்தான் செல்ல வேண்டும், வேறு வழியில்லை.

அங்கே இருக்கின்ற அத்தனை படையினருக்கும் ஒரு மூடை அரிசி போவது என்றாலும் அந்த வழியால்தான் போகவேண்டும். பெரும்பாலும் 80 வீத வழங்கல் பாதையாகவே இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, அந்தப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றோம், அதை கண்காணிப்பிற்குள் வைத்திருக்கிறோம் என்ற சிறிலங்கா அரசின் இறைமை என்கிற விடயம் இருக்கிறதல்லவா அந்த விடயம் எங்களுடைய கடற்புலிகளின் தாக்குதல்களினால் மீண்டுமொருமுறை சவாலுக்குள்ளாகி, சிதைந்து போயிருக்கிறது.

இறைமை என்பது அனைத்துலக மட்டத்திலும் கேள்விக்குரிய விடயமாக, முக்கியத்துவம் இழந்து வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் இறைமைக்கு விழுந்துள்ள இன்னுமொரு அடியாக, தாக்கமாக, அவர்களே தாங்கள் இத்தனை பேரை இழந்துவிட்டோம், ஒரு கலத்தை இழந்து விட்டோம், இத்தனை பேர் தப்பிவந்துள்ளனர் என்று சொல்லுமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக, கடல் இறைமையை சந்தேகத்திற்கிடமின்றி ஆட்டம் காணச் செய்த விடயமாக கடற் கரும்புலிகளின் அந்தத் தாக்குதல் அமைந்திருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கேள்வி: சிறிலங்காப் படையினரின் அண்மைக்கால தாக்குதல்கள் சற்றுக் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை சிறிலங்காப் படையின் வீழ்ச்சி என்று கருதலாமா?

பதில்: படைத்துறை ரீதியான மதிப்பீடுகளைச் செய்யும்போது சில மதிப்பீடுகளை நாங்கள் குறை மதிப்பீடாகச் செய்துவிட முடியாது. ஆட்பலம், ஆயுதங்களின் பலம் மற்றும் இவை எல்லாவற்றையும் தாண்டி மனோபலம் என்கின்ற உள்ளிருந்து ஊக்குவிக்கின்ற உத்வேகம் என்ற விடயங்களிலுமே படைத்துறைப் பலம் என்பது உண்மையிலேயே தங்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினுடைய படைகள் அது தரைப்படையாக இருந்தாலும் சரி, கடற்படையாக இருந்தாலும் சரி, வான் படையாக இருந்தாலும் சரி நிச்சயமாக எண்ணிக்கையில், வளத்தில் பெரியவை. இருந்தாலும் அவர்களுக்கு மந்த நிலை ஏற்படுவதற்கு அவர்களிடம் அடிப்படையான தார்மீகம் இல்லாமல் இருப்பதே காரணமாகும்.

இது எங்களுடைய நாடு, எங்களுடைய மண், எங்களுடைய கடல், எங்களுடைய தாய்மடி. இதுக்காக நாங்கள் போராடும்போது எங்களுக்கு இருக்கின்ற தார்மீகம் சிறிலங்காப் படைகளுக்கு இல்லை. அதனால் அவர்களுக்கு அந்த மந்த நிலை ஏற்பட்டிருக்ககூடும்.

கேள்வி: யுத்தமொன்று நீண்டகாலத்திற்கு இழுபடும்போது (குறிப்பாக மன்னார் களமுனையில்) படையினர் மத்தியில் அவர்களது மனவலிமையை எப்படியாகப் பாதிக்கும்?

பதில்: நிச்சயமாக அங்கே பாதிப்பு இருக்கும். ஏனென்று சொன்னால் அது இலட்சியமில்லாத வேலை. அந்த இலக்கு அவர்களுக்கே தெரியாது. எப்போது முடியும், எங்கே போய் முடியும் என்பது அவர்களுக்கே தெரியாது. களமுனையில் நிற்கின்ற சிப்பாய்க்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அண்மையில்கூட ஒரு செய்தி வந்தது.

மேஜர் தர அதிகாரியிடம் விடுமுறை கேட்ட சிப்பாய்க்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் அந்த அதிகாரியை சிப்பாய் சுட்டுக்கொன்றிருக்கிறார்.

இவ்வாறான மன அழுத்தங்கள், விரக்தி நிலைகள், தாங்கள் செய்கின்ற பணியிலே நம்பிக்கையில்லா நிலை அங்கே இப்போது பெரியளவிலே மலிந்திருக்கின்றன.

இதுதவிர படையினரின் இழப்புக்களை மறைக்கின்றனர் என்று தென்னிலங்கை ஊடகங்களே இன்று சொல்கின்றன. படையினரின் உடலங்களை எங்குகொண்டுபோய்ப் புதைக்கின்றனர் என்ற தகவல்களும் அங்கிருந்துதான் வரத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் படையினரின் மனஉறுதி ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது என்பது உண்மைதான்.

சரியான தருணங்கள் ஏற்படும்போது ஒரு சமரினுடைய போக்கு மனவுரண் சார்பாக மிக வேகமாகச் செயற்படுகின்றதை நாங்கள் எங்களுடைய போரியல் வரலாற்றிலே பார்த்திருக்கின்றோம்.

தேசியத் தலைவர் அவர்கள் பலமுறை அவ்வாறான கணிப்பீடுகளின் அடிப்படையிலே பல சாதனைகளைச் செய்து காட்டியிருக்கின்றார். ஆகவே நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி: கிழக்கிலே தற்போது ஒரு ஓய்வு நிலைதான் தற்போது காணப்படுகிறது. அங்கு ஏன் இப்படியான நிலை இருக்கிறது என்று கூறமுடியுமா ?

பதில்: கிழக்கின் நிலையைப் பொறுத்தவரை அங்கு சிறிலங்காப் படையினர் ஒரு படை விரிவாக்கத்தைச் செய்துள்ளனர். படைப்பரம்பலைச் செய்திருக்கின்றனர். அதற்கு ஒரு வகையிலே நாங்கள் நிர்ப்பந்தித்துள்ளோம். அந்த நிர்ப்பந்த நிலையில் அவர்கள் தமது படையைச் சுருக்க முடியுமா என்பது நிச்சயமாக அவர்களுடைய கையில் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, எங்களுக்குச் சாதகமான நிலைப்பாடு வருகின்ற சூழ்நிலையிலேயே அங்குள்ள படைச்சமநிலை கூட மாற்றமடைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் என்று நிச்சயமாகக் கருதவில்லை.

கேள்வி: கிழக்கில் இருந்த சிறப்பு அதிரடிப்படையினரை அகற்றி அவர்களை மணலாற்றுப் பகுதிக்கு கொண்டுசெல்வதற்கான திட்டம் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு அதிரடிப்படையின் பலம் எந்தவகையில் உள்ளது?

பதில்: சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை என்பது உண்மையில் ஒரு மரபுக் கட்டமைப்பல்ல. இன விரோதச் செயற்பாட்டின் மிகவும் உச்ச வடிவமாகத்தான் அதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன வடிவமைத்தார். அந்த நாட்களிலே கிளர்ச்சி முறியடிப்புக்கான பல கட்டமைப்புகள் இருந்தன. இஸ்ரேலில் அத்தகைய படைக்கட்டமைப்பு இருந்தது. இந்தியாவில் கூட அன்று நடந்த கிளர்ச்சிகளை முறியடிக்கும் படைக்கட்டமைப்புகள் இருந்தன. தென்னாபிரிக்க படைக்கட்டமைப்பை உதாரணத்துக்கு தேர்ந்தெடுத்தால் இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான படைக்கட்டமைப்பாக அது இருந்ததாகத் தெரியவில்லை.

எனினும் இனப்படுகொலை செய்வதற்காகவே கட்டமைக்கப்பட்ட இந்த படைக்கட்டமைப்பு அங்கே மிக அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறது. வெளியே தெரியவந்த உடும்பன்குளமோ அல்லது கொக்கட்டிச்சோலைப் படுகொலை போன்றவையெல்லாம் உண்மையில் மிகச்சொற்பமே. அன்றாடம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்காக அழிந்துகொண்டே வந்தார்கள். அப்படி ஒரு எண்ணிக்கையில் அடங்காத தொகையினர் அந்த அநியாயத்தில் அங்கே மாண்டிருக்கின்றனர்.

அந்த அநியாயத்தைச் செய்த அதிரடிப்படையினர் இன்று களமுனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

மரபுசார் யுத்தத்திலே அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை நிச்சயமாக எங்களுடைய களங்கள் அவர்களுடைய திறமையை பரிசோதிக்கக் கூடிய விடயமாக இருக்கும்.

நாங்களும் அவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்கிறோம்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மைக்காலமாக தமக்கு ஏற்படும் இழப்புகளை அனைத்துலக ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் சற்று மௌனம் காக்கப்படுவது ஏன் ?

பதில்: அப்படியானதொரு தோற்றப்பாடு ஏற்பட்டிருப்பது எனக்குப் புதிய விடயமாக உள்ளது. ஏனெனில் வீரச்சாவு அறிவித்தல்கள் மிகத்தெளிவாக மறுநாளில் எங்களுடைய "புலிகளின்குரல்" வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. அதிலே மிகவும் நேர்த்தியான புள்ளிவிபரங்களுடன் வீரச்சாவடைந்தவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலே வித்தியாசமிருப்பதாக நான் உணரவில்லை.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய விரைவான பணி குறித்த உங்களது பார்வை என்ன ?

பதில்: இத்தனை நாட்களும் அங்கிருந்துவந்த அவர்களின் உணர்வு ரீதியான அந்த ஒத்துழைப்பு என்பது ஒரு மாபெரும் விடுதலை சக்தியாக களங்களிலே செயலாக மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் இங்கே நன்றியுடனும் பணிவுடனும் உறவுடனும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதேநேரத்தில் எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை என்ற களமுனைப் போராளிகளின் அந்த உத்தரவாதத்தையும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வதிலே உண்மையிலேயே நிறைவடைகிறேன்.

அதேபோல எங்களுடைய தேசியத் தலைவர் மிகவும் நுட்பமான இந்த காலகட்டத்திலே எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். பலவிதமான சூட்சுமப் புயல்கள், இராஜதந்திரச் சுழிகள், படை வல்லாதிக்க சூறாவழிகள் என்பனவற்றிற்கு ஊடாக விடுதலைப் படகை அவர் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறார்.

இவ்வளவு காலமும் போல அந்த இறுதிப்பயணம் வரைக்கும் எங்களுடைய வெற்றிக்கொடி இயற்றுகின்ற அந்த நாள்வரைக்கும் அத்தனைபேருடைய உழைப்பும் ஒத்துழைப்பும் உணர்வும் எங்களுடன் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைத்தான் நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.