Friday, February 08, 2008

ஊடகத்துறையினரின் குரல்கள் அடக்கப்படுகின்றன: அனைத்துலக மன்னிப்புச் சபை

[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008]

இலங்கையில் படுகொலைகள், கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன அதிகரித்து வருகையில் ஊடகத்துறையினரின் குரலை அடக்கும் வகையில் அவர்கள் மீதான தாக்குதல்களும், மிரட்டல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அனைத்துலக மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் நிறுத்தம் முறிவடைந்தனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களில் 10 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் சிலர் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், கடத்தல்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்கான போர்வையாகவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும், மிரட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வன்முறைகள் உக்கிரமடையும் போது ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவது மிகவும் கவலை தருகின்றது.

பாதுகாப்புக் காரணங்களை காரணம் கூறி எமது அமைப்பினரை சிறிலங்கா அரசாங்கம் சிறிலங்காவிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. சிறிலங்காவில் அச்ச நிலமை மோசமடைந்து வருகின்றது. போர் தொடர்பாக மட்டும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதில்லை. பல காரணங்களுக்காக அவர்கள் மிரட்டப்படுகின்றனர்.

சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் தனது உரையை ஒளிபரப்பு செய்யவில்லை எனக்கூறி தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதலை நடத்தியிருந்தார். உக்ரேனில் இருந்து ஆயுதங்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதானல் ஊடகவியலாளர் ஒருவரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.