Tuesday, February 05, 2008

அதிவேகப் படகுடன் 7 கடற்படையினரை காணவில்லை: சிறிலங்கா கடற்படை

[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2008] தலைமன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கடற்சண்டையில் 7 சிறிலங்கா கடற்படையினரையும் அவர்களின் அதிவேகப் படகினையும் காணவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 400-க்கும் அதிகமான றோலர் படகுகள் தலைமன்னாரின் இரணைதீவுக் கடற்பரப்பை அண்மித்த கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததனை சிறிலங்கா கடற்படையினரின் படகுகளில் இருந்த ராடார்கள் காட்டின. இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி இந்த மீன்பிடிப்படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அப்பகுதிக்கு 2 அதிவேகப் படகுகளில் கடற்படையினர் விரைந்தனர். அச்சந்தர்ப்பத்தில் இந்திய மீன்பிடி றோலர்கள் அங்கிருந்து அகலவே, 2 மீன்பிடிப்படகுகள் மட்டும் அந்த இடத்திலேயே நின்றன. அவை பழுதடைந்து நிற்பதாகக் கருதி கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்படுகையில் அப்படகுகளில் இருந்து கடற்படைப் படகுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து கடற்படையினரும் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலையடுத்து கடற்படையினர் சென்ற அதிவேகப் படகும் அதிலிருந்த 7 கடற்படையினரும் காணாமல் போயிருக்கின்றனர். இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் தீவிர தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய மீனவர்களைப் போன்று கடலில் தரித்து நின்ற கடற்புலிகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார் அவர். இதேவேளை இச்சம்பவம் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்புகொண்டு சில விளக்கங்களைக் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்தது மட்டுமன்றி விடுதலைப் புலிகளுக்கும் அவர்கள் உதவினரா என்பதனை ஆராயுமாறும் காணாமல் போன கடற்படையினர் மற்றும் அதிவேகப் படகு குறித்து இந்திய மீனவர்களுக்கு தகவல் தெரியுமா என்பது குறித்தும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.