Monday, December 24, 2007
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மோசமாகப் பாதிப்பு
[திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2007]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு நிலைமையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக பல கிராம மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளதுடன் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களும் அண்மையில் மீள் குடியேற்றப்பட்டு தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வரும் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள போதும் வாழைச்சேனை, கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளநீர் தேங்கியதால் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டுள்ளது. மன்னம்பிட்டியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கொழும்பு மற்றும் தூர இடங்களில் இருந்து வரும் வாகனங்களும் மட்டக்களப்பிற்கு வரவில்லை.
மட்டக்களப்பில் கடல்கோள் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்காது திராய் மடுவில் தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் மக்களது கொட்டில்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, படுவான்கரைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றப்படாமல் உள்ள செங்கலடி, பதுளை வீதி, கிரான் கிராம சேவகர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து மீள் குடியேற்றப்படாத சுமார் இருபத்தாறாயிரம் மக்களும் தங்களது முகாம்களில் வெள்ளநீர் ஏறிய நிலையில் பாரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டு தற்காலிக சிறிய கொட்டில்களில் வாழும் மக்கள் மழைநீர் கொட்டில்களுக்குள் ஏறிய நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்றுக் காலை 8.30 மணிவரை 61.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஏழு நாட்களில் 247.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிற்பகல் 2 மணி வரை 118.4 மி.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் மாவட்ட வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாகப் பெய்த மழை, வெள்ளம் காரணமாக நேற்று நண்பகல் வரை இருபதாயிரம் குடும்பங்களுக்கும் மேற்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மேலும் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனவும் பல கிராமங்களில் உள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமான தேவைகளை இனம் கண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் அடைவார்களென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இதற்கிணங்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இம் மாவட்டத்தில் இடைவிடாத நிலையில் பெருமழை பெய்து கொண்டிருந்தது.
நேற்றுப் பெய்த மழை காரணமாக ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் எண்ணாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என கணக்கெடுக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச் செயலாளருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
அகதிகளுக்கான நிவாரணப் பணிகளை மட்டக்களப்பு பதில் அரசாங்க அதிபர் கே. மகேசன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரில் சென்று அவதானித்து மேற்கொண்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராமங்கள் பெரு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக மாவட்ட செயலகத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்டிருக்கும்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரிலிருந்து பொலன்ன றுவை மற்றும் கொழும்பு, குருநாகல் போன்ற தூர நகரங்களுக்கான ரயில் மற்றும் பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.
இம்மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களான மிச் நகர், தாமரைக்கேணி, ஐயன்கேணி, சதாம் ஹுசைன் கிராமம் மீராகேணி ஹிதாயத் நகர் போன்ற கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயம், வந்தாறுமூலை கணேஷ் வித்தியாலயம், சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம் போன்றவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.