Sunday, December 02, 2007

கொழும்பு குண்டுத் தாக்குதலால் வர்த்தகத்துறை கடும் பாதிப்பு: கொழும்பு வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகேகொடப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், தென்னிலங்கை மக்களின் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக வர்த்தக நடவடிக்கைகளையும் கடுமையாக பாதித்திருப்பதாக கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு வெளியிட்டிருக்கும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முன்னணி வர்த்தக நிலையங்களின் விற்பனைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன என்று கொழும்பில் உள்ள "மஜெஸ்ரிக் சிற்றி" வர்த்தக மையத் தொகுதியின் விற்பனை முகாமையாளர் நாகேந்திரா தெரிவித்துள்ளார். கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் உள்ள வர்த்தக நிலையங்களில் 25 தொடக்கம் 30 விகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எமக்கு நுகேகொடவிலும் காட்சியறை உண்டு. அது குண்டுவெடிப்பு இடம்பெற்ற "நோலிமிட்" வர்த்தக நிலையத்திற்கு நேர் எதிரில் உள்ளது. அது தற்போது மூடப்பட்டுள்ளது, அதனை மீண்டும் திறப்பதற்கு பல நாட்கள் எடுக்கும். மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதனால் எமது ஏனைய காட்சியறைகளிலும் விற்பனைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இந்த வருட பண்டிகைக்காலத்தில் நாம் அதிக வர்த்தக நடவடிக்கைகளை எதிர்பார்த்தோம் ஆனால் தற்போதைய நிலைமையில் அதனை அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. வீணான சிரமங்களைத் தவிர்க்கும் நோக்குடன் தமிழ் மக்களும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வதனை தவிர்த்து வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். சில வாடிக்கையாளர்களே வர்த்தக நிலையங்களுக்கு வருவதனால் எமது வர்த்தக நடவடிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. நாம் எமது எல்லாக்கிளைகளிலும் 24 மணி நேரப் பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்த உள்ளோம். பொதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனையிடப்படும் என்று நுகேகொடவில் அமைந்துள்ள "ஃபசன் பக்" நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தமது நிறுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று "ஹவுஸ் ஒஃப் ஃபசன்" நிறுவனத்தின் நுகேகொட கிளை முகாமையாளர் தெரிவித்துள்ள போதும், தமது நிறுவனத்திலும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அதன் பிவெர்லி வீதி கிளை முகாமையாளர் ரமேஸ் குமார் தெரிவித்தார். எமது நிறுவனத்தில் பாதுகாக்கப்படும் பொதிகள் மற்றும் தரித்து நிற்கும் வாகனங்கள் தொடர்பாக அதிக கவனங்களை எடுத்து வருகின்றோம். எனினும் நிலமையை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிக ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே வாடிக்கையாளர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. இதற்கென நாம் பிரத்தியோகமான பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளோம் எனவும் "ஹவுஸ் ஒஃப் ஃபசன்" நிறுவனத்தின் நுகேகொட கிளை முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.