போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும். அரசாங்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச்செய்துவிட்டு விடுதலைப் புலிகள் மீது உத்தியோகபூர்வமான தடைவிதித்தால் அதன்பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய வழி முறைகளை ஆரம்பிக்க முடியும்.
இவ்வாறு அறிவித்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ.
அரசாங்கப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்" ஆங்கில இதழுக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இவற்றைத் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமது விசேட செவ்வியில் மேலும் தெரி வித்திருப்பவையாவன
போர்நிறுத்த ஒப்பந்தம் வெறுமனே காகிதத்தில் மட்டுமே உள்ளது. செயலளவில் அது நடைமுறையில் இல்லை என்பதனைக் காணமுடிகிறது.
அது பெரும் கேலிக்குரியதாகிவிட்டது.
போர்நிறுத்த ஒப்பந்தம் என ஒன்றில்லை என்று அறிவித்து அதற்கு முடிவு கட்டுவதே அறிவுடைமை என்று நான் கருதுகிறேன். போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக நாம் ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும்?
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவரவாத இயக்கம். அதனை நாம் தடை செய்யவேண்டும். அதனுடன் நாம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். பயங்கரவாத இயக்கத்துக்கு தீர்வு எதனையும் வழங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை.
தமிழ் மக்களுக்கே தீர்வினை வழங்கவேண்டும் விடுதலைப் புலிகள் தமிழ்மக்களில் ஒரு சிறுபகுதியினரே. விடுதலைப் புலிகளை தடை செய்வ தற்கு முன்னர் அவர்கள் வழியை மாற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி காலஅவகாசம் ஒன்றை வழங்குவார்.
இப்போது ஈட்டப்பட்டுவரும் இராணுவ வெற்றிகள் நிச்சயமாக சமாதானத் தீர்வு ஒன்றுக்கு வழி செய்யும் என்று அவர் கூறினார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் விடுதலைப் புலிகளை முழு மையாக அழிப்பதென்பதே அரசாங்கத்தின் உண்மையான கொள்கை என்றாகிவிடும் என்று தேசிய சமாதானப் பேரவையின் இயக்குநர் ஜெகான் பெரேரா "ரொய்ட்டருக்கு" கருத்துத் தெரிவித்திருக்கிறார்.அத்தகைய ஒரு நிலைப்பாட்டில் அரசு இராணுவத் தீர்வில் தோல்விகாணுமாயின் அதன் பின்னர் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாற்று மூலோபாயம் எதனையும் நாடமுடியாது என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.