போர்க்களத்தில் காயம்பட்டு வலுகுறைந்து- சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்திய சு.ப.தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொன்றதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை புரிந்து கொள்ள மேற்குலகம் தாமதிக்கிறது. அந்தப் புரிலை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உதயன், சுடரொளி நாளேடுகளின் ஆசிரியரான வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (ATBC) வானொலிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (06.11.07) அவர் வழங்கிய நேர்காணல்:
சு.ப.தமிழ்ச்செல்வனுடன் மிக நெருக்கமாகப் பழகிய ஊடகவியலாளன் என்கிற வகையில் அவரது இராணுவ திறமைகளுக்கு அப்பால் அமைதி முயற்சிகளிலே அவரது அரசியல் திறமைகளைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். 1984 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அவர், 1987 தொடக்கம் 90-களின் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில்- இந்தியப் படையின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்- நாங்கள் உதயன் நாளேட்டினை அச்சிட்ட காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் யாழ். குடாநாட்டுக்குள் இருந்தபடி இந்தியப் படையை எதிர்த்து வந்தார். அத்தகைய துணிச்சல் மிக்க இளைஞர், அடுத்த தசாப்த காலத்தில் 1990-கள் தொடக்கம் இந்த 2007 வரையிலான காலப்பகுதியில் ஒரு அரசியல் வல்லுநராக பரிணமித்ததை என்னால் நேரடியாக காண முடிந்தது. 1993-94-95 காலகட்டத்தில் சந்திரிகா அரசுடன் யாழ்ப்பாணத்தில் பேச்சுக்களை நடத்தியபோது அருகிருந்து எம்மால் செய்திகளை சேகரிக்க முடிந்தது. அதன் பின்னர் 2002-2003 காலப் பகுதியில் ரணில் அரசோடும் தற்போதைய மகிந்த அரசோடும் புலிகள் பேச்சுக்கள் நடத்திய காலத்திலும் தமிழ்ச்செல்வனின் திறமை கண்டு வியந்திருக்கிறேன்.
எமது தேசியத் தலைவராலும் எமது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தாலும் அரசியல் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தமிழ்ச்செல்வன், அனைத்துலக சமூகத்தில் தமிழருக்காகப் பேசக்கூடிய விற்பன்னராக பரிணமித்திருந்தார். அந்தச் சூழலில் அவரை தமிழினம் இழந்துள்ளது. அந்தத்துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த ஒருவரை தமிழினம் இழந்துள்ளது.
ஒருபுறம் விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியங்களை உள்வாங்கிக் கொண்டு மறுபுறம் அனைத்துலக அரசியலை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்துகிற- இருபுறம் அறிவுள்ள வரை நாங்கள் இழந்திருப்பது எமக்கு இக்கட்டானதாகத் தோன்றுகிறது.
ஜெனீவாப் பேச்சுக்களின் போதே தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவில் பா.நடேசனை தலைவர் இணைத்தார். புலிகளின் வழமையான அணுகுமுறையில் அதாவது ஒரு போராளி சரிகின்ற போது துப்பாக்கியை சரிய விடுவதில்லை- அடுத்த போராளி அந்தத் துப்பாக்கியை ஏந்துவார். அந்த வகையில் அப்போது நடேசனை தலைவர் இணைத்திருந்தார்.
நடேசன் மிகப் பழுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொண்டவர். தமிழகத்தின் தலைவர்களுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணி வந்தவர். இந்தியாவில் அவர் போராளியாக நின்றபோது புதுடில்லியில் கூட பலருடனும் தொடர்புகளைக் கொண்டிருந்தார். ஆங்கிலம்- சிங்களம் இரண்டு மொழிகளிலும் பேசக்கூடிய வல்லவர் நடேசன் என்பதால் பேச்சுக்களில் ஒரு புதிய அணுகுமுறை அவர் கைக்கொள்ளக்கூடியதாக இருக்கும். தன்னுடைய மனதில் ஓடுகின்ற கருத்துகளை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசக்கூடியவர். ஆகவே தமிழ்ச்செல்வனின் பணியை அவரும் தொடர்வார். சு.ப.தமிழ்ச்செல்வனைப் போல் சிரித்த முகத்துடன் நடேசன் இல்லாவிட்டாலும் விடயங்களில் தமிழ்ச்செல்வனைப் போல் கறாராக இருப்பார்.
தலைவர் எதனை நினைக்கிறாரோ அது சு.ப.தமிழ்ச்செல்வன் வாயால் வெளிப்பட்டிருக்கிறது. வன்னி எதனை நினைக்கிறது என்பதனை அனுசரணையாளர்களும் எதிர்த்தரப்பினரும் சு.ப.தமிழ்ச்செல்வனூடே உணர்ந்துகொண்டனர். சிரிப்பு மென்மைதான். ஆனால் விடயங்களில் உறுதியான நிலைப்பாடு- தலைவரிடம் எத்தகைய உறுதிப்பாடு இருந்ததோ அதனைப் போன்ற உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. எந்த காரணத்தைக் கூறியும் தமிழ்ச்செல்வனின் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது.
மதியுரைஞர் பாலசிங்கம் கூட, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கறாரான பதில்களைத் தெரிவிக்க வேண்டுமாயின் தமிழ்ச்செல்வன் பதிலளிப்பார் என்று கூறுவதனை நாம் பார்த்திருக்கிறோம். தமிழ்ச்செல்வன் கொண்டிருந்த பேரம் பேசும் வலுவானது தொடர்ந்தால்தான் தமிழினத்தின் அபிலாசைகளை எட்டமுடியும்.
புலம்பெயர் தமிழர்கள்
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பே புலம்பெயர் வாழ் தமிழர்கள்தான். தங்களுடைய பங்களிப்பினூடேதான் இந்தப் போராட்டம் நகர்கிறது என்பதனை புலம்பெயர் தமிழர்களில் பலர் புரியாமல் இருக்கிறார்களோ என்கிற மனச்சங்கடம் எமக்கு உள்ளது.
சிறிலங்கா அரசாங்கமானது ஒரு அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் கீழ் இயங்கக்கூடியது. அந்த அரசாங்கத்தின் போர் வரவு- செலவுத் திட்டத்துக்கு நிகரான ஒரு செலவின பட்ஜெட்டை தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்னெடுக்கின்றனர். அதனூடேதான் தாயக மண்ணிலே தனித்தேசத்துக்குரிய கட்டமைப்பை நிர்வகிக்கவும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிகிறது. அத்தகைய வரவு-செலவுத் திட்டத்தை புலிகள் தயாரிப்பதில் புலம்பெயர் தமிழர்கள் நேரடிப் பங்கேற்பாளர்களாக உள்ளனர். புலம்பெயர் தமிழர்களின் முயற்சியிலிருந்துதான் இந்த விடுதலைப் போராட்டம் பரிணமிக்கிறது என்பதனை புரிய வேண்டும். ஆதலால் வெற்றி கிடைக்கின்ற போது கைதட்டி மகிழ்பவர்களாகவும் இழப்புக்கள்- பின்னடைவுகள் வருகிறபோது மனம் சோர்வடைகிறவர்களாகவும் விசனத்தை வெளிப்படுத்துபவர்களாகவும் இல்லாமல் ஆக்க முயற்சிகளைத் தூண்டுவோராக இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் இந்தப் போராட்டத்தை நோக்கி தூண்டச் செய்ய வேண்டும்.
கொழும்பில் வெள்ள வானில் வந்தோர் என்னை தேடிச் சென்றதாக தெரியவந்த போது தமிழ்ச்செல்வன் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது
"அண்ணே..கொஞ்சம் தள்ளி நின்று வேலை செய்தால் என்ன?" என்றார்.
"தள்ளி நின்று வேலை செய்வதென்றால் எப்படி தம்பி" என்றேன்.
அதற்கு தமிழ்ச்செல்வன் கூறினார்......
"அண்ணே! சந்திர மண்டலத்தில் இருக்கிற வாகனத்தை அமெரிக்கர்கள் அமெரிக்காவிலிருந்து இயக்குகின்றார்கள். அதேபோல் உதயன், சுடரொளி நாளேடுகளை கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற சிக்கலான இடங்களில்லாமல் வெளிநாடு ஒன்றில் இருந்து கொண்டு செய்ய முடியாதா?" என்றார்.
இதனை ஏன் சொல்கிறேன் எனில்
"சந்திர மண்டலத்தில் இருக்கிற வாகனத்தை அமெரிக்கர்கள் அமெரிக்காவிலிருந்து இயக்குகிறார்கள்" என்று தமிழ்ச்செல்வன் கூறியதனைப்போல் ஈழத்தில் விடுதலைப் போராட்டத்தை இயக்குகின்ற சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை அந்த மக்கள் உணர்ந்து கொண்டார்களேயானால் அந்தப் பொறுப்பை உணர்ந்து கொண்டால் இன்னும் கடமை உணர்வோடு அவர்கள் செயற்பாடுவார்கள். இது அவர்களின் போராட்டம். அவர்களின் சந்ததியினருக்கான போராட்டம். அவர்கள் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் பங்கேற்பாளர்களாகவும் மாற முடியும்.
நேரடியாக இந்தப் போராட்டத்தை புலத்திலிருந்து கொண்டு உங்களால் வழிநடத்திட முடியும் என்கிற பொறுப்பை உணர்ந்து கொண்டு தலைவருக்கு உறுதுணையாக நாம் நிற்போம். அது நமது வரலாற்றுக் கடமை.
அண்மைக்காலத்திலே புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு பயணம் மேற்கொண்ட போது சில விடயங்களை அவதானித்தேன்.
அவர்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள்
அவர்கள் இணையத் தளங்களில் சம்பவங்களைப் பார்த்துவிட்டு- கேள்விப்பட்டு குதூகலிக்கின்றவர்களாக
அல்லது
மனதைச் சோர்வடைய விடுபவர்களாக இருக்கிறார்கள்.
அதற்கும் அப்பால்
ஒரு தொடர் நடவடிக்கை எனும் பொறுப்பு தம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக அவர்கள் இல்லை.
அவர்கள் தங்களுடைய வாழும் பிரதேச ரீதியாக- தமிழர் அமைப்புகளின் ஊடே இணைந்து சிறிலங்கா அரசின் அடக்குமுறை- ஒடுக்குமுறைகளை, மனித உரிமை மீறல்களை அனைத்துலக சமூகத்திடம் கொண்டு செல்ல வேண்டும். மேலும் இந்தப் போராட்டத்திற்கு வேறு பல வகைகளிலும் உதவுவதன் மூலமும் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க முடியும்.
நீங்கள் நிதியை மட்டும் கொடுப்பதோடு கடமை முடிந்து விடாது. இராணுவப் போராட்டம் என்பது கிரிக்கெட் மட்ச் அல்ல. நினைத்த நேரத்தில் எல்லாம் சிக்சரும் பௌண்டரிகளும் அடிக்க.
பொறுப்புணர்வோடு போர்த் தந்திரங்கள் வகுக்கப்படுகிற பதுங்கும் நேரத்தில் பதுங்கியும் பாயும் நேரத்தில் பாய்ந்தும் செல்கிற ஒரு போர்க்களம் இது.
ஒவ்வொரு பந்தையும் சிக்சராகவும்
எந்த நேரமும் பாய்ந்து கொண்டிருப்பதானதுமான ஒரு விளையாட்டு அல்ல.
சில இடங்களிலே எதிரியை உள்ளே வரவழைத்து வலையில் வீழ்த்த வேண்டியதிருக்கும். அதனையெல்லாம் விசனத்தோடு நோக்கக் கூடாது.
புலம்பெயர் தமிழர்களே!
உங்களுக்குக் கிடைத்திருக்கும் போராட்டத் தலைமையானது மிகுந்த நுட்பமும் திறமையும் கொண்ட அனைத்துலக சமூகத்தில் மதிக்கப்படுகிற சக்தியாகும். அந்தத் தலைமை சக்தியானது தனது இலட்சியத்தில் திடசங்கற்பத்தோடு உறுதிப்பாட்டோடு நிற்கிறது. அந்தத் தலைமை மேற்கொள்ளும் நகர்வுகளானவை இந்தப் போராட்டதினது இறுதி இலக்கை நோக்கிய நகர்வுகள் என்பதைக் கருத வேண்டும்.
ஆகையால் குறுகிய கால வெற்றிகள்- அதனடிப்படையிலான செயற்பாடுகள் என்பதை தவிர்த்து இலக்கு நோக்கி நாம் நகர வேண்டும். இதனை தாங்கள் உணர்ந்து ஏனையோருக்கும் உணர்த்த வேண்டும்.
யால மற்றும் அனுராதபுரம் தாக்குதலின் ஆழங்களைப் புரிந்துகொண்டு மற்றையோருக்கும் தெரிவித்து உற்சாகப்படுத்தி "இலக்கு" நோக்கிய இணைத்துக் கொள்வதில் ஒவ்வொரு புலம்பெயர் தமிழருக்கும் கடமை உண்டு. அதனை முன்னெடுக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
கொழும்பில் உள்ள பலநாட்டு இராஜதந்திரிகளும் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலையால் விசனித்துப் போய் இருக்கிறார்கள். அமைதி முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு எனக் கருதுகின்றனர். இத்தாக்குதலை அவர்கள் கண்டிக்க விரும்பினாலும் அவர்கள் அப்படிச் செய்ய முடியாத ஒரு இக்கட்டினில் இருக்கின்றனர்.
போரிலே காயம்பட்டு வலு குறைந்த ஒருவரை-
சமாதானத்துக்காக அமைதிப் பேச்சுக்களிலே ஈடுபட்ட ஒருவரை
"இலக்கு வைத்து கொன்றுவிட்டோம். அவரை கொலை செய்தது மூலம் ஒரு செய்தியை புலிகளுக்குத் தெரிவித்திருக்கிறோம். அதாவது அவர்களின் மறைவிடங்கள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் நினைத்தால் ஒவ்வொருவரையும் தொலைத்து விடுவோம்" என்று மமதையாக சிறிலங்காவின் பாதுகாப்பின் அதி உச்சப் பொறுப்பில் இருக்கக்கூடிய கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை அனைத்துலக சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிய மேற்குலகம் தாமதிக்கிறது.
இதனை அனைத்துலக சமூகத்துக்கு புரிய வைக்க வேண்டியது ஒவ்வொரு புலம்பெயர் தமிழரது கடமை என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.