Sunday, November 18, 2007
புலிகளின் தலைவர்களின் பதுங்குகுழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகள் கொள்வனவு: கொழும்பு ஊடகம்.!!
[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் குண்டுகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்திருப்பதாகவும் 10 நாட்களில் அவை சிறிலங்காவுக்கு வந்தடையும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு இது குறித்து எழுதியுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை தாக்கி அழிப்பதற்கு தயங்க வேண்டாம் என வான் படையினருக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கட்டளையிட்டுள்ளார். இது ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் நடைபெற்ற அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பதுங்குகுழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளன. வான் படையினர் அவற்றை விரைவில் கொள்வனவு செய்யவுள்ளனர். எதிர்வரும் 10 நாட்களில் அவை சிறிலங்காவை வந்தடைந்ததும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களை வான்படையினர் நடத்தலாம்.
நவம்பர் 18 ஆம் நாள் தனது 62 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மகிந்த ராஜபக்சவிற்கு நாளையும் முக்கிய நாளாகும். அவர் பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் நாளை தொடங்குகிறது. அன்று தான் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
அடுத்த வாரம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 53 ஆவது பிறந்த நாள் வருவதும் அதற்கு மறுநாள் அவர் உரையாற்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.