Sunday, November 04, 2007

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் இரங்கல்

[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007]

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைதுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் றொபேர்ட் ஈவான்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல்:

சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து அதிர்ச்சியும் வருத்தம் அடைந்தேன். ஆனால் இருதரப்பும் மேலும் போரில் மூழ்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நான் சு.ப.தமிழ்ச்செல்வனை நன்கு அறிவேன். கிளிநொச்சியிலும் பிரசெல்ஸ்ஸில் உள்ள எமது ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் அவரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

அவர் எப்போதும் நட்புடன் பழகியவர். தமிழ் மக்களினது அபிலாசைகளை தனது நெஞ்சில் சுமந்தவர். இலங்கை முழுமைக்குமே அமைதி முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்திருந்தவர்.

அவரது மரணம் குறித்து மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைகிறேன். தமிழ்ச்செல்வனின் துணைவியார் மற்றும் குழந்தைகளுக்கும் பாரிய இழப்பைச் சந்தித்திருக்கும் தமிழ் மக்களுக்கும் எமது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிலங்கா இராணுவத்தின் இத்தாக்குதல் குறித்து நான் திகைப்படைகிறேன். அமைதி முயற்சிகளை முன்னெடுக்க இந்த வன்முறையும் இரத்தக்களறியும் எப்படி உதவும்?

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கிறேன். சிறிலங்கா அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு தீர்வு காண முன்வர வேண்டும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.