Tuesday, November 06, 2007

ஜெயலலிதாவுக்கு இன்னமும் வால் பிடிப்பது குறித்து உலகத் தமிழருக்கு வைகோ பதில் கூற வேண்டும்: "உதயன்" நாளேடு

[செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2007]

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்ததை கொச்சைப்படுத்தும் ஜெயலலிதாவுக்கு இன்னமும் வால் பிடிப்பது ஏன் என்று உலகத் தமிழர் சமூகத்துக்கு மறுலமர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ பதில் தருவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும் என்று "உதயன்" நாளேடு வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (06.11.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்:

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறாவாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல்லப்பட்டு விட்டார்.

இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமிழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பட்டி-தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம்பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது.

இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர் விரோத சக்திகள் அந்த எழுச்சியை அடக்கவும், அதன் ஊடாகத் தமக்கு அரசியல் லாபம் தேடவும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துவிட்டன.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ. ராமஸ்வாமி என்ற ஒரு சிறு கூட்டம், தமிழகத்தில் மீண்டும் கிளர்ந்துள்ள ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முளையிலேயே கிள்ளும் சதித் திட்டத்துடன் திரும்பவும் ஒன்று சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டன.

வழமைபோல வட இந்திய ஆரியப் போக்குப் பின்புல ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதி, இந்த எதிர்ப்பைப் பூதாகரப்படுத்திக் காட்டவும் முழு மூச்சில் தயாராகி நிற்கின்றன.

தமிழ்ச்செல்வனின் குரூரப் படுகொலையால் உலகத் தமிழினமே அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கின்றது.

தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் செய்தி ஒன்றைத் தமக்கேயுரிய கவிதைப் பாணியில் தமிழக முதல்வர் வெளியிட்டு, இவ்விடயத்தில் உலகத் தமிழினத்தின் உணர்வலைகளோடு தாமும் சேர்ந்து நிற்கின்றார் என்பதை உலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்டார்.

அவ்வளவுதான். இந்த இரங்கல் செய்தியை ஒரு பெரிய விவகாரமாக்கி, ஊதிப் பெருப்பித்து, அதன்மூலம் அரசியல் குழப்பத்தை உருவாக்கத் தயாராகிவிட்டது "ஜெயலலிதா அன்ட் கொம்பனி".

ஈழத் தமிழரின் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் குறுகிய அரசியல் லாபம் தேடும் அற்பத்தனத்தில் அந்த அணி குதித்திருக்கின்றது.

இந்த இரங்கல் செய்தி வெளிப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும் இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசுவாசமாகச் செயற்படுவதற்கு உறுதியளித்து, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம், தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் ஆட்சியிலிருந்து அகற்றப்படவேண்டிய தகுதி இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்றும் கூக்குரலிட்டு, ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளது ஜெயலலிதா அணி.

"உலக நாடுகள் அனைத்தும் சமாதான முயற்சிகளுக்காக அழைத்துப் பேசியது தமிழ்ச்செல்வனைத்தான். பச்சைத் தமிழரான தமிழக முதல்வர் மனித நேயத்தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாகக் குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்கும் அவருக்கு உரிமை இல்லையா?" என்று ஜெயலலிதா அணியைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கின்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

"தானாடாவிட்டாலும் தசையாடும்" என்பார்கள். அப்படியேதான் கலைஞர் கருணாநிதியின் மனமும், இந்தக் கொடூரக் கொலையால் கொஞ்சம் அசைந்து கொடுத்திருக்கின்றது.அந்த உணர்வைக் கொச்சைப்படுத்துகின்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஜெயலலிதா திரிகரணத்தாலும் அரக்கியாகிவிட்டாரா?

    ReplyDelete
  2. பார்ப்பன சக்திகள் அவர்களுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழன் தான் இன்னும் மயக்கத்திலேயே இருக்கிறான்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.