எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு, ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் வாரமிருமுறை இதழான ஜூனியர் விகடனுக்கு மின்னஞ்சல் மூலம் பா.நடேசன் அளித்துள்ள பேட்டி:
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பா.நடேசன். ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் நீண்டகால அனுபவம் பெற்றவரான நடேசன், புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்துக்கு வந்திருக்கும் நடேசன், சர்வதேச அளவில் புலிகளுக்காக எப்படி பங்காற்றப் போகிறார் என்கிற கேள்வியோடு அவரை மெயில் மூலமாகப் பேட்டி எடுத்தோம்.
கேள்வி: தமிழ்ச்செல்வனின் படுகொலை, புலிகள் அமைப்பிலும் ஈழ மக்களிடமும் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
பதில்: தமிழ்ச்செல்வன், எமது போராளி அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஒரு படைத்தளபதியாக மட்டுமின்றி, அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் இராஜதந்திரியாகவும் செயல்பட்டார். அவரது இழப்பு, எமக்குப் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மக்களை எவ்வளவு நேசித்தார் என்பதும் மக்கள் அவரை எவ்வளவு நேசித்தார்கள் என்பதும் உலகெங்கும் அவருக்காக நடந்த அஞ்சலிக் கூட்டங்களில் வெளிப்பட்டது. ஈழத்தில் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டபோது, மேலே இலங்கை இராணுவ விமானங்கள் பறந்து அச்சுறுத்தின. ஆனால், அதற்கு அஞ்சாமல் தமிழீழ மக்கள் அந்தத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். தமிழ்ச்செல்வனின் கொலை, எங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
கேள்வி: அநுராதபுரம் இராணுவத் தளம் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட எழுநூறு கோடி ரூபாய் இழப்பால் விளைந்த கோபம்தான் தமிழ்ச்செல்வன் படுகொலைக்குக் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: இலங்கை அரசு தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பின் ஒருபகுதியே தமிழ்ச்செல்வன் கொலை. அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் இப்படிப்பட்ட கொலைகளை சிங்கள அரசு செய்யும். அதன் இனவெறி வரலாற்றில், இதற்கு பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
கேள்வி: நோர்வே தூதுவரை அழைத்து, தமிழ்ச்செல்வன் கொலைக்காகப் புலிகளின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். சர்வதேச சமூகம் இந்தக் கொலையை எப்படி எடுத்துக்கொள்கிறது?
பதில்: போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரையே அழைத்து, இலங்கை அரசின் இந்தப் படுகொலை குறித்த எங்கள் விளக்கத்தையும் கண்டனத்தையும் நோர்வே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்தப் படுகொலைக்கு என்னவிதமான நடவடிக்கையை இலங்கை அரசின் மீது எடுக்கப்போகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம் என்றும் நாங்கள் கேட்டிருக்கிறோம். பல நாடுகளுக்கும் இலங்கை அரசின் தமிழர் விரோத பாசிச போக்கு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களுக்கான பல கட்சிக் குழுவினரும் இந்தக் கொலையைப் பகிரங்கமாகக் கண்டித்திருக்கிறார்கள். மற்ற பல நாடுகளும் கண்டிக்கும் என நம்புகிறேன்.
கேள்வி: தமிழகத்தில் உங்களை ஆதரிப்பவர்கள் பல குழுக்களாக சிதைந்து கிடக்கிறார்களே?
பதில்: தமிழகத்தில் உள்ள பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் எங்களை ஆதரிக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் ஆறரைக் கோடி மக்களும் எமது ஈழ விடுதலைப் போரின்பால் அக்கறையும் ஆதரவும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஈழத்தமிழர் போராட்டம் என வரும்போது, உணர்வால் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.
கேள்வி: தமிழ்ச்செல்வனுக்குத் தமிழக முதல்வர் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக் கவிதை ஈழத் தமிழரிடம் வரவேற்பையும் தமிழகத்தில் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறதே?
பதில்: தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் கவிதை வரிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. எங்கள் காயங்களுக்குக் களிம்பு தடவுவதாக இருந்த அந்தக் கவிதைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். மற்றபடி இந்த இரங்கல் கவிதையை முன்வைத்து எழுப்பப்படும் சர்ச்சைகள் பற்றி நான் கூற எதுவும் இல்லை.
கேள்வி: தமிழகத்திடமும் இந்தியாவிடமும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு, ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
கேள்வி: புலித் தலைவர்களின் வசிப்பிடங்கள் எங்களுக்குத் தெரியும்... அவர்களை ஒவ்வொருவராகக் கொல்வோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?
பதில்: எமது முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போரில் இவ்வாறான அறிவிப்புகளைப் பலமுறை செய்திருக்கிறார்கள். எங்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரையும் கொல்லும் வல்லமை தனக்கிருப்பதாக இலங்கை அரசு சொல்வது பகல் கனவுதான்.
கேள்வி: நான்கு வருட சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் இரு தரப்பிலும் ஏராளமான உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகவும், அப்படி ஊடுருவிய உளவாளிதான் தமிழ்ச்செல்வனின் துல்லியமான கொலைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறதே?
பதில்: தமிழ்ச்செல்வனின் படுகொலை அப்படி நடந்ததாக நாங்கள் கருதவில்லை.
கேள்வி: அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச அளவில் உங்கள் அமைப்புக்காகப் பணியாற்ற சரியான ஒரு பிரதிநிதி இல்லை என்று சொல்லப்படுகிறதே?
பதில்: எமது தேசிய தலைவர் ஆழமான திட்டங்கள், சிந்தனைகளின் அடிப்படையிலேயே பல்வேறு துறைகளிலும் பொறுப்பாளர்களை வளர்த்து வருகிறார். அவ்வாறான ஒரு கட்டமைப்பின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். போராட்டம் என்றால் இழப்புகளையும் எதிர்பார்த்துத்தான் நாங்கள் இருக்கிறோம். எத்தனை இழப்புகள், இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை நிரப்பத் தயார் நிலையில்தான் எங்கள் அமைப்பு எங்கள் தேசிய நாயகனின் தலைமையில் அணிவகுத்து நிற்கிறது. துயர் சூழ்ந்த வேளைகளில் அதை வெற்றியின் படிக்கட்டுகளாக நாங்கள் மாற்றிக்காட்டியிருக்கிறோம். இனியும் அது தொடரும்.. என்று பா. நடேசன் தெரிவித்துள்ளர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.