Friday, November 30, 2007
மலேசியத் தமிழர்களுக்கான தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை நிராகரிப்பு: இந்திய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]
மலேசியாவில் சம உரிமை கோரி போராடும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நிராகரித்தமையால் இந்திய நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கார்வேந்தன் மலேசியத் தமிழர்கள் குறித்த பிரச்சினையை கிளப்பினார்.
அவர் பேசுகையில், மலேசியாவில் வசிக்கும் 15 லட்சம் பூர்வீக இந்தியர்களில் 85 விழுக்காட்டுப் பேர் தமிழர்கள் என்றும், இந்தியர்கள் மீது சமீபத்தில் அங்கு நடந்த தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு ஆதரவாக மற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசினார்கள். மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் அங்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
அப்போது சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி குறுக்கிட்டு, நமது நட்பு நாடான மலேசியாவுடன் உறவைப் பாதிக்கும் வகையில் எதுவும் பேச வேண்டாம் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதோடு, மலேசியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது பற்றி சில உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களை சபை குறிப்பில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார்.
இந்தியா மிகவும் பொறுப்புள்ள ஒரு ஜனநாயக நாடு என்பதால் மற்ற நாட்டு விவகாரங்களை இதுபோன்று விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழக உறுப்பினர்கள், இந்த பிரச்சினை குறித்து வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி சபையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
மலேசியாவில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டதாக பாரதீய ஜனதா உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
அப்போது அமைச்சர் பிரணாப் முகர்ஜி சபையில் இருந்தார்.
தமிழக உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பிரணாப் முகர்ஜி சபையில் இருப்பதே போதுமானது என்றும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவருக்கு தான் உத்தரவிட முடியாது என்றும் இதுபற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
தமிழக உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
மேலும் அமளி நீடித்ததால் சபையை 30 நிமிடம் அவர் ஒத்தி வைத்தார்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் கேள்வி நேரம் முடிந்ததும் மலேசியத் தமிழர்கள் மீதான தாக்குதல் பிரச்சினை எழுப்பப்பட்டது.
இந்த பிரச்சினையை எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் சிவா, மலேசியாவில் சம உரிமை கோரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்த நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றும் அங்குள்ள இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தூதரக மட்டத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
மலேசியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பெரிதும் கவலை அளிப்பதாக கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, மலேசிய மக்கள் தொகையில் 8 விழுகாட்டுப் பேர் பூர்வீக இந்தியர்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் மலேசியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்து இருப்பதால் அங்குள்ள தமிழர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசாமி பேசுகையில், விசாரணை இன்றி 240 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தூதரக மட்டத்தில் உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அ.தி.மு.க. உறுப்பினர் கே.மலைச்சாமி பேசுகையில், மலேசியாவில் பூர்வீக இந்தியர்களுக்கு எதிராக வன்முறை ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கு 64 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது என்று கூறிய அவர், அங்குள்ள இந்தியர்களை பாதுகாக்க கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதற்கு மேல் சபை துணைத் தலைவர் கே.ரகுமான்கான், உறுப்பினர்களின் உணர்வுகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தான் கேட்டுக் கொள்ள இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை பிரதி அமைச்சர் மந்திரி சுரேஸ் பச்சூரி கூறினார்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், மலேசியாவில் வசிக்கும் பூர்வீக இந்தியர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தியதாகவும் கூறினார்.
மலேசியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்து இருப்பதால் மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு அங்கு வசிக்கும் பூர்வீக இந்தியர்களின் நலனை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.