[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007]
இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான விடுதலை கேள்வி எழுப்பியுள்ளது.
விடுதலை நாளேட்டின் முதல் பக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள செய்தி:
காந்தியைக் கொன்ற, மராத்திய சித்பவன் பார்ப்பனன் நாதுராம் விநாயக் கோட்சேயின் நினைவு நாளை, பிரகாசமான ஒளியுடன் கூடிய அகண்ட பாரதத்தின் நடுவில் அவனுடைய படத்தைப் பொருத்தி அனுசரித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே, பிரார்த்தனைக்குச் சென்று கொண்டிருந்த காந்தியாரை, 1948 ஜனவரி 30 இல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். அவன் 1949 நவம்பர் 15 இல் தூக்கில் இடப்பட்டான். தூக்கில் இடுவதற்கு முன்பு, அவன் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து இருந்தான்.
அதாவது, பாகிஸ்தான் உருவானதை நீக்கி, பிரிட்டிஷ் ஆட்சியின்பொழுது இருந்த அகலமான இந்தியா (அகண்ட பாரதம்) மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்ட பின்பு (இப்பொழுது பாகிஸ்தானில் ஓடிக்கொண்டிருக் கும்) சிந்து நதி இந்தியாவிற்கு வந்துவிடும். அந்த நிலையில் தன்னுடைய சாம்பலை (அஸ்தியை) சிந்து நதியில் கரைக்க வேண்டும் என்பது கோட்சே தெரிவித்திருந்த விருப்பம் ஆகும். கோட்சேயின் இந்தக் கனவை (விருப்பத்தை) அவன் சந்ததியினரும், நண்பர்களும் நிறைவேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 இல் அவர்கள் ஒன்று சேர்ந்து கோட்சேயின் நினைவு நாளை அனுசரிக்கிறார்கள். இந்த ஆண்டும் புதன்கிழமையன்று (15 ஆம் திகதி) அதே போன்று கூடினார்கள்.
கோட்சேயின் உடன் பிறந்தார் மகள் ஹிமானி சாவர்கர், உடன் பிறந்தார் மகன் நானா சாகேப் கோட்சே மற்றும் அவர்களுடைய பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆகியோர் ஒன்றுகூடி, பிரிக்கப்படாத ஏக இந்தியாவை உருவாக்க உழைப்போம் என்று, எப்பொழுதும் போல் இந்த ஆண்டும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அப்படிக் கூடியவர்கள் 50 பேர்கள் ஆவர். புனெயில் சிவாஜி நகர் பகுதியில், குறுகிய ஒரு தெருவை ஒட்டிய காலி இடத்தில், கோட்சேயின் நிழல் படம் பொருத்தப்பட்ட, அகண்ட பாரதத்தின் ஒளி நிரம்பிய வரைபடத்தின் முன்பு உறுதிமொழியை மேற்கொண்டனர். அந்த வரைபடத்தில், கோட்சேயின் சாம்பல் கரைக்கப்பட வேண்டிய சிந்து நதி ஓடுவது போன்று, சிகப்பு வண்ணத்தில் விளக்குகள் எரிந்தன. சாம்பல் உள்ள குடுவை இன்னும் பாதுகாக்கப்படுகிறது.
இது ஒன்றும் நிறைவேற்ற முடியாத ஒன்று அல்ல. யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டைப் பெறுவார்கள் என யாராவது எண்ணினார்களா? அகண்ட பாரதம் தவிர்க்க முடியாதது. அதை நிறுவவேண்டும் என நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகிறோம் என ஹிமானி சாவர்கர் கூறினார்.
கோட்சேயின் ஒன்றுவிட்ட கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும், அவன் இறுதியாக நீதிமன்றத்தில் ஆற்றிய உரையை உரத்த குரலில் படித்தனர். அதன்மூலம் கோட்சேயின் கனவு இன்னும் உயிருடன் தொடர்கிறது என வெளிப்படுத்தினர். அந்த உரையைப் படித்த இருவரின் வயது 11, ஒரு குழந்தையின் வயது ஐந்து.
நாதுராம் விநாயக் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சேயின் மனைவியாகிய சிந்து தாய் கோட்சே இறந்தபொழுது, முதல் சந்ததி முடிவுக்கு வந்தது. ஆனால், நாதுராம் விநாயக் கோட்சேயின் இறுதி விருப்பம் நிறைவேறும் வரை, உயிருடன் இருக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் ஓய்வதில்லை என நானா சாகேப் கோட்சே கூறினார்.
நாதுராம், காந்தியாரைச் சுயநலத்திற்காகக் கொல்லவில்லை. இந்தியப் பிரிவினையை அவரால் சகிக்க முடியவில்லை, ஆகையால், கொன்றார். அவருடைய இறுதிப் பேச்சைப் படிக்குமாறு நாங்கள் வற்புறுத்துகிறோம் என அச்சிறு கூட்டத்தினர் கூறுகிறார்கள்.
விடுதலைப் புலிகள் வன்முறையாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்று கூப்பாடு போடும் தேசப் பக்தர்கள், தேசப்பிதா என்று போற்றப்பட்ட காந்தியாரைக் கொன்றவர்களுக்கு விழா எடுக்கிறார்களே, இதற்குப் பதில் என்ன? நடவடிக்கைதான் என்ன? என்று அந்நாளேட்டில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.