Saturday, October 20, 2007
மட்டக்களப்பில் எமது சம்மதமின்றி எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்ற முடியாது: த.தே.கூ. எச்சரிக்கை
[சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2007]
மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதமின்றி நிறைவேற்ற முடியாது என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பா.அரியநேத்திரன், கனகசபை, செல்வி கே.தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் ஒன்றிணைந்து விடுத்துள்ள அறிக்கை:
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக நலன் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னமோ, அதிகாரமோ இன்றி எந்தவொரு கூட்டங்களிலும் எந்தத்தரப்பினருடனும் எடுக்கப்படும் தீர்மானங்கள் இரத்துச் செய்யப்படும் என்பதுடன் அந்த தீர்மானங்களுக்கு கடுமையான கண்டனத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறிலங்கா அரசாங்கம் "கிழக்கின் உதயம்" என்னும் பெயரில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றது.
இந்த ஏமாற்று நாடகத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். "கிழக்கில் அபிவிருத்தி" என்ற போர்வையில் அனைத்துலக உதவிகளைப் பெறுவதற்கு போடப்படும் திட்டங்களே இவையாகும். இந்த ஏமாற்று வித்தைகளுக்கு எமது மக்கள் சோடை போகின்றவர்கள் அல்லர்.
கடந்த 16 ஆம் நாள் அமைச்சர் கரு ஜயசூர்ய தலைமையில் அபிவிருத்தித் திட்டங்களை ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றுது. இந்தக் கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னமில்லாமல் நடைபெற்ற கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டது மாத்திரமின்றி அமைச்சர் அமீர் அலியின் பின்னணியில் தமிழ்ப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய குடியேற்றத்தை நியாயப்படுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பல்சமய ஒன்றியத்தின் உதவியுடன் அரசியல் தலையீடு இன்றி அத்துமீறிய குடியேற்றத்தை ஏற்றுக்கொண்டு தீர்வு காணப்பட வேண்டுமென அமீர் அலி முத்த தீர்மானம் பல்சமய ஒன்றியம் உட்பட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் மாவட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட முடியாது என்பதையும் கூட்டமைப்பு இடித்துரைக்கின்றது. அது மாத்திரமின்றி அமீர் அலி அரசியல் பின்னணியில் திட்டமிட்ட முறையில் தமிழ்ப் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்து விட்டு தற்போது அதனை நியாயப்படுத்தும் வகையில் பல்சமய ஒன்றியத்தின் தயவை நாடியுள்ளதன் மூலம் தனது பிழையை மறைக்கப்பார்க்கின்றார். அது மாத்திரமின்றி திட்டமிட்ட குடியேற்றத்தை பல்சமய ஒன்றியத்தின் உதவியுடன் நியாயப்படுத்தப் பார்க்கின்றார்.
ஏற்கனவே இந்த திட்டமிட்ட குடியேற்றம் தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வருவதுடன் இந்த திட்டமிட்ட குடியேற்றம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.