Thursday, October 04, 2007

ஐஸ்லாந்துப் பிரதிநிதி சந்திப்பு எதிரொலி: புலிகளைச் சந்திக்க கண்காணிப்புக்குழுவுக்கு திடீர் தடை.!!

[வியாழக்கிழமை, 4 ஒக்ரொபர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சந்திக்க கண்காணிப்புக் குழு அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். வடபகுதி கண்காணிப்புக் குழுவின் இரண்டு அதிகாரிகள், கொழும்பிலிருந்து வந்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இரண்டு தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் கிளிநொச்சிக்குச் செல்ல ஓமந்தை நுழைவு சோதனை நிலையத்தை சென்றடைந்தனர். ஆனால் அவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் நுழைய அனுமதி மறுத்துவிட்டனர். கொழும்பிலிருந்து வந்த உத்தரவுக்கமைய தாங்கள் தடுப்பதாக கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா இராணுவத்தினர் கூறியுள்ளனர். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தடுக்கப்பட்டமையை தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் உறுதி செய்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி ப்ஜார்னி வெஸ்ட்மான் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினார். ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தாங்கள் ஐஸ்லாந்து நாட்டுப் பிரதிநிதியை அழைக்காத நிலையில் அவர் மாற்று வழிகளினூடே கிளிநொச்சி சென்றிருக்கிறார் என்று தமது அதிர்ச்சியை வெளியிட்டது. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் அனுசரணையுடன் சு.ப.தமிழ்ச்செல்வனை ஐஸ்லாந்து பிரதிநிதி சந்தித்தமையால் ஆத்திரமடைந்த சிறிலங்கா அரசாங்கம், புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் நுழைவதற்கு கண்காணிப்புக் குழுவினருக்கு திடீர் தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.