Sunday, October 28, 2007
அனுராதபுரம் வான் படைத்தள தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி: "த ஐலன்ட்"
[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] [அ.அருணாசலம்]
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஏடான "த ஐலன்ட்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த "த ஐலன்ட்" வார ஏட்டில் வெளிவந்த முக்கிய விபரங்கள்:
கடந்த வாரம் அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் வான் படையினர் சந்தித்த மிகப் பெரும் இழப்பாகும்.
8 வானூர்திகள் அழிந்து போனதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் அது உண்மையானது அல்ல. அழிக்கப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை 17 எனவும், ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க வான் படைத்தளம் மீதான தாக்குதலில் அழிக்கப்பட்டதனை விட அனுராதபுரத்தில் அழிக்கப்பட்டவை அதிகம். அன்று இரவு விடுதலைப் புலிகள் ஹிங்குரான்கொட வான் படைத்தளத்தை தாக்கபோவதாகவே சந்தேகிக்கப்பட்டது.
எனவே வான் படையினர் அத்தளத்தில் இருந்த எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகளை ஏனைய தளங்களுக்கு மாற்றியிருந்தனர். பல எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் அனுராதபுரம் தளத்திற்கும் அனுப்பப்பட்டன. அதனால் அனுராதபுரம் தளத்தில் உள்ள வானூர்திகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
ஹிங்குரான்கொட தளத்தில் இருந்து உலங்குவானூர்திகளை இடம்மாற்றியது நல்லதொரு நடவடிக்கை. ஏனெனில் தளம் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது. எனவே அவற்றை அங்கு வைத்திருப்பது ஆபத்தானது. ஆனால் அவற்றை அனுராதபுரம் தளத்திற்கு மாற்றியதும், அத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியது படையினரின் புலனாய்வுத்துறைக்கும், அனுராதபுரம் தளத்தின் அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட தோல்விகளாகும்.
உலங்குவானூர்திகளை வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்து தூர வைத்திருப்பதே நல்லது. ஆனால் கட்டுநாயக்க, இரத்மலானை, சிகிரியா, வவுனியா, கற்பிட்டி ஆகிய தளங்களுடன் ஒப்பிடும் போது அனுராதபுரம் தளம் மிகவும் பாதுகாப்பானது. புராதன நகரமான இது மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நகரமும் ஆகும். இங்கு படையினரினதும், காவல்துறையினரினதும் பிரசன்னம் அதிகம். அது பாதுகாப்பான பிரதேசமாக இருத்தல் வேண்டும் ஆனால் அது அப்படி இருக்கவில்லை.
இத்தாக்குதலில் பிரி-6 ரக 5 பயிற்சி வானூர்திகளும், கே-8 ரக ஜெற் - 01 பயிற்சி வானூர்தியும் அழிக்கப்பட்டது வான் படையினரின் பயிற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வான் படையினரின் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொகுதி கடுமையான சேதத்தை சந்தித்ததும் படையினருக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.
எம்ஐ-24 ரக - 03 உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டதுடன், ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதல்களின் போது தரைப் படையினருக்கு மிகவும் அருகாமையில் இருந்து தாக்குதல் உதவிகளை இது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இவற்றின் இழப்பு எதிர்காலத்தில் தரைப் படையினருக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளின் அச்சத்தினால் தற்போது நடைபெற்று வரும் 4 ஆம் ஈழப்போரில் இவற்றின் பயன்பாடுகள் குறைவானது. தற்போதைய தரைத்தாக்குதல்களுக்கு அதிவேக தாக்குதல் வானூர்திகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை ஏவுகணைகளை விட வேகமானவை.
ஆளில்லாத உளவு வானூர்திகள் மூன்று இழக்கப்பட்டதும் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பாதுகாப்பு அமைச்சும் வான் படையினரும் இழந்த வானூர்திகளை மீள கொள்வனவு செய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதற்கு பல மாதங்கள் செல்லலாம்.
இதனிடையே பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தியின் இழப்பு வன்னியில் படையினரின் நடவடிக்கையில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். இந்த வானூர்தி 4 ஆம் கட்ட ஈழப்போரில் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வந்தது. அதிக உயரத்தில் பறக்கும் இந்த வானூர்தி வான் படையினரின் குண்டு வீச்சுக்களை நெறிப்படுத்தி வந்தது.
அமெரிக்காவின் மிக நவீன உளவு வானூர்தியான அவக்ஸ் (AWACS) வானுர்தியில் பயன்படுத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளை ஒத்த கருவிகளே இந்த வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் துல்லியமான குண்டு வீச்சுக்களை மேற்கொள்ள முடியும்.
குண்டுவீச்சு வானூர்திகளின் பாதுகாப்பிலும் இந்த வானூர்தி முக்கிய பங்காற்றி வந்தது. பீச்கிராஃப் வானூர்தியில் இருந்து வழங்கப்படும் வானொலி கட்டளைகள் மூலமே அதிவேக தாக்குதல் வானூர்திகள் குண்டுவீச்சை நடத்தி வந்தன. முன்னர் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் தரைப்படையினரால் வழங்கப்படும் தகவல்களை கொண்டு வானோடிகளே தமக்குரிய இலக்குகளை கண்டறிந்து தாக்கி வந்தனர்.
பீச்கிராஃப் வானூர்தி மிகவும் உயரத்தில் பறப்பதனால் அதனை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்துவது கடினமானது. அது மிகவும் நவீன கண்காணிப்பு சாதனங்களையும் உடையது. இதன் இழப்பு வான் படையினரின் நடவடிக்கைகளில் பல வாரங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
எனினும் மேலதிக பீச்கிராஃப் வானூர்திகளை கொள்வனவு செய்யும் வரை வான் படைத் தலைமை அதற்கான மாற்றீட்டு வழிகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.
படைத்தளத்தின் அதிகாரிகளின் கவனக்குறைவே விடுதலைப் புலிகள் இலகுவாக தளத்திற்குள் செல்ல அனுகூலமாக அமைந்திருந்தது. அனுராதபுரம் வான் படைத்தளமானது 100 வீத இராணுவத் தளமாக இருந்தது. அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்கு படையினருக்கு எந்தவித தடைகளும் இருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் தளத்தின் மையத்தில் இருந்த வானூர்திகளின் தரிப்பிடங்களை இலகுவாக அடைந்ததும் வான்படை அதிகாரிகளின் செயற்திறன் அற்ற தன்மையையே காட்டுகின்றது. தாக்குதலாளிகள் உள்ளிருந்தும் தகவல்களை பெற்றிருக்கலாம். அது தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வான் புலிகளின் தாக்குதல்களை விட கரும்புலிகளின் தாக்குதலே கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும் ராடார்களினால் முன்னர் அவதானிக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளன. அவற்றை அனுராதபுரம் தளத்தில் உள்ள வானூர்திகள் வழிமறித்து தாக்கவில்லை என்பது தொடர்பாக கேள்விகளை எழுப்ப முடியாது. ஆனால் வவுனியா, கற்பிட்டி, ஹிங்குரான்கொட, சிகிரியா வான் படைத்தளங்கள் இரணைமடுவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் சில நிமிட வான் பயணத்தூரத்திலேயே இருந்தன.
வவுனியாவில் இருந்து சென்ற பெல்-212 ரக உலங்குவானூர்தியை சுட்டு வீழ்தியது, வான் படை வானோடிகளுக்கும், வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்ட தரைப் படையினருக்கும் இடையிலான இணைந்த நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை காட்டுகின்றது. இதே போன்றதொரு சம்பவம் உலகக்கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டி நடைபெற்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பை தாக்கிய போதும் ஏற்பட்டிருந்தது. அன்று தரைப் படையினர் வானை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதனால் வான் படையின் தாக்குதல் உலங்குவானூர்திகளால் அந்த வான் பிரதேசத்திற்குள் நுழைய முடியவில்லை.
விடுதலைப் புலிகளின் உடல்களை உடைகளை களைந்து காட்சிக்கு வைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச விசாரணைக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனவே பேச்சாளரின் பொய் அம்பலமாகியுள்ளது.
எனவே இராணுவப் பேச்சாளரை நீக்கிவிட்டு புதியவரை நியமிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் சிந்திப்பது புத்திசாலித்தனமானது. ஊடகத்துறையினருடனான அவரின் மோசமான நடவடிக்கைகள் படையினரினதும், நாட்டினதும் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் மீதான அவரின் குற்றச்சாட்டுக்கள் வெட்கக்கேடானவை. இதன் மூலம் படையினரின் பெயரை உதய நாணயக்கார களங்கப்படுத்தி உள்ளார். படைத்துறை பேச்சாளர்களுக்கு ஊடகவியலாளர்களைக் கையாள்வதில் திறமை வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.